தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி

  • விக்னேஷ்.அ
  • பிபிசி தமிழ்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடக்க இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது ஐந்து இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடக்க உள்ள தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு அரையிறுதிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது தேர்தலை சந்திக்கும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

இந்த மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற மூன்று மாநிலங்களில் நவம்பர் மாதமே வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

2014-ல் மக்களவைக்கு நடந்த தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் அனைத்திலும் பாஜக வென்றது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் 26 தொகுதிகளிலும், சத்திஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் 10-லும் பாஜக வென்றது.

பட மூலாதாரம், Hindustan Times / getty

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது முறை முதலமைச்சராக உள்ளார் சிவ்ராஜ் சிங் சௌகான்

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றினாலும், தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப்போகிறவை.

சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் கூட்டணி சேரும் வாய்ப்பு உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வுக்குப் பாதகமாகப் போகும் நிலையை உருவாக்கியுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், பதவிக் காலத்தின் இடையிலேயே லாலுவை கைவிட்டு, தங்கள் பழைய கூட்டாளியான பாஜகவுடன் நிதிஷ்குமார் இணைந்து ஆட்சி அமைத்தார். இது பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.

இத்தகைய சூழலில் தங்களுக்கு பலம் உள்ள பிற மாநிலங்களிலும் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வது பாஜகவுக்கு 2019 தேர்தலில் மிகவும் அவசியமாகிறது.

தொடர்ந்து பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலிகளில் தனிப்பட்ட முறையில் வென்றோ, தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணிகளாலோ ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் வெல்ல கடுமையாக முயன்று வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தல்கள் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களைவிடவும் சவால் மிகுந்தது.

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைப் பிடித்த பாஜக அங்கு, மக்களின் ஆட்சிக்கு எதிரான மனநிலையை அதிகமாக எதிர்கொண்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை மட்டுமல்லாது பசுப்பாதுகாப்பு உள்ளிட்ட இந்துத்துவ ஆதரவாளர்களைக் கவரும் விதமான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளும் பாஜகவின் சிக்கல்களை அதிகரித்துள்ளன. 2013இல் இங்குள்ள 230 தொகுதிகளில் பாஜக 165 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் வென்றது 58 தொகுதிகள்.

பட மூலாதாரம், NurPhoto / getty

படக்குறிப்பு,

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுடன் காங்கிரசின் இளம் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்.

1998 முதல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் நிலை ராஜஸ்தானில் நிலவி வருகிறது. இதே போக்கு தொடருமானால் அங்கு இந்த முறை காங்கிரஸ் வெல்ல வேண்டும். பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் மத்தியத் தலைமை ஆகியவற்றுக்கு இடையே வேட்பாளர் தேர்வில் நடந்த கருத்து வேறுபாடுகள் ஊடகங்கள் மூலம் வெளிப்படையாகேவ தெரிந்தன, வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவினர் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு மாறியது உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானவையாகவே பார்க்கப்படுகிறது.

தனது முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் வெளிப்படியாக காங்கிரஸ் அறிவிக்காத நிலையிலும், கட்சியின் இளம் முகமாக உள்ள, 41 வயதாகும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவைவிட மக்களைக் கவர்ந்துள்ளாரா என்பது இன்னும் நான்கு நாட்களில் தெரிந்துவிடும். இங்குள்ள 200 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பாஜக 2013 தேர்தலில் வென்றது. வெறும் 21 இடங்களில் வென்ற காங்கிரஸ் பெரும்பான்மையைப் பிடிக்க கடுமையாகப் போராடி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தைப் போலவே தொடர்ந்து மூன்று தேர்தல்களில் பாஜக வென்றுள்ள இன்னொரு மாநிலம் சத்திஸ்கர். இந்த மாநிலம் 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இருந்துதான் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Hindustan Times / getty

படக்குறிப்பு,

2003 முதல் பதவியில் இருக்கிறார் சத்திஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங்.

பாஜக வென்ற கடைசி மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இருந்த வாக்கு வேறுபாடு அதிகபட்சம் 3% தான். அதுவும் 2013 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் வென்றிருந்தாலும், இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவிலான வாக்குகளையே பெற்றன. அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் சதவிகிதம் முறையே 41% மற்றும் 40.3%.

2014இல் நடந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தது. தேர்தல் முடிந்த இரு வாரங்களிலேயே மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது.

தெலங்கானா சட்டமன்றத்துக்கு 2019 மே மதம் வரை பதவிக்காலம் இருந்தாலும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் அக்கட்சியின் பரம எதிரியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து பாஜக போட்டியிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பல மாநிலக் கட்சிகளின் தலைவராகளை சந்தித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என விமர்சித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. எனவே, பாஜக தனித்து நிற்க வேண்டிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முக்கியத்துவத்தை இழந்த காங்கிரஸ் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக தெலங்கானா தேர்தலைப் பார்க்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அல்லது மாநிலக் கட்சிகள் பெறும் இடங்கள் அடுத்த மக்களவைத் தேர்தலில் தாக்கம் செலுத்தும்.

பட மூலாதாரம், KCR/FB

காங்கிரஸ் இந்த மாநிலங்களில் ஒரு வேலை பழைய பலத்தைப் பெறாவிட்டாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகளின் தயவு தேவைப்படும் தேசியக் கட்சிக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுமே மிகவும் தேவைப்படும் கூட்டாளிகள்தான்.

எனவே பாஜகவுக்கு தெலுங்கானாவில் பெரிய பலம் இல்லாதபோதும், இந்த மாநிலமும் அக்கட்சிக்கு முக்கிய மாநிலமே ஆகும்.

வடகிழக்கு மாநிலமான மிசோராம் அளவில் சிறியதுதான். எனினும் அது காங்கிரஸ் கட்சி இன்னும் ஆட்சியில் உள்ள சில மாநிலங்களில் ஒன்று.

இங்கு முக்கிய எதிரிக்கட்சியான மிசோ தேசிய முன்னணி பாஜகவுடன் கூட்டணியில் இல்லாவிட்டாலும், பாஜக அமைத்த காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் அமைப்பான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலை மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளார்

வரும் டிசம்பர் 11 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இந்த ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 83 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை நேரடியாக மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கைக்கூட கொண்டிராத மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் எப்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படி முன்னோட்டமாக இருக்கும்?

2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் வென்று அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பாஜகவே ஆட்சி அமைத்துள்ளது.

2017இல் பஞ்சாபில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வென்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது மற்றும் 2018இல் தனித்து போட்டியிட்டிருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைத்தது காங்கிரஸ். தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவால் அங்கு ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை.

இந்த ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்று சில அல்லது அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் கூடுதல் பலத்தோடு காங்கிரஸ் எதிர்கொள்ளும். மத்தியிலும் பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டால், அது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரணியில் உள்ள பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்களுக்கும் வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை அதிகரிக்கும்.

ஒரு வேலை பாஜக மீண்டும் இந்தத் தேர்தல்களில் தனது பலத்தை நிரூபித்தால் இன்னும் கூட்டணி குறித்த முடிவை எடுக்காத மாநிலக் கட்சிகள் பாஜகவின் பக்கம் செல்லவும் வாய்ப்புண்டு.

கடந்த சில நாடாளுமன்றத் தேர்தல்களைப்போல அல்லாமல் மூன்றாவது அணி குறித்த பேச்சும் முயற்சிகளும், தற்போது அதிகம் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இது நடந்தால் மூன்றாவது அணியால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆகிய இரு தரப்புகளை மையப்படுத்தி நடக்கும் இறுதிப்போட்டியாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அமையும்.

சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் முடிவு செய்யும் காரணிகள் வேறுவேறாக இருந்தாலும், இந்தத் தேர்தல்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் குறைந்த கால இடைவெளியே உள்ள நிலையில் மாநிலங்களின் அரசியலில் உண்டாகும் மாற்றம் மக்களவைத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதை முழுதும் புறந்தள்ளிவிட முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: