ரகசிய கேமராக்களை பொருத்தியது எப்படி? - விடுதி உரிமையாளர் வாக்குமூலம்

  • 6 டிசம்பர் 2018
விடுதி உரிமையாளர் படத்தின் காப்புரிமை Facebook

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'ரகசிய கேமராக்களை பொருத்தியது எப்படி?'

தொழில்நுட்பங்களை படித்துத் தெரிந்துகொண்டு, பெண்களின் அறைகளில் ரகசிய கேமராக்களை நானே பொருத்தினேன் என்று கைது செய்யப்பட்டுள்ள விடுதி உரிமையாளர் சஞ்சீவி வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதியை சம்பத்ராஜ் என்கிற சஞ்சீவி (48) நடத்தி வந்தார். இந்நிலையில், விடுதியில் பெண்களின் படுக்கை அறை, குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்திருந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், அறைகளில் இருந்த ரகசிய கேமராக்களை கைப்பற்றினர்.

"வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். முன்பணமாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2 ஆயிரத்து 100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பெண்கள் தங்கி இருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர். எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்துவிடுவேன்.

இது பெண்களின் அறைகளில் கேமராவைப் பொருத்த எனக்கு வசதியாகிவிட்டது. இதற்காக நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டேன். ஆன்லைனிலும் படித்தேன். பின்னர் ஒவ்வொரு கேமராவையும் நானே ரகசியமாக பொருத்தினேன்.

இந்த கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். அவற்றின் விலை தலா ரூ.2,500 ஆகும். இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தியிருந்தேன். இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டும் தானாக இயங்கி காட்சிகளை பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது.

இந்த கேமராக்களில் மெமரி கார்டும் இருக்கும். வீடியோ காட்சிகள் அந்த கார்டில் பதிவாகி இருக்கும். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணி என்று அவர்களின் அறைக்குள் சென்று மெமரி கார்டை எடுத்து விட்டு, புதிய மெமரி கார்டை வைப்பேன்.

பின்னர் அந்த கார்டை எடுத்து லேப்டாப் அல்லது செல்போனில் போட்டுப் பார்ப்பேன். இந்நிலையில், வைஃபை (wifi) தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் இருப்பதை அறிந்து, அவற்றை வாங்கி பெண்களின் அறைகளில் மாட்டினேன். எல்இடி பல்பு வடிவில் இந்த கேமராக்கள் இருக்கும்.

இந்த கேமராக்களில் மெமரி கார்டை கழற்றத் தேவையில்லை. வைஃபை மூலம் நேரடியாக எனது செல்போனுக்கு தொடர்பு படுத்தி பெண்கள் அறைகளில் நடக்கும் காட்சிகளை பார்ப்பேன்" என்று சஞ்சீவி வாக்குமூலம் அளித்தார் என்று போலீஸ் கூறியதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி: 'தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு'

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய, கர்நாடக அரசு உயரதிகாரிகள், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில்அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது. இதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய நீர் ஆணையத்தின் திட்ட மதிப்பீடு ஆணையத்தின் (தெற்கு) இயக்குநர் என். முகர்ஜி, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகமின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுனா பி. குங்கே, கர்நாடக அரசின் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலர் ராகேஷ் சிங், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'தமிழக மாணவர்களுக்கு கர்நாடக அரசு முத்திரையுடன் சைக்கிள் வழங்கியது எப்படி?'

கர்நாடக மாநில அரசு முத்திரையுடன் கூடிய சைக்கிள்கள் எப்படி தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கினார். அந்த சைக்கிள்களின் முன்பகுதியில் கர்நாடக மாநில அரசின் முத்திரை மற்றும் கர்நாடக மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த சைக்கிள்கள் தரம் குறைந்ததாகவும், குறைகள் உள்ளதாலும், கர்நாடக மாநில அரசால் நிராகரிக்கப்பட்டவை.அந்த சைக்கிள்களை, தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் உயிரோடு தமிழக அரசு விளையாடியுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. இதை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும்?' என்று கேள்வி எழுப்பினர் என்றும், அதற்கு மனுதாரர் வக்கீல், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர் என்றும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம், 'கர்நாடக மாநில அரசு முத்திரையுடன், அம்மாநில மொழியில் எழுதப்பட்ட வாசகத்துடன் கூடிய சைக்கிள்கள் எப்படி தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது?, இதை கூட அதிகாரிகள் பார்க்கமாட்டார்களா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஏரி தண்ணீரை வெளியேற்றிய கிராமம்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நவல்குன்ட் தாலுகாவில் உள்ள 15 ஏக்கர் ஏரியில் உள்ள மொத்த தண்ணீரையும் உள்ளூர் அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்னதாக அந்த ஏரியில் HIV பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்குள்ள மொராப் கிராமத்திற்கு உள்ள ஒரே குடிநீர் ஆதாரம் இந்த ஏரிதான். HIV இருந்த பெண்ணின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டதால், அந்த கிராமத்தில் உள்ள சுமார் 150 பேர், தங்களுக்கு HIV வந்துவிடும் என்ற அச்சத்தினால் அந்த ஏரியில் இருந்து தண்ணீர் அருந்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

"ஏரியில் இறந்து கிடந்த பெண்ணிற்கு HIV இருந்தது கிராம மக்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் அதிலிருந்து தண்ணீர் அருந்த மறுத்துவிட்டனர். அதனால், அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றி, மலப்பிரபா அணையில் இருந்து சுத்தமான தண்ணீரை நிரம்புமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த முடிவினை கிராம பஞ்சாயத்தும் ஒப்புக் கொண்டது" என்று நவல்குன்ட் தாலுக்கின் தாசில்தார் நவீன் ஹூல்லூர் தெரிவித்தார்.

மொராப் கிராம மக்கள் அந்த ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக 3 கிலோ மீட்டர் பயணம் செய்து தண்ணீர் எடுத்துவரத் தொடங்கினர். அதனால், ஏரியில் இருந்து அந்த நீரை வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது. இரண்டு நாட்களில் தண்ணீர் மொத்தமும் வெளியே எடுக்கப்படும். 5 நாட்களில் மலப்பிரபா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அங்கு நிரப்பப்டும் என ஹூல்லூர் மேலும்தெரிவித்ததாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: