ஜெயலலிதா: ஊழல் வழக்கு முதல் இலங்கை தமிழர் விவகாரம் வரை - ஒரு பத்திரிகையாளனின் நினைவலைகள்

ஜெயலலிதா படத்தின் காப்புரிமை Getty Images

( ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம். இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

'காலம் தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது' என்று ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கி, ஒரு கட்டுரையில் எழுதியதுதான் நினைவுக்கு வருகின்றது. 1982ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்த ஜெயலலிதா ஒன்பதே ஆண்டுகளில், அதாவது ஜூன் 1991 ல் முதலமைச்சரானார்.

ஒரு செய்தியாளனாக நான் நேரடியாக அவரை பார்த்ததும், அவருடன் பயணத்ததும் 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு வந்த முதல் சட்டமன்ற தேர்தல் அது. தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் ஜெயலலிதா வின் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம்.

திருச்சியில் இரண்டு நாட்கள் அவருடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு போயிருக்கிறேன். மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டால், அடுத்த நாள் காலை 4 மணியளவில் தான் அவர் திரும்பி வருவார். மிக கடினமாக அவர் பிரச்சார காலங்களில் உழைத்த காலம் அது.

ஒரு செய்தியாளனாக நான் முக்கியமாக பார்ப்பது, ஜெயலலிதா சந்தித்த வழக்குகளும், அதனை அவர் எதிர் கொண்ட விதமும், மற்றவர்கள் மீது குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் மீது ஜெயலலிதா போட்ட அவதூறு வழக்குகளும், இலங்கை பிரச்சனையில் ஜெயலலிதாவின் செயற்பாடுகளும்தான்.

1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு 1991 - 1996ம் ஆண்டு தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா மற்றும் பல அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளை போட்டது. ஜெயலலிதாவே டிசம்பர், 7, 1996 ம் ஆண்டு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜனவரி, 3, 1997 ல் ஜாமீனில் விடுதலையானார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வழக்குகளை விசாரிக்க மூன்று தனி சிறப்பு நீதிமன்றங்களை அப்போதய திமுக அரசு உருவாக்கியது. சொத்து குவிப்பு வழக்கு தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா விடுதலை ஆனார்.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டார். இந்த வழக்கு திமுக போட்ட மனுவின் அடிப்படையில் 2003 ல் உச்ச நீதிமன்றத்தால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றப் பட்டது. செப்டம்பர் 27, 2014 ல் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த தீர்ப்பை வழங்கினார். ஜெயலலிதா நேரடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டு காலத்தில் பதவியில் இருக்கும் போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்குப் போன ஒரே முதலமைச்சர் என்ற 'பெயரை' தமிழகத்துக்கு ஜெயலலிதா ஈட்டித்தந்தார்.

பின்னர் கர்நாடக உயர்நீதி மன்றம் மேல் முறையீட்டில் ஜெயலலிதா மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசியையும் விடுதலை செய்தது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 14, 2017ல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகள் தான் என்று தீர்ப்பளித்து அவர்களை நான்காண்டுகளுக்கு சிறைக்கு அனுப்பி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அந்த மூவரும் தற்போது பெங்களூர் சிறையில் தங்களது தண்டனை காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளை பொறுத்த வரையில் சுவாரஸ்யமான ஒரு விஷயம், ஜெயலலிதாவுக்காக வாதாட 1993லிருந்து, 2016 வரையில் சென்னை மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும், இந்தியாவின் சம காலத்தில் புகழ் பெற்ற கிட்டத் தட்ட அனைத்து மூத்த, புகழ் பெற்ற, நாடறிந்த, வழக்கிறிஞர்கள் வந்ததுதான். இதில் மூவர் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்கள். அவர்கள், ராம்ஜெத் மலானி, அருண் ஜெட்லி மற்றும் ரவி ஷங்கர் பிரசாத்.

மற்றவர்கள் என்ற பட்டியிலில் இருப்பவர்கள், கபில் சிபல், முகுள் ரோஹத்கி, ஃபாலி நாரிமன், ராஜீவ் தவான், சோலி சோரப்ஜி, ஜ.ராமசாமி, தற்போதய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சித்தார்த்த ஷங்கர் ராய், மற்றும் சிலர்.

2001 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார். நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. புவனகிரி தொகுதியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை எப்படியாவது ஏற்றுக் கொள்ள செய்வதற்காக, குறிப்பிட்ட தேர்தல் அலுவலர் முன்பு ஆஜராகி வாதாட ஜெயலலிதாவுக்காக சித்தார்த்த ஷங்கர் ராய் வந்தார். ஆறரை அடி உயரம் கொண்ட சித்தார்த்த ஷங்கர் ராய், புவனகிரி தேர்தல் அலுவலகத்திற்குள் வந்த போது அவரது தலை கிட்டத்தட்ட உத்திரத்தில் இடிக்கும் அளவுக்கு இருந்தது. ஒரு மணி நேரம் ராய் வாதாடினார். ஆனாலும், ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் 10-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவிற்கு எதிரான பல்வேறு வழக்குகளுக்காக வாதாடி இருக்கிறார்கள் என்றால் இதற்கான செலவு எவ்வளவு என்பதை, விவரம் அறிந்தவர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை பார்த்தோம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மற்றவர்கள் மீது குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் மீது போட்ட வழக்குகளும் கவனிக்கப்பட வேண்டிய, சுவாரஸ்யமான விஷயம்தான்.

கடந்த 1991 - 1996 ஆட்சிக் காலத்தில் 120க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் மீது ஜெயலலிதா போட்டார். ஆனால் 1996 தேர்தல்கள் நெருங்கிய சமயத்தில் இவை வாபஸ் பெறப்பட்டன. இதே நிகழ்வு 2006 - 2011 ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் நடந்தது. ஆனால் 2011 - 2016ம் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா போட்ட நூற்றுக்கணக்கான - பத்திரிகையாளர்கள், எதிர்கட்சி தலைவர்கள் மீதான - அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை. 2016ல் மீண்டும் வென்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் உயிருடன் இருந்த டிசம்பர் 5, 2016 வரையில் அவதூறு வழக்குகள் போடப்படவில்லை. ஆனால் 2011 - 2016 வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை விவகாரம்

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் மற்றுமோர் முக்கிய விஷயமாக நான் பார்ப்பது இலங்கை தமிழர் விவகாரத்தில் அவரது நிலைப்பாடு. 1991 ஜனவரியில் அன்றைய திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அஇஅதிமுக ஆதரவுடன் பிரதமராக இருந்த சந்திரசேகர் அரசு, முதலமைச்சர் மு.கருணாநிதியின் அரசை டிஸ்மிஸ் செய்தது. சொல்லப் பட்ட காரணம், தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்துக்கு கருணாநிதி அரசு பேராதரவு தந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதன் பின்னர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு விடுலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. விடுதலை புலிகளை எதிர்ப்பதில் ஜெயலலிதா பெரும் முக்கியத்துவம் காட்டினார். விடுதலை புலிகளை ஆதரித்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப் பட்டனர்.

1991 - 1996, 2001 - 2006ம் ஆண்டுகளில் விடுதலை புலிகள் எதிர்ப்பு விஷயத்தில் ஜெயலலிதா அதீத முக்கியத்துவம் காட்டினார். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஏப்ரல் 10, 2002 ல், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையின் கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். உலகம் முழுவதிலும் இருந்தும் செய்தியாளர்கள் இதற்கு சென்றனர். இந்தியாவில் இருந்தும் 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சென்றனர். அன்றைய தினம் மதியம், சென்னை அரசு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பிரபாகரனின் செய்தியாளர் சந்திப்பு பற்றி ஜெயலலிதா சொன்னது, ''ஒரு முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுவதற்காக சென்றிருக்கும் இந்திய ஊடகங்கள் குறித்து நான் வெட்கப் படுகிறேன்'' (I am ashamed of Indian media. They are going to cover the press conference of a man who is a proclaimed offender in the killing of former Prime Minister Rajiv Gandhi").

இதற்கு சில நாட்கள் கழித்து, 'பிரபாகரனை உயிருடன் பிடித்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் அவரை கொண்டு வந்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானமே நிறைவேற்றினார்.

கடந்த 2009 ஜனவரியில் இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருக்கும் போது, அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, அஇஅதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதிலளித்தார்; ''போர் என்றால் இரு தரப்பிலும் மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள்''.

ஆனால் 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா வின் நிலைப்பாடு தலைகீழாக மாறிப் போனது. ''இலங்கை போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது உடனடியாக இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்'' என்று இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினார்.

இதனை தாண்டியும் அவர் மேலே போனார். இலங்கையிலிருந்து சிங்களவர்கள் எவர் தமிழகத்துக்கு வந்தாலும் அவர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்றினார். இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிக்காக அடிக்கடி தமிழகம் வருவது வாடிக்கையாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் இதனை ஜெயலலிதா அனுமதிக்க மறுத்தார். கிட்டத்தட்ட நான்கு முறைகளுக்கு மேல் இவ்வாறு பயிற்சிக்காக, சென்னையில் தாம்பரம் விமான நிலையம் மற்றும் உதகை வெலிங்டன் ராணுவ கல்லூரிகளுக்கு வந்த இலங்கை ராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டனர்.

ராணுவ வீரர்களுடன் இது நிற்கவில்லை. 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் அணி இலங்கையிலிருந்து விளையாட சென்னை வந்தது. அவர்கள் சென்னை விமான நிலையித்திலிருந்தே இலங்கை திரும்பி அனுப்ப்ப்பட்டனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கால் பந்து பயிற்சியாளர் (தமிழக அரசு ஊழியர்) ஒருவரிடம் பயிற்சி பெற சில கால்பந்து வீரர்கள் இலங்கையிலிருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு இந்த குறிப்பிட்ட பயிற்சியாளர் சில நாட்கள் பயிற்சி அளித்தார். இந்த விவரம் தெரிய வந்தவுடன், அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. இதே போல கும்பகோணத்தில் கிட்டத்தட்ட இலங்கையிலிருந்து 40 யாத்திரிகர்கள் கோயில்களில் வழிபட வந்தனர். அவர்களில் இலங்கை தமிழர்கள் சிலரும் இருந்தனர். விவரம் அறிந்தவுடன் அவர்கள் அனைவரும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப பட்டனர்.

ஆனால் இவை எல்லாவற்றை விடவும் ஜெயலலிதா சிகரம் தொட்டது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்ய எடுத்த நடவடிக்கை. இந்த எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பிப்ரவரி 2014 ல் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

''இவர்கள் மத்திய அரசின் புலனாய்வு பிரிவான சிபிஐ அமைப்பால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் என்பதால், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தமிழக அரசின் முடிவுக்கு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மூன்று நாட்கள் கழித்து தமிழக அரசு இவர்களை விடுதலை செய்து விடும்'' என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அடுத்த நாளே மத்திய அரசு ஜெயலலிதா அரசின் இந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. சட்டமன்றத்தில் இந்த முடிவை அறிவித்த ஜெயலலிதா அன்று மாலையில் தலைமை செயலகத்தில் தண்டனை பெற்ற ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

''இது காலத்தின் கோலம்தான்'' என்று எழுதாமல் இருப்பது எனக்கு கடினமானதாகவே இருக்கிறது.

2011 ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா வின் அரசியலில் ஏற்பட்ட மற்றுமோர் சுவாரஸ்யமான மாற்றம் அவர் தன்னை அகில இந்திய அளவிலான ஒரு தலைவராக தகவமைத்துக் கொள்ள முயற்சித்த போக்குதான். ஜூலை 20, 2011 ல் சென்னை வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இது பெரியளவில் அஇஅதிமுக வினரால் விளம்பரப்படுத்தப்பட்டது.

பின்னர் 2014 மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிராக ஜெயலலிதா தன்னை அரசியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொண்டார். தான் மட்டுமே மோடிக்கு மாற்று என்று பிரசாரக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ''உங்களுக்கு யார் வேண்டும்? மோடியா அல்லது இந்த லேடியா?'' என்று மக்களை பார்த்துக் கேட்டார்.

அந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையின் மொத்தமுள்ள 40 எம் பி தொகுதிகளில் 37 இடங்களில், கூட்டணி கட்சிகள் இல்லாமல் அஇஅதிமுக வெற்றி பெற்றது. மாநிலங்களவையில் 13 எம்.பி.க்கள் அக் கட்சிக்கு இருக்கிறார்கள். ஆகவே மொத்தம் 50 எம் பி க்கள் இன்று அஇஅதிமுக வுக்கு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கூட்டணி கட்சிகள் இல்லாமல் ஜெயலலிதா செய்தார் என்பது அவரது ஆசான் எம்ஜிஆர் கூட செய்யாத சாதனைதான் என்பது நிதர்சனம்.

பெரியளவில் பரந்துபட்ட மக்கள் திரளின் பல தரப்பு பிரதிநிதிகளிடம் போதிய நேரடி தொடர்பு இல்லாமல் இருந்த போதிலும் ஜெயலலிதாவால் சராசரி தமிழனின் நாடித் துடிப்பை துல்லியமாக அறிய முடிந்திருந்தது.

கடந்த 1991 - 1996 ல் அவரது முதல் ஆட்சிக் காலத்தில் தன்னைப் பற்றி ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது இப்படி வர்ணித்துக் கொண்டார், '' நூறு ஆண்டு கால திராவிட இயக்கத்தின் இன்றைய பரிணாம வளர்ச்சி நான்''.

இது உண்மையா என்பதை வரலாறு முடிவு செய்யும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்