ஜெயலலிதா கொடுத்த இலவசங்களால் தமிழகத்துக்கு கிடைத்தது என்ன?

  • ஜெயரஞ்சன்
  • உணவுப் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்
ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

1970களுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுத்துப் பார்த்தால் தமிழகத்தில் பிறப்பு விகிதம் என்பது குறைய ஆரம்பித்தது தெரிய வந்தது. ஆனால், அதே காலகட்டத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக பல செய்திகள் வர ஆரம்பித்தன.

பொதுவாக குழந்தை பிறப்பு தருணத்தில், ஆண் - பெண் விகிதம் என்பது 1000 ஆண் குழந்தைகளுக்கு 1100-1120 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஏனென்றால் குழந்தை பிழைத்திருக்கும் விகிதத்தை வைத்துப் பார்த்தால், அப்போதுதான் குழந்தைகள் வளரும்போது ஆண் - பெண் விகிதம் சரியாக இருக்கும். ஆனால், எங்கெல்லாம் சிசு கொலை பதிவாகிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தது.

இதற்குப் பிறகு பல கட்டங்களில் அரசு இதை கட்டுப்படுத்த முயன்றது. குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவது தடைசெய்யப்பட்டது. தண்டனை விதிக்க வகைசெய்யப்பட்டது. இதன் அடுத்த பகுதியாகத்தான், சிசுக்களைக் கொல்லாதீர்கள், அவற்றை அரசே வளர்க்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதுதான் ஜெயலலிதா அறிவித்த தொட்டில் குழந்தை திட்டம். இதன் விளைவாக எங்கெல்லாம் சிசுக்கொலை நடந்துவந்ததோ, அங்கெல்லாம் அவை குறைய ஆரம்பித்தன.

எங்கெல்லாம் அரசின் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டனவோ, அங்கெல்லாம் சிசு கொலை குறைய ஆரம்பித்தது. இதனால், அந்தப் பகுதிகளில் ஆண் - பெண் விகிதம் மேம்பட ஆரம்பித்தது. ஆனால், சேலம் போன்ற பகுதிகளில் மிக மோசமாக இருந்த சிசுக் கொலை, பெரம்பலூர், மதுரை என தென்மாவட்டங்களை நோக்கியும் கடற்கரையோர மாவட்டங்களை நோக்கியும் நகர ஆரம்பித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கும் செய்தி இது.

பட மூலாதாரம், Getty Images

தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட அரசின் முயற்சிகளால், சில மாவட்டங்களில் நிலைமை மேம்பட்டதும் அப்படியே விட்டுவிட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

இலவச அரசி திட்டத்தைப் பொறுத்தவரை, 2006ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்க ஆரம்பித்தது. மூன்று வருடங்கள் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வழங்கிய தி.மு.க., தேர்தல் நெருங்கும்போது ஒரு ரூபாய்க்கு வழங்க ஆரம்பித்தது. 2011 தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிய கருணாநிதி, தேர்தலில் வென்ற பிறகு முதல் கையெழுத்தாக இலவச அரசியை வழங்கத் திட்டமிட்டார்.

ஆனால், அந்தத் திட்டத்தை ஜெயலலிதா முதல்வரானவுடன் செயல்படுத்தினார். ஏற்கனவே 2006ல் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியையும் எரிவாயு அடுப்பையும் தி.மு.க. இலவசமாக வழங்கியிருந்த நிலையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்தார்.

இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தை நான் நல்லதொரு திட்டமாகத்தான் பார்க்கிறேன். வரலாறு நெடுகவே உணவை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே மக்களைக் கட்டுப்படுத்துவார்கள்.

30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், நிலமற்ற தொழிலாளர்கள், நிலவுடமையாளர்களை நம்பியே வாழ வேண்டும். எந்த நேரத்தில் உணவு கொடுப்பது, எப்போது கொடுப்பது என்பதை வைத்தே நிலவுடமையாளர்கள், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவார்கள்.

1960களின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இந்த நிலையை மாற்ற விரும்பியது. ஆனால், நிதியும் இல்லை. உணவு தானியங்களும் இல்லை. ஆகவே மத்திய அரசின் ஒதுக்கீட்டைச் சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது.

மத்திய அரசோ, மாநில அரசு இது தொடர்பாக விடுக்கும் வேண்டுகோள்களை ஏற்கவேயில்லை. மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இதனை ஒரு கருவியாக பயன்படுத்தியது.

அந்தத் தருணத்தில் முதல்வராக இருந்த மு. கருணாநிதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட நினைத்தார். ஆகவே மாநில அரசே தானியங்களைக் கொள்முதல் செய்ய ஏதுவாக தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தைத் துவங்கினார். அதுவரை மத்திய அரசின் முகமையான இந்திய உணவு கார்ப்பரேஷன் மட்டுமே தானியங்களை கொள்முதல் செய்துவந்தது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் துவங்கப்பட்டவுடன் அதற்கான கிடங்குகளைக் கட்டுவது, கொள்முதல் செய்வது, நவீன அரிசி ஆலைகளைக் கட்டுவது என கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அதேநேரம், இந்தக் கட்டமைப்பு மட்டும் இருந்தால் போதாது. அதனை விநியோகிக்க கட்டமைப்பு வேண்டும் (அதற்கு முன்பாக பொது விநியோகம் என்பது இரண்டே நகரங்களில்தான் இருந்தது: சென்னை மற்றும் கோவை. அதுவும் நகர்ப்புற ஏழைகளுக்காக மட்டும்தான் செயல்பட்டது).

கிராமப்புற ஏழைகளுக்கும் உணவு தானியங்களை வழங்க வேண்டுமென முடிவெடுத்து அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், கடைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இதையடுத்து கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். இதனை இன்னும் தீவிரப்படுத்தினார். கடைகளை அதிகரிப்பது என்பது சமீப காலம்வரை நடந்தது. பொது விநியோகத் திட்ட சீர்திருத்தம் என மத்திய அரசு என்னவெல்லாம் சொல்கிறதோ, தமிழ்நாடு அவற்றையெல்லாம் எப்போதோ செய்து முடித்துவிட்டது.

தி.மு.க. ஒரு ரூபாய்க்குக் கொடுத்துக் கொண்டிருந்த அரிசியை இலவசமாகக் கொடுத்தார் ஜெயலலிதா. இதை மக்கள் நேரடியாக பயன்படுத்தவில்லையென்பது தவறு. தேசிய சாம்பிள் சர்வே அமைப்பின் முடிவுகள் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

எந்த மட்டத்தில் எவ்வளவு மக்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள், அதில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வளவு வாங்குகிறார்கள், வெளிச் சந்தையில் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இருக்கிறது.

அரிசியை இலவசமாகக் கொடுப்பதற்கு முன்பாக, பொது விநியோகத் திட்டம் கிராமப்புறங்களில் 72 சதவீத மக்களையும் நகர்ப்புறங்களில் 45 சதவீத மக்களையும் சென்றடைந்தது. அரசி இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்த பிறகு கிராமப்புறங்களில் 95 சதவீதம் அளவுக்கும் நகர்ப்புறங்களில் 74 சதவீதம் அளவுக்கும் இது அதிகரித்தது. இந்த அளவுக்கு பொது விநியோகத் திட்டம் சென்றடைந்த மாநிலம் இந்தியாவிலேயே கிடையாது.

இலவச சைக்கிள் திட்டதைப் பொறுத்தவரை, அது பெண்களின் வாழ்க்கையை பெரிதும் மாற்றியிருக்கிறது. தேசிய சாம்பிள் சர்வேவில் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, பெண்கள் படிப்பை விடுவதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடையிலான தூரம்தான்.

படக்குறிப்பு,

ஜெயரஞ்சன்

ஆரம்பப் பள்ளிக்கூடம் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஆனால், உயர்நிலைப் பள்ளிக்கு தள்ளிச் செல்லவேண்டியிருக்கும்; வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அது எல்லோராலும் முடியாது.

தமிழ்நாட்டில் இதைச் சரிசெய்ய ஏற்கனவே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஜெயலலிதா இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். பஸ் பாஸை வைத்து வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும்தான் செல்ல முடியும்.

ஆனால், பெண்கள் எல்லா இடத்திற்கும் செல்வதற்கான ஒரு வழியாக இந்த இலவச சைக்கிள் திட்டம் அமைந்தது. தமிழகத்தில் உயர் கல்வி நிலையங்களில் மாணவிகள் அதிகம் இருப்பதற்கு இந்தத் திட்டமும் முக்கியக் காரணம்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் நுழைந்தபோது, அதற்கான கொள்கையை முதலில் வகுத்தது தமிழ்நாடுதான். இதன் அடுத்த கட்டம்தான் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்.

அடுத்து வரும் அரசு, எல்லா ஊரிலும் இலவச வைஃபை வழங்க வேண்டும். இலவசமாக இதனைப் பெறுபவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்களா, சரியாக பயன்படுத்துகிறார்களா என்பது வேறு விஷயம். ஆனால், அந்த வசதியை அளிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

இப்போது நம்முடைய பாடப் புத்தகங்கள் எல்லாவற்றிலும் க்யூ.ஆர் கோடுகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் படிக்க லேப்டாப் நிச்சயம் அவசியம். யூ-டியூபில் பாடங்களை பார்க்கலாம். ஆகவே லேப்டாப்பை ஆடம்பரப் பொருளாகக் கருதக்கூடாது.

இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டமும் அவசியமான ஒன்றுதான். மக்களுக்கு இவற்றை இலவசமாக அளிக்கக்கூடாது; அவர்கள் சம்பாதித்து வாங்க வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஏற்கனவே இந்தப் பொருட்களை வைத்திருப்பவர்கள்தான்.

"நான் கஷ்டப்பட்டு இந்த பொருட்களை வாங்கினேன். நீயும் கஷ்டப்பட்டு வாங்கு" என்பதுதான் இது தொடர்பாக நமது சமூகத்தின் பார்வையாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த இலவச மிக்ஸியும் கிரைண்டரும் பெண்களின் வேலைப் பளுவை வெகுவாக குறைத்திருக்கின்றன. அதற்கு முன்பாக வயலில் வேலை செய்துவிட்டுவந்து, பெண்கள் வீட்டிலும் வந்து வேலைசெய்ய வேண்டியிருந்தது. அதனை இந்தக் கருவிகள் சுலபமாக்கியிருக்கின்றன.

இந்த மிக்ஸியும் கிரைண்டரும் உணவுப் பழக்கத்தையும் வெகுவாக மாற்றியுள்ளன. காலையில் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகிறார்கள். பல குடும்பங்களில் காலையில் உணவு தயாரிக்க நேரமில்லாமல், முதல் நாள் இரவில் செய்ததை சாப்பிட்டுச் செல்வார்கள். அது மாறியிருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே சமூக நீதி தொடர்பான பார்வை இருந்ததா என்பது வேறு விஷயம். ஆனால், 69 சதவீத இடஒதுக்கீட்டை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த நேரத்தில் சரியான அரசியல் சூழல் இருந்தது, அதை அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்க விஷயம்தான்.

அம்மா உணவகம்

மாநில அரசு நகர்ப்புற ஏழைகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, கிராமப்புற ஏழைகள் மீதான கவனம் வெகுவாகக் குறைந்தது. நிறையப் பேர் நகரங்களை நோக்கி வேலைக்கு வர ஆரம்பித்தபோது, அவர்களைக் காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏதும் இங்கே இல்லை.

ரேஷன் கார்டுகள் ஊரில் இருக்குமென்பதால் பொது விநியோகத் திட்டத்தைக்கூட பயன்படுத்த முடியாது. அதனால், இந்த அம்மா உணவகங்களின் மூலம் குறைந்த விலையில் உணவளிப்பது, புலம்பெயர்ந்த நகர்ப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான திட்டம்தான்.

பட மூலாதாரம், ASIF SAUD

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு திட்டம் ஏதும் ஒழுங்காக இல்லாத நிலையில், இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஆனால், நம்மை பிற மாநிலங்கள் மிகத் தவறாகப் புரிந்துகொள்கின்றன. Land of Freebies (இலவசங்களின் தேசம்) என்கிறார்கள். இது ஒரு முட்டாள்தனமான கூற்று. இந்த இலவசத் திட்டங்கள் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

பொருளாதார ரீதியாக, தொழில்துறை ரீதியாக, சமூக ரீதியாக நாம் மிகவும் வளர்ந்த மாநிலம். இதையெல்லாம் சமூக ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செய்திருக்கிறோம்.

ஜெயலலிதாவின் பாரம்பரியம், அவர் விட்டுச் சென்ற பாதை என்பதில் ஏற்க வேண்டியதும் புறந்தள்ள வேண்டியதும் கலந்தே உள்ளன. அவர் மிகவும் ஜனநாயக விரோதமான நபர். ஊழலை மையப்படுத்தியதும் அதிகப்படுத்தியதும் அவர்தான். தன்னைப் பற்றிய அச்சத்தை, எல்லோரிடமும் தொடர்ச்சியாக உருவாக்கியவர்.

தவிர, சட்டத்தை தன் விருப்பத்திற்கு மிக மோசமாக வளைத்தவர் ஜெயலலிதா. இந்த மோசமான அம்சங்களை கொண்டாடக்கூடிய நபர்கள், ஜெயலலிதாவை இரும்பு மனிஷி என்று குறிப்பிடுகிறார்கள். இதன் உச்சமாகத்தான் சாகும்போது தண்டிக்கப்பட்ட நபராக அவர் இருந்தார்.

ஆனால், ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தால், அதை அவர் செய்துவிடுவார். இதனை அவர் பிடிவாதத்தின் மற்றொரு பகுதியாகவும் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: