சென்னை விமான நிலையம்: 'கண்ணாடி உடைவது 83ஆவது முறையா அல்லது 69ஆவது முறையா?'

  • 8 டிசம்பர் 2018
விமான நிலையம் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: '83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது'

சென்னை விமான நிலையம் ரூ.2,200 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், பயணிகள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள், பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 14 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் விமான நிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலின் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்து உடைந்தது. அந்த இடத்தில் பயணிகள் உட்பட யாரும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. 83-வது முறையாக இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், இது 69-வது முறை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

'ஆளுநர் - பிரதமர் சந்திப்பு'

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார் என்கிறது இந்து தமிழின் மற்றொரு செய்தி.

"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது. அதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளது. மேலும், நேற்று முன்தினம் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மேகே தாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பிற்பகல் 2 மணிக்கு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி னார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், 7 பேர் விடுதலை, மேகேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஆளுநர் சென்னை திரும்பினார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'கூடுதலாக 10 மெட்ரோ ரயில்களை வாங்கத் திட்டம்'

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்காக கூடுதலாக 10 மெட்ரோ ரயில்களை 2020-ஆம் ஆண்டுக்கு முன்னதாக வாங்கத் திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன. இதில், இரண்டாவது வழித்தடப் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் வழித்தடத்தில், தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்) -வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரத்தில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் ஜனவரி மாதம் மெட்ரோ ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் விரிவாக்கத் திட்டத்துக்காக, மேலும் 10 ரயில்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தட விரிவாக்கத் திட்டத்தில் ( வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை வழித்தடத்தில்) இந்த ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களை 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக தினமணி விவரிக்கிறது.

தினத்தந்தி: '10 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை'

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்பட தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் ஊழியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல டாக்டர்கள் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை தான் காணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வியூகம் அமைத்தனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கசாமி தலைமையில் 11 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் முதலில் பார்வையாளர்கள் போல ஆஸ்பத்திரி வளாகத்தை நோட்டமிட்டனர். மருந்து-மாத்திரைகள் வழங்கும் இடம், 'எக்ஸ்ரே', 'ஸ்கேன்' எடுக்கும் இடம் போன்ற பகுதிகளை பார்வையிட்டனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'வளர்ச்சி பணிக்கு நூறு கோடி ரூபாய் - ஸ்டெர்லைட் '

தன் மீதான களங்கத்தை சரி செய்ய 100 கோடி ரூபாய் தூத்துக்குடி வளர்ச்சி பணிகளுக்கு தர முன்வந்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. இந்த நிதி பள்ளி, மருத்துவமனைகள் கட்ட, குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் என்கிறது அந்த செய்தி.

"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் கிடையாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதிட்டது.இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்."

இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இவ்வாறாக கூறி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :