காந்தி மீதான அம்பேத்கரின் விமர்சனம் நியாயமானதா?

  • 7 டிசம்பர் 2018
காந்தி படத்தின் காப்புரிமை Getty Images

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி மீதான தனது கடுமையான விமர்சனப் பார்வையை பிபிசிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியிருந்த காணொளி இணையத்தில் எளிதாகக் கிடைக்கிறது. இதுவே அவ்வப்போது அம்பேத்கரின் கருத்தை விவாதப்பொருளாக மாற்றிவிடுகிறது.

அம்பேத்கரின் மிகச் சில காணொளிப்பதிவுகளில் அந்தப் பேட்டியும் ஒன்று என்பதால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பேட்டியில் காந்தி குறித்து பல கசப்பான கருத்துகளை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
"காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை"- அம்பேத்கர்

காந்தியை விமர்சிப்பவர்களுக்கு அந்தக் கருத்துகள் இனிமையாகத் தோன்றலாம். ஆனால், காந்தி - அம்பேத்கர் இடையே இருந்த உறவு குறித்து சிறிதேனும் அறிந்தவர்களுக்கு அது ஒன்றும் வியப்பளிக்காது.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் எழுதிய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, அந்த நேர்காணல் குறித்து ஒரே வரியில் இவ்வாறு கூறுகிறார். "1930கள் மற்றும் 1940களில் அம்பேத்கர் எழுதியவற்றைப் போல தர்க்க ரீதியில் காந்தியை மறுத்துரைக்கிறார்."

63 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் காந்தி குறித்து கொண்டிருந்த பார்வை அவரது சொந்தக் கருத்து, வரலாற்றுக்கு கூறுகள், பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு அந்த நேர்காணலை, அதே கசப்பான மற்றும் எதிர்க்கும் மனநிலையுடன் மறு ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

அம்பேத்கரைப் பொறுத்தவரை காந்தி இந்திய வரலாற்றில் ஓர் அத்தியாயம்; அவரே வரலாற்றை உருவாக்குபவர் அல்ல. காங்கிரஸ் காந்தியைக் கொண்டாடும் 'செயற்கை சுவாசம்' மூலமாகவே காந்தி இந்திய மக்களால் நினைவுகூரப்படுகிறார் என்கிறார் அம்பேத்கர்.

காந்தி இறந்து 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அவர் வரலாறு படைத்தாரா இல்லையா என்ற கேள்விக்கான ஏற்றுக்கொள்ளும்படியான பதிலை பெறுவது சற்று சிரமம்தான். ஆனால், அவர் நினைவாக நிகழ்வுகள் நடத்தி, அந்த 'செயற்கை சுவாசம்' மூலமே காந்தியை நினைவுகூர வேண்டும் நிலை மாறியுள்ளது. வரும் காலங்களிலும் காந்தி மக்களின் நினைவில் இருப்பர் என்பதையும் நிச்சயமாகக் கூற முடியும்.

"நான் காந்தியை ஓர் எதிராளியாகவே சந்தித்தேன் என்பதால், பலரையும்விட அவரை எனக்கு நன்றாகத் தெரியும்," என்று கூறிய அம்பேத்கர் பிறர் பக்தர்களாக அவரைப் பார்க்கச் சென்றனர். நான் அவரது புறத்தோற்றத்தைத் தவிர, அவர் மகாத்மாவாகக் கட்டிக்கொண்ட வேறு எதையும் பார்க்கவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராக மட்டுமே பார்த்தேன். அதனால், அவருடன் தொடர்புடைய பலரையும்விட என்னால் காந்தியை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது," என்றிருக்கிறார்.

ஆனால், அம்பேத்கர் காந்தியை ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்துள்ளார். அவை அனைத்தும் அம்பேத்கரின் கடுமையான கருத்துகள். எனினும் மென்மையும் அரசியல் நாகரிகமும் அம்பேத்கரின் வாதங்களில் தென்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டம்பர் 6, 1954 அன்று 'காந்தி வரி' என்ற ஒன்று விதிக்கப்பட்டு அவற்றை தலித் மக்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார்.

காந்தி இரட்டை அணுகுமுறையைக் கடைபிடித்தார் என அம்பேத்கர் குற்றம்சாட்டியுள்ளார். "தனது ஆங்கில இதழ்களில் சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரானவராகக் காட்டிக்கொண்டு, குஜராத்தி இதழில் சாதி மற்றும் வருணாசிரம கொள்கையை ஆதரித்தார், " என்று கூறிய அம்பேத்கர், காந்தி ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவற்றை ஒப்பிட்டு அவரது வரலாற்றை எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த நேர்காணலுக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காந்தியின் எழுத்துகள் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் 100 தொகுதிகளாக கிடைக்கின்றன. அவரது குஜராத்தி கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் எளிதாகக் கிடைக்கின்றன.

காந்தியின் எழுத்துகள் gandhiheritageportal.com இணையதளத்திலும் உள்ளன. 'ஹரிஜன்' (ஆங்கிலம்), 'ஹரிஜன் சேவக்' (இந்தி) மற்றும் 'ஹரிஜன் பந்து' (குஜராத்தி) ஆகிய இதழ்களில் எழுதியவை அந்த இணையதளத்தில் உள்ளன.

அவற்றை ஒப்பிட்டுப்பார்த்தாலே காந்தி இரட்டை அணுகுமுறையைக் கொண்டிருந்தறார் என்ற அவர் மீதான தவறான கண்ணோட்டம் மாறும். அவர் ஆங்கில இதழ்களில் சாதி அமைப்பை ஆதரித்து வந்ததாகவும், குஜராத்தி இதழ்களில் கடுமையாக எதிர்த்தாகவும் ஆய்வு ஒன்று தெளிவுபடுத்துகிறது.

சமத்துவம் மற்றும் தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய அம்பேத்கர், காந்தி அவற்றுக்கு எதிராக இருந்ததாகக் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் 'தீண்டப்படாதவர்களாக' இருந்தவர்களை ஈர்ப்பதே காந்தியின் நோக்கம் என அம்பேத்கர் கூறினார்.

அவர்கள் தமது சுயராஜ்ய கொள்கையை எதிர்க்காமல் இருக்க வைப்பதே காந்தியின் நோக்கமாக இருந்தது என்பது அம்பேத்கரின் கருத்து.

காந்தி அம்பேத்கரைப் போலவோ ஜோதிராவ் பூலேவைப் போலவோ சாதி அமைப்பை கடுமையாகத் தாக்கியவர் அல்ல. ஆனால், அவர் தீவிரமாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய அரசியலில் நுழையும் முன்னரே, 1915லேயே தலித் குடும்பம் ஒன்றை தமது ஆசிரமத்தில் தங்கவைத்தார் காந்தி. அதற்காக பல எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டார்.

தலித்துகள் உயர் பதவிகளில் இருப்பதைப் பொறுத்தமட்டில், அம்பேத்கர் மற்றும் ஜெகஜீவன் ராம் ஆகிய இருவருமே அப்போதைய மத்திய அமைச்சரவையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் போராட்டங்களால் அல்ல, அப்போது நிலவிய பல்வேறு காரணிகளால் பிரிட்டன் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது என அம்பேத்கர் கூறியது சரிதான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கிடைக்காமல் செய்த பூனா ஒப்பந்தம் காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனைக்குரிய விவகாரமாகவே இருந்தது.

மும்பை மாகாணத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 17 தொகுதிகளில் அம்பேத்கர் ஆதரவளித்த வேட்பாளர்கள் 15 இடங்களில் வென்றனர். ஆனால், பிற மாகாணங்களில் இருந்த 151 தனித் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாதிக்கும் அதிகமான இடங்களில் வென்றது.

அம்பேத்கரின் வாழ்வில் அந்திம காலத்தில், தனது அரசியல் வாழ்க்கை முற்றுப்பெறும் சூழலில் அளித்த அந்தப் பேட்டி கோபம், கசப்பு மற்றும் ஆற்றாமை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அது மனித இயல்புகளுடன் இருந்த ஒரு நேர்காணல். அம்பேத்கருக்கே உரிய தன்மைகளை அந்த நேர்காணல் கொண்டிருந்தது. ஆனால், அதை தற்காலத்தில் காந்திக்கு எதிரானதாகப் பயன்படுத்த நினைப்பது முறையற்றது மட்டுமல்ல, நியாயமற்றதும்தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்