ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது: தமிழக அரசு

ஸ்டெர்லைட் படத்தின் காப்புரிமை vedanta

ஸ்டெர்லைட் ஆலை உண்டாக்கும் மாசுபாட்டால், அந்த ஆலையை மூட தூத்துக்குடியில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் நக்சலைட் அமைப்பினர் இருந்ததாக தமிழக அரசே கூறியுள்ளது என வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.

நக்சலைட்டுகள் ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.

ஆலையை மூடும் அதிகாரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே உண்டு என்றும் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது.

நவம்பர் மாதத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்றும் அந்த ஆலை உண்டாக்கும் மாசுபாடு குறித்த மக்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அளிக்கப்பட்ட இசைவு உத்தரவு மார்ச்31-ம் தேதியே முடிவுக்கு வந்துவிட்டது என்றும், அதையொட்டி ஏப்ரல் 9 மற்றும் 12-ம் தேதிகள் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் போராட்டத்துக்கு முன்பே வழங்கப்பட்டவை என்றும் தமிழக அரசு வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.

அத்துடன் ஏப்ரல் 9-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமைச்சரவை உத்தரவு என்றும் அதனை எதிர்த்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட முடியாது என்றும், உயர்நீதிமன்றமே இதனை விசாரிக்க முடியும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு தரவுகளைத் திரட்டலாம், இடத்தைப் பார்வையிடலாம், அறிக்கைத் தாக்கல் செய்யலாம். ஆனால், தீர்ப்பளிக்கும் அதிகாரம் அந்தக் குழுவுக்கு இல்லை என தமிழக அரசு வாதிட்டது.

தூத்துக்குடியில் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம் என்றும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக்கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தை கேட்காமலேயே உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்து, சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :