ராஜஸ்தான் தேர்தல்: தலித்துகளின் ஆதரவை எதிர்நோக்கும் பாஜக, காங்கிரஸ்

ராஜஸ்தான் தேர்தல்: தலித்துகள் யார் பக்கம்? படத்தின் காப்புரிமை Getty Images

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்கட்சி காங்கிரஸ் தலைவர்களும் இந்தத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியும், ராஜஸ்தான் மாநில தேர்தல் களத்தில் 197 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற கதவடைப்பு போராட்டத்திற்கு பிறகு தங்கள் அமைப்பின் நிலை மேம்பட்டிருப்பதாக தலித் அமைப்பு கூறுகிறது. அரசியல் கட்சிகளிடம் தலித் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி கொண்டிருந்த போதிலும் வேறு வழி எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என அரசியல் கட்சிகள் கருதும் நிலையில், அவர்களின் கவனம் எல்லாம் மாநிலத்தில் 17 சதவிகித வாக்குகளை கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை நோக்கி குவிந்திருக்கிறது.

தலித் சமூகத்தினர் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்பது மாநிலத்தை ஆளும் பாஜகவின் நம்பிக்கை என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் அனைத்தும் தங்களுக்கே என்று நம்புகிறது காங்கிரஸ்.

ஜெய்பூரில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த கிர்ஜேஷ், தலித் பெண்களுக்காக பணிபுரிபவர். பாஜக தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் இந்த சமூகத்தினர் அதற்கு வாக்களித்ததாக கிர்ஜேஷ் கூறினார்.

''பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சுரண்டல்களும் முடிவுக்கு வரும் என்று நினைத்தோம், எங்கள் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், விவசாயிகள் மகிழ்வார்கள் என்று நம்பினோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு அனுபவம் எங்கள் நம்பிக்கைகளை பொய்யாக்கிவிட்டது'' என்று கூறுகிறார் கிர்ஜேஷ்.

படத்தின் காப்புரிமை TWITTER/@BJP4RAJASTHAN

கடந்த சட்டமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 தொகுதிகளில் 32இல் பாஜக வேட்பாளர்கள் வெற்றியடைந்தனர். இது தலித் சமுதாயத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பதை காட்டியது. ஆனால் பாஜகவின் இந்த செல்வாக்கு நீடிக்குமா?

'தலித்துகள் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள்'

"காங்கிரஸ் கட்சியிடமும் தலித்துகளுக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனால், பா.ஜ.கவை தோற்கடிக்கும் அளவுக்கு சக்தியுள்ள வேட்பாளரை நிறுத்துவது சவாலான ஒன்று. அடிமட்டத்தில் இருக்கும் யாரும் தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்புவதில்லை. நகரங்களில் இருந்து கொண்டு தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் தலித்துகள், வாக்குகள் வீணாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்" என்கிறார் தலித் உரிமை ஆர்வலர் பம்வர் மெஹ்வம்ஷி.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜக, தங்களது செயற்பாடுகளையும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் முன்வைக்கிறது. அதன் அடிப்படையில் தலித் சமூகத்தினர் பாஜவுக்கு இணக்கமாக இருப்பதாக கூறுகிறது.

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதியிடம் பிபிசி கண்ட நேர்காணலில் அவர் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

"மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு தலித் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளது. அரசின் எந்தவொரு திட்டத்திலும் தலித் சமுதாயத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு சுகாதாரம் என அனைத்து விஷயங்களிலும் தலித்துகளுக்கு சிறப்பு கவனம் வழங்கப்படுகிறது.

தலித்துகளுக்காக நாங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்தோம். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் கடன் கோரி வங்கிகளை அணுகினால் அவர்களுக்கு கடன் வழங்குவதை கட்டாயமாக்கியிருந்தோம். இதனால் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்தன. எந்தவொரு விளம்பரமும் இன்றி எங்களுடைய வேலையை நாங்கள் செய்துவருகிறோம்"

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேடாவிடமும் பிபிசி நிருபர் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தையும் அறிந்தார். "தொடக்கத்தில் இருந்தே பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருவதால், அந்த சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள்" என்று உறுதியாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER/@PAWANKHERA
Image caption காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேடா

தலித்துகளிடையே குழப்பம்

தலித் உரிமைகள் மையத்தின் பி.எல். மீம்ரோட் கூறுகையில், ஏப்ரல் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கதவடைப்பு போராட்டத்திற்கு பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாறுதல்கள் நடைபெற்றன. எங்கள் இளைஞர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் சில இடங்களில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது, தலித்துகளின் பெயரில் பல அமைப்புகள் உருவாகியிருக்கிறது. அதோடு பல அமைப்புகள் தேர்தலிலும் களம் இறங்கியுள்ளன.

பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளிடமும் தலித்துகளுக்கு அதிருப்தி இருப்பதாக மீம்ரோட் கூறுகிறார். இருந்தாலும் காங்கிரஸ் ஓரளவு பரவாயில்லை என்ற கருத்தே பரவலாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், பல முக்கியமான விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் வாய் திறவாமல் இருப்பது தலித்துகளுக்கு அவர்களின் மீதான நம்பிக்கையை குறைப்பதாக அவர் கருதுகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பங்கு

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 200 தொகுதிகளில் 197 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அந்தக் கட்சியின் தேவிலாலிடம் பிபிசி செய்தியாளர் பேசினார்.

''காங்கிரஸார் பிரிந்து நிற்கிறார்கள், அவர்களிடம் ஒற்றுமையில்லை. ஆட்சியில் இருக்கும் பாஜகவோ ரோஹித் வெமுலா தற்கொலை போன்ற சம்பவங்களில் அவபெயரை சம்பாதித்திருக்கிறது. எனவே மக்கள் இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்'' என்று தேவிலால் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பகுஜன் சமாஜ் கட்சி 1993ஆம் ஆண்டு ராஜஸ்தான் தேர்தலில் யானை சின்னத்துடன் முதன்முறையாக களமிறங்கியது. 50 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு 0.56 சதவிகித வாக்குகளை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் வளர்ச்சியை கண்டது.

2008 தேர்தலில் 7% வாக்குகளுடன் ஆறு தொகுதிகளில் வென்றது பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால் அந்த ஆறு எம்.எல்.ஏக்களும் பிறகு கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதன் விளைவாக 2013 தேர்தலில் வாக்கு சதவிகிதம் 3.37 என்று குறைய, வெற்றியும் மூன்று தொகுதிகள் என்ற நிலையில் சுருங்கிவிட்டது.

அல்வர் மாவட்டம் பிவாடி நகரில் வசிக்கும் தலித் செயற்பாட்டாளர் ஓம்பிரகாசின் கருத்துப்படி, தற்போது தலித்துகள் பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் சாயவில்லை. ஒரு காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் பணிபுரிந்த ஓம்பிரகாஷ் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார்.

ஹோலி பண்டிகையின்போது, பிவாடியில் இரு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டபோது, முக்கியமான கட்சிகள் எதுவும் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று ஓம்பிரகாஷ் கூறுகிறார்.

இந்த தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, தலித் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் வேறு சில கட்சிகளும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இந்திய அம்பேத்கர் கட்சி (Ambedkarite Party of India) முப்பதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

ராஜஸ்தானில், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜகவுக்கு பெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லை, வாக்குகள் பிரிந்துவிடும் என்று இந்திய அம்பேத்கர் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தசரத் ஹினுனியா கூறுகிறார்.

வாக்குகள் பிரிவதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்று கூறும் தசரத் ஹினுனியா, பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டதாக கருதுகிறார். பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் மீது மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிகை நம்பிக்கையில் முக்கியமான விஷயத்தில் காங்கிரஸ் கோட்டை விடுவது சரியானதல்ல என்கிறார் தசரத்.

ராஜஸ்தான் மாநில தலித்துகளுக்கு பெரிய அளவிலான கொடுமைகள் நடந்தாலும், காங்கிரஸ் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறுகிறார். இந்த வலி, தலித்துகளின் இதயத்தின் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் நிலையில் காங்கிரஸ் தப்பு கணக்கு போடுகிறது என்கிறார் தசரத்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/@DR.DASHARATHKUMARHINUNIA
Image caption இந்திய அம்பேத்கர் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தசரத் ஹினுனியா

தலித்துகள் மீதான கொடுமைகளில் மெளனம்

கடந்த சில ஆண்டுஅக்ளாக ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன. தலித் மணமகன்கள், குதிரையில் உட்காரக்கூடாது என்று இறக்கி விடப்பட்ட பல சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

"டாங்காவாஸில் ஆறு தலித்துகள் இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் கரோலி மாவட்டத்தில் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் பாரோசி லால் ஜாதவ் வீட்டில் கும்பலாக நுழைந்தவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திலும் காங்கிரஸ் எதுவுமெ பேசாமல் இருந்துவிட்டது. தலித்துகள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள், ஆனால் மனக்குறையுடனே அந்த வாக்குகள் வழங்கப்படும்.

தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் கட்சிகள் அனைத்துமே பெரிய அளவிலான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் வாக்களர்களுக்கு வாரி வழங்குகின்றன. ஆனால் இந்த தேர்தல் காலத்தில் வழங்கப்படும் உறுதிமொழிகள் எப்போது நிதர்சனத்தில் செயல்படுத்தப்படும் என்பதே தலித்துகளின் கேள்வியாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :