'மேகேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை'

மேகதாது
Image caption (கோப்புப்படம்)

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - மேகேதாட்டுஅணைக்கு இன்னும் அனுமதி இல்லை

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைப் போல செய்திகளைப் பரப்புவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லையென கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளதாக தினமணியின் வேறு ஒரு செய்தி தெரிவிக்கிறது.


தினத்தந்தி: "இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் உலகத் தலைவர்களில் நரேந்திர மோதி முதலிடம்"

படத்தின் காப்புரிமை Instagram

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை (லைக்) குவித்திருக்கும் அவர், தனது ட்விட்டர் தளத்தில் 4.3 கோடி பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கிறார்.

இதைப்போல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த பக்கத்தில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

இவருக்கு அடுத்தபடியாக 1.22 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 2-வது இடத்தையும், 1 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 3-வது இடத்தையும் பெற்று உள்ளனர்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்த படத்தை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த படம் அதிக விருப்பங்களை குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ் இந்து: "கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்"

படத்தின் காப்புரிமை Getty Images

மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வருகிறது என்று தமிழ் இந்து செய்தியில் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது, வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது'' எனக் கூறி தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஆதார் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. புதிய சட்டத்திருத்ததில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சட்டத்திருத்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேண்டுமென்றால் ஆதாரை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது" என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - இட ஒதுக்கீட்டில் அதிக பலன் யாருக்கு?

படத்தின் காப்புரிமை Getty Images

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்விக்கான இடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 97% வாய்ப்புகள், அந்தப் பட்டியலில் உள்ள 25% சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே செல்வதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யாதவ், குர்மி, ஜாட், சைனி, தேவர், ஈழவா மற்றும் ஒக்கலிகா ஆகிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அதிக பலன் அடைந்தவர்கள் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்