சர்கார் திரைப்பட சர்ச்சை: கையில் அரிவாளுடன் மிரட்டும் வீடியோவைப் பரப்பிய ரசிகர்கள் கைது

  • 7 டிசம்பர் 2018
கையில் அரிவாளுடன் மிரட்டும் வீடியோவைப் பரப்பிய ரசிகர்கள் கைது படத்தின் காப்புரிமை Twitter

சர்கார் படம் வெளியான நேரத்தில் தங்களை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இரு இளைஞர்கள், அரிவாளுடன் மிரட்டலாகவும் அவதூறாகவும் பேசி இருந்தனர். அவர்கள் இருவரையும் சென்னை காவல்துறை கைதுசெய்துள்ளது.

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைக் குறைகூறுவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால், ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்தப் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பல இடங்களில் இந்தப் படத்தின் பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

விஜய் ரசிகர்கள் என கூறிக்கொண்ட பலர் சமூக வலைதளங்களில் இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்ஸி, லேப்டாப் ஆகிவற்றைத் தூக்கிப்போட்டு உடைப்பதுபோன்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர்.

அதேபோல கையில் அரிவாளுடன் இரு இளைஞர்கள் பேசும் வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் இருந்த இரு இளைஞர்களும் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குறித்து அவதூறாகவும், அடுத்த நாள் காலையில் முடிந்தால் காசி தியேட்டர் அருகில் வரும்படியும் சவால் விடுத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Facebook

இது தொடர்பாக சென்னை நகரக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்கள் தொடர்ந்து தேடப்பட்டுவந்த நிலையில், இது தொடர்பாக இருவரை கைதுசெய்திருப்பதாக சென்னை நகர காவல்துறை வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் இடம்பெற்ற லிங்கதுரை, சஞ்சய் ஆகிய இருவரில் சஞ்சய் என்பவரையும் வீடியோவைப் பதிவுசெய்த அனிஷேக் என்பவரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்