தெலங்கானா தேர்தல்: சூனியம் வைக்க கடத்தப்படும் ஆந்தைகள்

  • 6 டிசம்பர் 2018
தெலங்கானா தேர்தல்: கடத்தப்படும் ஆந்தைகள் - காரணம் என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல்கள் நடைபெறும்போது வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு பரிசுப்பொருட்களை விநியோகிப்பதை தடுப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது இந்தியா போன்ற நாடுகளில் வழக்கமான ஒன்றாக உள்ளது.

ஆனால், நாளை தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவிற்கு கடத்தப்படும் ஆந்தைகளை தடுக்கும் பணியில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபட்டு வரும் செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஒருவகை ஆந்தைக்கு தெலங்கானாவில் கடும் கிராக்கி இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரு மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டவர்கள் கர்நாடக காவல்துறை, வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, இந்த ஆந்தைகளுக்கும் பரிசுப்பொருட்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும், "ஆந்தைகளின் உடல் பகுதிகள் போட்டி வேட்பாளருக்கு தீங்கு விளைவிக்கும்'' என்ற எண்ணத்தில் சூனியம் வைப்பதற்காக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.

"அந்த ஆறு நபர்களில் இருவர் கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தின் ஜமகாண்டி என்ற பகுதியில் ஆந்தைகளை விற்க முயலும்போது பிடிபட்டனர்" என்று தனது பெயரை குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக-தெலங்கானா எல்லையில் அமைந்துள்ள செடாம் என்ற இடத்தில் ஆந்தைகளை விற்க முயன்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

"தெலங்காவில் நடைபெறவுள்ள தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு சூனியம் வைப்பதற்காக ஆந்தைகள் தேவைப்படுவதாக தெலங்கானாவிலிருந்து பேசிய நபர் தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" என்று கர்நாடக வனத்துறை அதிகாரியான ராமகிருஷ்ணா யாதவ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (வலது) மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

"தெலங்கானாவிலிருந்து தொடர்பு கொண்டவர்களை அவர்களது கைபேசி எண்ணை கொண்டு தேடி, அவர்களுக்கு பின்னிருக்கும் அரசியல்வாதியை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயம். அப்படி கண்டுபிடித்தாலும், அதை செய்தது ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியா அல்லது ஆதரவாளர்களா என்பதை உறுதிசெய்ய முடியாது" என்று அந்த காவல்துறையினர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

"ஆந்தைகளை கொண்டு தங்களது தரப்புக்கு எதிராக யாரோ சூனியம் வைத்துள்ளார்கள் என்ற பயத்தை எதிரணியினருக்கு ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. பொதுவாக எதிரணியினரின் மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சிக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவில் மொத்தமுள்ள 30 வகை ஆந்தைகளில் கழுகு ஆந்தை, பார்ன் ஆந்தை என்னும் இருவகைகள் மதரீதியிலான நம்பிக்கைகளுக்காகவும், சூனியம் போன்றவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுவதால் அதற்கு கடும் கிராக்கி காணப்படுகிறது.

பலதரப்பட்ட மக்களின் இதுபோன்ற விதோதமான நம்பிக்கைளால் அரிதான பறவைகள் அழிவதை எதிர்த்து பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடைபெற்று வரும் வன உயிரினங்கள் வர்த்தகத்தை மேலாண்மை செய்து வரும் அமைப்புகளுள் ஒன்றான 'டிராபிக் இந்தியாவின்' உயரதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இதுபோன்ற வர்த்தகத்தின் மதிப்பு குறித்து தரவுகள் ஏதுமில்லை என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆனால், எங்களது நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களின் மூலம் நாம் நினைத்து பார்ப்பதைவிட அதிகமான வன உயிரினங்கள் கடத்தப்படுகிறது. இந்த வர்த்தகம் வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவில் நடைபெற்றாலும், தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுகிறது. தந்திர முறைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்று இந்திய வனத்துறையின் அதிகாரியான சாகேத் படோலா கூறுகிறார்.

"தீபாவளி கொண்டாடப்படும் காலத்தின்போது ஆந்தைகளின் கிராக்கி உச்சத்தை தொடுகிறது. அதாவது, வீடுகளுக்கு லட்சுமி (செல்வத்தை குறிக்கும் இந்து கடவுள்) வரும் வாகனமாக ஆந்தைகள் கருதப்படுகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆந்தைகளை தவறான நோக்கத்திற்காக வர்த்தகம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூனியம், அமானுஷ்ய செயல்பாடுகளில் ஆந்தைகளின் 39 பகுதிகள் பயன்படுவதாக பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அப்ரார் அஹ்மத் தனது ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அப்ராரின் ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரும், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டோரி சொசைட்டி என்ற அமைப்பின் இயக்குனருமான ஆசாத் ரெஹ்மானி பிபிசியிடம் பேசும்போது, "ஆந்தைகளின் கால் நகங்கள், அலகுகள் பல்வேறு மதங்களில் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆந்தைகள் இருட்டில் வாழ்கின்றன என்ற ஒரே காரணத்தால் அவை தீமையின் சின்னமாக பெரும்பாலான இடங்களில் கருதப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: