750 கிலோ வெங்காயம் 1064 ரூபாய்: விரக்தியில் பணத்தை மோதிக்கு அனுப்பிய விவசாயி

வெங்காயம் படத்தின் காப்புரிமை Portland Press Herald

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 சதவீதத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே வெங்காயத்தின் விலை குறைந்ததால் வேதனை அடைந்து பிரதமர் மோதியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

கடந்த வாரம் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஒரு கிலோ வெங்காயத்தை ரூ 1க்கு கொள்முதல் செய்ய அங்கு முன்வந்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ 1064 விவசாயி சஞ்சய்க்கு கிடைத்துள்ளது. அதாவது ஒரு கிலோ சுமார் ரூ1.40.

விலை குறைவாக கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த சஞ்சய் சாத்தே, அப்பணத்தை பிரதமர் மோதியின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார் .

படத்தின் காப்புரிமை Hindustan Times

நான்கு மாத வியர்வை சிந்திய உழைப்புக்கு கிடைத்த விலை தமக்கு வேதனை அளிப்பதாகவும் அதனால் இப்பணத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் இதற்கு மணி ஆர்டர் கமிஷனுக்கு ரூ.54 கூடுதலாக செலவு செய்துள்ளேன் என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஒபாமாவுடன் உரையாடுவதற்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளில் சஞ்சயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

கருப்பு பணம் தகவல் தர சுவிஸ் அரசு ஒப்புதல்

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த இரு நிறுவனங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள ஒரு அரசாணையில் மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிட்டட் நிறுவனம் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றில் முக்கிய பொறுப்பு வகிக்கும் சிலரின் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட விவரங்களை இந்திய அரசுக்கு அளிக்க நிர்வாக ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் சுவிஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்ட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழின் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

சபரிமலைக்கு ஆதரவு: 10 லட்சம் பெண்கள் மனித சங்கிலி

சபரிமலை விவகாரத்தில் பாஜ போராட்டத்துக்கு பதிலடியாக சபரிமலையில் இளம்பெண்கள் செல்வதற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 1 முதல் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 10 லட்சம் பெண்கள் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகளுடன் முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். கூட்டத்தில் பெண்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 லட்சம் 'பெண்கள் சுவர்' எனும் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்