சபரிமலை: தொடை தெரிய ஆடை அணிந்த புகைப்படத்தால் கைதான ரெஹானா ஃபாத்திமா

ரெஹானா ஃபாத்திமா படத்தின் காப்புரிமை REHANA FATHIMA
Image caption ரெஹானா ஃபாத்திமா

சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரெஹானா ஃபாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சபரிமலையின் பிரதான சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து 2 மாதங்கள் ஆகியும், இன்னும் எந்த பெண்களும் இதுவரை உள்ளே சென்றதில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொச்சியில் ஃபாத்திமா அவர் பணிபுரியும் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக, அவரது தோழியும், செயற்பாட்டாளருமான ஆர்த்தி பிபிசியிடம் கூறினார். ஃபாத்திமாவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஃபாத்திமா மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் பணிபுரியும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த விசாரணை முடியும் வரை ஃபாத்திமாவை இடைநீக்கம் செய்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த வழியில், ரெஹானா ஃபாத்திமா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில் அவர் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் மற்றும் அவரது தொடை தெரியுமாறு அந்த புகைப்படம் இருந்தது.

அந்தப் புகைப்படம் உடல் பாகங்களை வெளிப்படுத்துமாறு இருந்ததாகவும், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன்னை கைது செய்ய போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மாதத் தொடக்கத்தில், கீழ் நீதிமன்றத்தில் ரெஹானா ஃபாத்திமா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

ரெஹானாவை ஜாமினில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

மத உணர்வுகளை புண்படுத்துவது ரெஹானாவின் நோக்கமல்ல என பிபிசியிடம் பேசிய அவரது தோழி ஆர்த்தி தெரிவித்தார்.

"சபரிமலைக்கு சட்டை அணியாமல் அல்லது தொடை தெரியுமாறு செல்லும் ஆண்கள் பற்றி என்ன சொல்வது. அது எப்படி ஒழுக்கக்கேடாக இருப்பதில்லை?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

தான் ஐய்யப்ப பக்தை என்று ரெஹானா கூறினாலும், அவர் ஒரு முஸ்லிம் என்பதினால், இந்த விஷயம் பழமைவாத இந்துக்குழுக்களை கோபப்படுத்தி உள்ளது.

அந்தப் புகைப்படத்தை ரெஹானா ஃபேஸ்புக்கில் பவிதிட்ட போது, அவரை தாக்கி பலர் கருத்து தெரிவித்ததாகவும், சிலர் பாலியல் தாக்குதல் மிரட்டல்களை விடுத்ததாகவும் ஆர்த்தி கூறுகிறார்.

"அவர்கள்தான் மத வேற்றுமையை உருவாக்குகிறார்கள். எந்த நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தாலும், அனைத்து ஆண்களும் அங்கு செல்ல அனுமதி இருக்கிறது. பெண்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பையடுத்து பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டாலும், சிலர் இன்னும் சிறையில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: