’பசு பாதுகாப்பு’க்காக நடைபெற்ற கொலை வழக்குகளில் சட்டத்தின் பிடி தளர்வது ஏன்?

பசு பாதுகாவர்கள்

2015 செப்டம்பர் மாதம் முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்டது முதல் தற்போது வரை இந்தியாவில் 80 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 30க்கும் அதிகமான கொலைகளில் பசு பாதுகாப்பாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 'கும்பல் கொலை', நடக்கும்போது நூற்றுக்கனோர் கலந்து கொண்ட சம்பவமாக அது இருக்கும். கும்பலாக சேர்ந்துக் அடித்து உதைப்பதை தங்களது மொபைலில் பதிவு செய்து கொள்கின்றனர். பிறகு அதை இணையதளத்தில், சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்புகின்றனர். செய்தி ஊடகங்களும் இவற்றை காட்டுவதால் உலகம் முழுவதும் கும்பல் படுகொலை சம்பவம் பார்க்கப்படுகிறது.

ஆனால் பல சாட்சிகளும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் ஆதாரங்களும் இருந்தாலும், கும்பல் படுகொலை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் 'பிளைண்ட் மர்டர்' (போலீசுக்கு சாட்சியம் கிடைக்காத கொலைகளை பிளைண்ட் மர்டர் என்று கூறுவார்கள்) என மாற்றப்பட்டுவிடுகின்றன.

இந்திய நீதிமன்றங்களின் விசாரணையில் இருக்கும் முகமது அக்லாக், பஹ்லூ கான், ஹாஃபிஜ் ஜுனைத், ரக்பர் என நான்கு பிரபல கும்பல் படுகொலை வழக்குகளை பற்றி ஆராய்ந்தோம். இந்த ஆய்வில் குற்றப் பத்திரிக்கை உட்பட நீதிமன்ற விசாரணை வரை அனைத்து விதமான சட்ட ஆவணங்களையும் ஆழ்ந்து படித்து அறிந்ததோடு, பல்வேறு வழக்கறிஞர்கள், நேரடி சாட்சிகள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விரிவாக பேசி விஷயங்களை தெளிவாக புரிந்துக் கொண்டோம்.

இந்த நான்கு வழக்குகளிலுமே பொதுவான சில விஷயங்களை காண முடிந்தது. அவை: குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் பிணையில் வெளியில் இருப்பது, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளில் பலரை போலீஸ் விசாரணை செய்யாதது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டவர்கள் சாட்சி கூறினாலும், குற்றவாளிகளின் மீது உரிய சட்டப்பிரிவில் வழக்கு பதியாதது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், முறையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்காதது மற்றும் குற்றவாளிகள் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகை வலுவாக இல்லாமல் மேலெழுந்தவாரியாக இருப்பது

2018 ஜூலையில் நூஹ் என்ற இடத்தில் நடைபெற்ற கொலை

தலைநகர் டெல்லியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் கோல்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் 28 வயது ரக்பர் கான் என்பவர் மாடுகளை கடத்திய சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு நான்கு மாதம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றபோது, அவர் வீட்டிக்கு வெளியில் ஒரு மாடு கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

"மாடுகளை வைத்துத்தான் எங்கள் பிழைப்பே நடக்கிறது. கொண்ட எங்கள் குடும்பத்தின் வாழ்வாதரமே மாடுதான். எங்களுக்கு சோறு போடும் அதன் மீது நாங்கள் அனைவருமே அதிக பாசம் வைத்திருக்கிறோம். என்னைவிட மாடுகளிடம் மிகவும் அன்பாக இருப்பார் ரக்பர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் விலங்குகள் மீது அன்பும் அக்கறையும் மனிதர்கள் மீது இல்லாமல் போனது ஏன்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார் ரக்பரின் மனைவி.

இந்தக் கேள்விக்கு என்னிடம் எந்தவித பதிலும் இல்லை. மாட்டையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்த ரக்பர் பசு வதை செய்தார் என்பதை ஏற்க முடியவில்லை என்றாலும், அந்த குற்றத்திற்காகவே கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

வீட்டின் வெளியே கயிற்றுக் கட்டிலில் அமரிந்திருக்கும் ரக்பரின் தந்தை சல்மான் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி அஸ்லாம் ஆகிய இருவரின் முகத்தில் தற்போதும் அச்சம் தென்படுகிறது. "2018 ஜூலை 20ஆம் தேதி மாலை, இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருக்கும் லாட்பூருக்கு ரக்பரும், அஸ்லமும் சென்றார்கள்" என்று அந்த கொடூரமான நாளைப் பற்றி நினைவுகூர்கிறார் ரக்பரின் தந்தை.

60 ஆயிரம் ரூபாய் கொடுத்து இரண்டு கறவை மாடுகளை வாங்கிக் கொண்டு ரக்பருடன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம் என்று சொல்கிறார் அஸ்லம். மாடுகளை வாங்கிக் கொண்டு தாங்கள் வாகனத்தில் வர விரும்பியதாகவும், ஆனால் மாடுகள் வாகனத்தை பார்த்து மிரண்டதால், நடத்தி அழைத்து வந்துக் கொண்டிருந்ததாக அஸ்லம் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, லாட்பூரில் இருந்து 10-12 கிலோமீட்டர் தொலைவில்தான் கோல்காவ் இருக்கிறது, வண்டியில் சென்றால் ஆயிரம் அல்லது ஆயிரத்து இருநூறு ரூபாய் கூலி கொடுக்கவேண்டியிருக்கும், மாடுகளை ஓட்டிக் கொண்டு நடந்து சென்றால், அந்த பணம் பிள்ளைகளுக்கு உதவும் என்று ரக்பர் சொன்னார் என்று கூறுகிறார் அஸ்லம்.

படக்குறிப்பு,

ரக்பரின் மனைவி அஸ்மீனா

அஸ்லம்

"மாடுகளுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தபோது 6-7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்தது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். குண்டு சப்தத்தை கேட்ட மாடுகள் மிரண்டு ஓடின. மாடுகளை பிடிக்க நாங்கள் முயல, அவர்கள் எங்களை பிடித்துவிட்டார்கள்" என்கிறார் அஸ்லம்.

"எங்களை அவர்கள் திட்டினார்கள். மாடுகளை கொல்லும் இவர்களை கொல்லுங்கள், பாகிஸ்தானிகள் இவர்கள் என்று கத்தினார்கள். ரக்பர் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று சொன்னான், கறவை மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வந்து, அதை கொண்டு பால் வியாபாரம் செய்வதாக சொல்லி புரிய வைக்க முயற்சித்தான். ஆனால் அவர்களின் காதுகளில் ரக்பரின் வார்த்தைகள் எதுவுமே ஏறவில்லை" என்று வருத்தப்படுகிறார் அஸ்லம்.

"கும்பலில் இருந்தவர்கள், நவல் கிஷோர், பரம்ஜீத், தர்மேந்திர, விஜய், நரேஷ் என்று பெயர் சொல்லி பேசிக் கொண்டதை நான் தெளிவாக கேட்டேன். அவர்கள் அடிக்கத் தொடங்கியதும் நான் எப்படியோ தப்பித்து, அருகில் இருக்கும் லாலாவண்டி காட்டுப் பகுதிகளில் மறைந்திருந்து, விடிந்ததும் வழியை விசாரித்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்" என்று சொல்கிறார் அஸ்லம்.

படக்குறிப்பு,

ரக்பர்

"பிரேத பரிசோதனை அறிக்கையில் ரக்பருக்கு மொத்தம் 13 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. அவர்கள் அடித்தபோது, தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடியிருக்கிறார். அந்த போராட்டத்தில் விரல்கள் உடைந்து போயிருந்தன. இடுப்பு உடைந்துவிட்டது, கால்கள் நொறுக்கப்பட்டிருந்தது. அவனை சின்னாபின்னமாக்கியிருந்தார்கள்" என்று சொல்லி கண்ணீர் விடுகிறார் ரக்பரின் தந்தை.

போதுமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சி இருந்தபோதிலும், ரக்பர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

ரக்பரை இழந்த அவரது குடும்பம் வேதனையை சுமந்துக் கொண்டிருக்கிறது. அதோடுகூட, அல்வர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குக்காக நடையாய் நடந்துக் கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக குற்றப் பத்திரிகை பலவீனமாக பதியப்பட்டிருக்கிறது.

ரக்பரின் தந்தை மற்றும் கொலையை நேரில் கண்ட சாட்சி அஸ்லம் ஆகிய இருவரின் சார்பில் அல்வர் செஷன் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர் முமகது அஸத் ஹயாத்திடம் பேசினோம். "போதுமான சாட்சியங்களும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியும் இருந்தாலும், குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளின் பெயர் இடம்பெறவில்லை" என்று அவர் கூறுகிறார்.

படக்குறிப்பு,

வன்முறை கும்பலிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்த அஸ்லம்

ரக்பர் கொலையில் முதல் தகவல் அறிக்கை சொல்வதென்ன?

அல்வர் மாவட்ட ராம்கட் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மோஹன் சிங் பதிவு செய்த அறிக்கையின்படி, சம்பவத்தன்று இரவு தனது சகாக்களான விஜய் சிங், சுர்ரேந்திர சிங் மற்றும் வாகன ஓட்டுநர் ஹரேந்திர சிங்குடன், மோஹன் சிங் ரோந்துப்பணிக்கு சென்றிருந்தார். இரவு 12.41 மணிவாக்கில் உள்ளூர் பசு பாதுகாப்பு அமைப்புடன் இணைந்துள்ள நவல் கிஷோர் என்பவரிடம் இருந்து தொலைபேசி வந்தது. லால்வண்டி வனப்பகுதியில் பசு வதை செய்யும் சிலரை பிடித்து வைத்திருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார். நவல் கிஷோரையும் அழைத்துக் கொண்டு போலீசாரின் குழு சம்பவ இடத்திற்கு சென்றது.

முதல் தகவல் அறிக்கையின்படி, உடல் முழுவதும் சேறு அப்பிய நிலையில் ஒருவரை அவர்கள் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்கள். தனது பெயர் ரக்பர் என்று அவர் தெரிவித்தார். மாடு வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, லால்வண்டியைச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்ததாக தெரிவித்தார். தனது காயத்திற்கான காரணத்தை போலீசாரிடம் சொன்ன பிறகு அவர் மயக்கமாகிவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சம்பவ இடத்தில் தர்மேந்திரா மற்றும் பரம்ஜீத் என்ற இரு நபர்கள் இருந்தனர். அங்கு இரண்டு மாடுகளும் இருந்தன. மாடுகளை ஜெயின் சுதா சாகர் கோசாலையில் ஒப்படைக்கும் பொறுப்பை சக ஊழியரான சுரேந்திர சிங்கிடம் ஒப்படைத்த மோஹன் சிங், ரக்பரை போலீஸ் வாகனத்தில் படுக்க வைத்து, சிகிச்சைக்காக ராம்கரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.

படக்குறிப்பு,

ரக்பரின் தந்தை சுலேமான்

ரக்பர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை என்ன சொல்கிறது?

2018ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி அல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சம்பவ இடத்தில் இருந்த தர்மந்த்ரா யாதவ், பாரம்ஜீத் சிங் மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் இதே குற்றப்பத்திரிகையில் 2018, ஆகஸ்ட் 21ஆம் தேதி துணை ஆய்வாளர் மோகன் சிங் கூறியிருந்தது வேறொரு கோணத்தை கூறுகிறது.

'நவல் கிஷோருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தரையில் இருந்த சேற்றில் ஒருவர் கிடந்ததாக அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் காயங்களைப் பற்றி விசாரித்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் அவரை அடித்ததாக பதிலளித்தார்.

லால்வண்டியில் வசிக்கும் பரம்ஜீத் சிங், நரேஷ், தர்மேந்திரா மற்றும் விஜய் சர்மா ஆகிய நால்வரும் தன்னை அடித்ததாக ரக்பர் தெரிவித்தார். அப்போது மழை லேசாக பெய்துக் கொண்டிருந்தது. இருளாகவும் இருந்தது. அந்த சமயத்தில் அருகில் வசிக்கும் யோகேஷ் என்னும் மோண்டி யாதவ் என்பவர் அங்கு வந்தார்.

"ரக்பரை சேற்றில் இருந்து தூக்கி, சாலைக்கு அழைத்துவந்து, தண்ணீர் ஊற்றி சேறை சுத்தப்படுத்தினோம். பின்னர் ஜீப்பில் ஏற்றியபோது, அவருடன் அஸ்லம் என்ற நண்பரும் வந்திருந்ததாக சொன்னார். அவர்கள் நால்வரும் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், தனது நண்பன் அஸ்லம் அருகிலுள்ள பருத்தி காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் ரக்பர் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

ரக்பரின் சகோதரர் இர்ஷாத்

நாங்கள் பருத்திக் காட்டுக்கு சென்று அஸ்லமை தேடினோம், ஆனால் அவர் கிடைக்கவில்லை. திரும்பி வரவில்லை. பிறகு பரம்ஜீத், நரேஷ், தர்மேந்திரா மற்றும் விஜய் ஷர்மா ஆகிய நால்வரையும் பசுவை அழைத்துக் கொண்டு லால்வண்டிக்கு வருமாறு சொல்லிவிட்டு, நாங்கள் ஜீப்பில் ஏறி லால்வண்டிக்கு சென்றோம். இதற்கிடையில், தனது சகோதரர் கிருஷ்ணா டெம்போ ஓட்டுபவர் என்றும், பசுக்களை ஏற்றிக் கொண்டு கோசாலையில் விட்டுவிடுவார் என்று நவல் கிஷோர் என்னிடம் தெரிவித்தார்" என்று மோஹன் சிங் கூறுகிறார்.

"லால்வண்டிக்கு சென்று போலீஸார் காத்துக் கொண்டிருந்தனர். பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மாடுகளை பாதுகாப்பாக கோசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு, உறங்கிக் கொண்டிருந்த டெம்போ ஓட்டுநரை எழுப்பி கூறினோம். பிறகு காவல்நிலையத்திற்கு வந்தோம். பிறகு பசுக்கள் வந்து சேர்ந்துவிட்டனவா என்பதை உறுதி செய்வதற்காக கோசாலைக்கு சென்று பார்த்தோம். அதன்பிறகு, ஜீப்பில் இருந்த ரக்பரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" என்று சப்-இன்ஸ்பெக்டர் மோஹன் சிங் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

போலீசாரின் அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டுகிறார். சட்டப்பிரிவு 193இன் கீழ் இந்த முரண்பாடுகளை பரிசீலிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரக்பரின் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சமுதாய மருத்துவமனைக்கு அதிகாலை சுமார் நான்கு மணிக்குத் தான் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மோசமாக காயமடைந்த ஒருவரை சுமார் மூன்று மணி நேரம் ஜீப்பில் வைத்துக்கொண்டு சுற்றியிருக்கிறார்கள். மாடுகள் பத்திரமாக கோசாலைக்கு சென்றுவிட்டதா என்பதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை அடிபட்டு ரத்தக்களறியாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனிதனின் மீது காட்டவில்லை. இதற்கு காரணம் அலட்சியமும் தீய நோக்கமும் என்பதைத் தவிர வேறு என்ன?

சேற்றில் கிடந்த ரக்பரை தூக்கி, தண்ணீர் விட்டு கழுவி, அவருக்கு உடை மாற்றி விட்டதாக போலீஸ் கூறுவதால், அவரது உடல்நிலை மோசமாக இருந்தது தெரியாது என்பதை ஒத்துக் கொள்ளமுடியாது என்று அவர் ஆணித்தரமாக கூறுகிறார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் ஏன் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை?

சப்-இன்ஸ்பெக்டர் மோஹன் சிங் மட்டுமல்ல, அவரது சகாவான விஜய் சிங்கும் குற்றப்பத்திரிகையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார். சம்பவ இடத்தில் ரக்பர் மற்றும் அவரை அடித்தவர்களில் ஒருவரான விஜய் என்பவரும் இருந்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு, யோகேஷ் என்னும் மோண்ட்டி, மோண்ட்டியின் தந்தை தாரா சர்பஞ்ச், நவல் கிஷோர், தர்மேந்திரா, நரேஷ் மற்றும் பரம்ஜீத் ஆகியோரின் போன் அழைப்புகளில் இருந்து அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தது உறுதியாகிறது என்று விஜய் சிங் கூறுகிறார்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்தால், வழக்கு விசாரணையில் உள்ள ஓட்டைகள் முழுமையாக தெரியவரும்.

ரக்பரின் குடும்பத்தினரின் தரப்பில் இருந்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ரக்பரை பிடித்த குற்றவாளிகள், சந்தேகம் இருந்திருந்தால் போலீசுக்கு போன் செய்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் உள்ளூர் பசு பாதுகாவல் அமைப்பின் அதிகாரி நவல் கிஷோருக்கு போன் செய்தார்கள்.

இது அவர்கள் பரஸ்பரம் சூழ்ச்சி செய்ததை காட்டுகிறது. அனைத்து சாட்சிகள் மற்றும் அறிக்கைகளுக்கு பிறகும் குற்றப்பத்திரிகையில் பரம்ஜீத், நரேஷ் மற்றும் தர்மேந்திராவின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

2018 ஜூலை 17ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டி, விஜய் ஷர்மா, நவல் கிஷோர் ஷர்மா, யோகேஷ் என்னும் மோண்ட்டி, தாரா சர்பஞ்ச், சப்-இன்ஸ்பெக்டர் மோஹன் சிங், போலீஸ்காரர் ஹரேந்த்ர, சுரேந்திர மற்றும் விஜய் சிங் ஆகிய அனைவரும் சட்டப்பிரிவு 193இன் கீழ் பதிவு செய்யவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை பலவீனப்படுத்தி, குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீஸ்காரர்கள் மற்றும் சாட்சிகளே பரஸ்பரம் முரண்படுவது, போனில் பேசிய பதிவுகள் இருக்கின்றன. எனவே 193 சட்டப்பிரிவின்படி, நவல் கிஷோர் உட்பட 8 பேர் வழக்கில் சேர்க்கப்படவேண்டும்.

ரக்பர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதில் காயப்பட்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, இந்த வழக்கில் நியாயம் கிடைத்தால் சற்றேனும் ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பஹ்லூ கான்

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் அடித்து கொல்லப்பட்ட பஹ்லூ கானின் மரணம் கும்பல் படுகொலைக்கு ஒரு முத்திரைச் சம்பவமாக அமைந்துவிட்டது. தனது தந்தையின் கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றத்திற்கு சென்ற பஹ்லூ கானின் மகன்கள் ஹர்ஷத் மற்றும் ஆரீஃப் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

செப்டம்பர் 29ஆம் தேதி காலையில் ஹர்ஷத், ஆரீஃப் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி அஜ்மத் ஆகியோர் வழக்கறிஞர் அசத் ஹயாத்துடன் ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஜெய்சிங்புரில் இருந்து ராஜஸ்தானில் உள்ள பஹ்ரோட் நீதிமன்றத்திற்கு வழக்கில் சாட்சியளிக்க சென்றுக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் பற்றிய விவரங்களை கேட்டறிய பஹ்லூ கானின் வீட்டிற்கு சென்று அவரது மகன் ஹர்ஷாதிடம் பேசினோம். "நாங்கள் அனைவரும் புலேரோ வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தோம். நீம்ராண் சுங்கச்சாவடியை கடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டி எங்களைத் தாண்டி முன்னே சென்றது. வண்டியை நிறுத்து என்று கூறி கத்தினார்கள்.

படக்குறிப்பு,

பஹ்லூ கான்

அந்த வண்டியில் நம்பர் பிளேட் இல்லை. அதற்குள் வண்டியில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். நாங்கள் பயந்துபோய், அங்கிருந்து ஷாஜஹான்புருக்கு செல்லும் பாதையில் வண்டியை ஓட்டிச் சென்று, அல்வருக்கு சென்று போலீஸ் அதிகாரியிடம் விவரத்தை சொல்லிவிட்டோம்".

இதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு, பஹ்லூ கானின் குடும்பத்தினர் கூறியது பொய் என்று போலீசார் கூறினார்கள். சிசிடிவி கேமரா பதிவுகளின்படி, அந்த சமயத்தில் கருப்பு நிற ஸ்கோர்பியோ வண்டி அந்த வழியில் செல்லவில்லை என்று தெரிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பஹ்லூ கானின் தாய்

போலீசாரின் மறுப்புக்கு ஹர்ஷாத் என்ன சொல்கிறார்? "பஹ்ரோடில் இருந்து அல்வர் மாவட்ட நீதிமன்றம் அல்லது டெல்லிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று நான் ஏற்கனவே மனு கொடுத்திருக்கிறேன். பஹ்ரோட் மற்றும் நீம்ராண் போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. எங்கள் அப்பாவை கொன்றவர்களை வெளியே விட்டதைத் தவிர இந்த வழக்கில் கடந்த ஓராண்டாக போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை" என்று அவர் வருத்தப்படுகிறார்.

தன்னை தாங்கியவர் என இறப்பதற்கு முன் பஹ்லூ கான் அடையாளம் காட்டிய ஆறு பேரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டதே ஹர்ஷாதின் அவநம்பிக்கைக்கு காரணம். ஹர்ஷாதின் வழக்கறிஞர் அசத் ஹயாத்திடம் பிபிசி பேசியது. "இறப்பதற்கு முன்பு, தன்னை தாக்கியவர்கள் என ஹுகும்சந்த், நவீன் ஷர்மா, சுதீர் யாதவ், ராகுல் சைனி, ஓம் யாதவ், ஜஹ்மால் என ஆறு பேரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது" என்று அவர் சொல்கிறார்.

"தொடக்கத்தில் அவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்த போலீஸ், பிறகு அவர்கள் மீது தவறே இல்லை என்று கூறிவிட்டது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் இந்த ஆறு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, வேறு ஒன்பது பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் எட்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய ஒருவருக்கு எஹ்டிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது" என்கிறார் வழக்குரைஞர் அசத் ஹயாத்.

வழக்கு தில்லி அல்லது அல்வருக்கு மாற்றப்பட்ட பிறகு, 193 சட்டப்பிரிவின் கீழ், அந்த ஆறு பேரின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப் போவதாக வழக்கரைஞர் கூறுகிறார்.

படக்குறிப்பு,

ஹர்ஷாத் மற்றும் பஹ்லூ கானின் தாய்

"இவர்கள் ஆறு பேரும் குற்றவாளிகளா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான். படுகாயமடைந்த ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தபோது இந்த ஆறு பேர் தான் தனது இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறினார். சம்பவத்தை நேரடியாக பார்த்த சாட்சியும், தாக்குதலில் காயமடைந்த ஹர்ஷாதும், ஆரீஃபும் அந்த ஆறு பேர் குற்றவாளிகள் என்று கூறுகின்றனர். போலீசார் ஏன் இவை அனைத்தையும் அலட்சியத்துடன் நிராகரிக்கிறார்கள்? இவர்கள் ஆறு பேரும் தவறு செய்யவில்லை என்று எப்படி போலீசார் கூறுகிறார்கள்?" என்று அவர் வழக்குரைஞர் தனது வாதங்களை முன் வைக்கிறார்.

பஹ்லூ கானின் குடும்பத்தினர், தங்கள் சிதைந்து போன வாழ்க்கையை எப்படியாவது சீர்படுத்த முடியுமா என்று முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றனர். ஜெய்பூர், அல்வர், டெல்லி என கடந்த ஓராண்டாக ஒரே அலைச்சலாக இருக்கிறது, ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் பசு வதை செய்வதாக எங்கள் மீது போலீஸ் குற்றம் சாட்டுகிறது என்று வருத்தப்படுகிறார் ஹர்ஷாத்.

அழுதுக் கொண்டிருக்கும் தன் பாட்டியை சமாதானப்படுத்திக் கொண்டே நம்மிடம் பேசும் ஹர்ஷாத், "எங்களுக்கு என்ன நடந்தது என்பது உலகிற்கே தெரியும். எங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் இண்டர்நெட் மூலம் வெளியாகிவிட்டது. 'இவன் முஸ்லிம், இவனை அடி, இவன் பசுவைக் கொன்றவன், தீவிரவாதி, இவனை அடி, இவன் பாகிஸ்தானி' என்று சொல்லிக் கொண்டே அப்பாவை அடித்த வீடியோவும் இருக்கிறது. மாடு வாங்கியதற்கான ரசீதையும் அவர் காண்பித்தார். கையெடுத்து கும்பிட்டு, பால் கொடுக்கும் மாட்டை வாங்கிச் செல்கிறோம் என்றும், நாங்கள் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்பவர்கள் என்றும் சொன்னார். ஆனால் அவரது கதறலை யாரும் கேட்கவில்லை. எங்களின் பேச்சை கேட்க யார் இருக்கிறார்கள்?" என்று கூறுகிறார்.

"எங்களை அடித்தவர்கள் பசு பாதுகாவலர்கள். பஜ்ரங் தளத்தை சேர்ந்த அவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது. அதனால்தான் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. பிறகு சேர்க்கப்பட்ட ஒன்பது பேரின் மீதும் சாட்சி இல்லை என்று சொல்லி பிணை கொடுத்தார்கள், விடுவித்தார்கள். என் அப்பா சாகுமளவு மோசமாக அடித்தவர்கள் யார்? என்னையும், என் சகோதரனையும் யார் அடித்தார்கள்?" என்று அவர் கேள்வி கேட்கிறார்.

பஹ்லூ கான் இறந்துவிட்டாலும், அவரது மகன்கள் இருவரும் பிழைத்துக் கொண்டார்கள். ஆனால் காயங்களின் வடு அவர்களின் உடலில் மட்டுமல்ல, மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. "என் உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது. இனிமேல் என்னால் வேலை செய்யமுடியும் என்றே தோன்றவில்லை. சகோதர ஆரீஃபின் ஒரு கை சரியாக வேலை செய்வதில்லை. எங்கள் பிழைப்பே கேள்விக்குறியாகிவிட்டது. வழக்கு விசாரணைக்காக பஹ்ரோட்டுக்கு செல்வதற்கே அச்சமாக இருக்கிறது. எங்களை கொன்றுவிடலாம் என்று பயப்படுகிறோம். எனவேதான் வழக்கை மாற்றவேண்டும் என்று கோருகிறோம்" என்று ஹர்ஷாத் சொல்கிறார்.

ஹாஃபீஜ் ஜுனைத்

'டிரெயினில் அடித்துக் கொள்ளப்பட்ட இளைஞன்'

'டிரெயினில் அடித்துக் கொள்ளப்பட்ட இளைஞன்' என்று அடையாளம் காணப்படுகிறார் 16 வயது ஹாபீஜ் ஜுனைத். ஹரியாணாவின் பல்லப்கட் மாவட்டத்தில் கந்தாவ்லி கிராமத்தில் ஜுனைத்தின் பூர்வீக வீட்டில் அவரது அம்மா சாய்ராவை சந்தித்தோம்.

கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டே பேசுகிறார் சாய்ரா. வெளியில் சென்றிருந்த மகன்களில் ஒருவன் இறந்துவிட்டான் என்றும் மற்ற இருவர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், அந்த தாயின் மனது என்ன பாடு படும்?

"என் மகன்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், பார்ப்பதற்கு பெரியவர்களாகவே தெரிவார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரே மதராஸாவில் படித்துவந்தான் ஜுனைத். அவன் சிறப்பாக படிப்பதாக மதரஸாவின் மெளல்வி அடிக்கடி கூறுவார். அவனிடம் எல்லோருமே அன்பாக இருப்பார்கள். யாருக்கும் சிறு கஷ்டம் கூட கொடுக்கமாட்டான் ஜுனைத்..." என்று சொல்லிக் கொண்டே அழுகிறார் தாய்.

2017 ஜூன் 22ஆம் தேதியன்று டெல்லிக்கு ரயில் ஏறுவதற்கு முன்னர், தன்னுடைய கிராமத்தில் இருந்த மசூதியில் முதன்முறையாக குரானை மனப்பாடமாக முழுதுமாக ஓதி 'ஹஃபிஜ்' என்ற பட்டம் பெற்றார் ஜுனைத் என்று சொல்கிறார் சாய்ரா. சிறு வயதிலேயே ஹஃபிஜ் பட்டத்தை ஜுனைத் பெற்றது குறித்து குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தார்கள். குரானை மனனமாக ஒப்புவித்த ஜுனைத் மசூதியில் இருந்து பட்டம் மட்டுமல்ல, பரிசுத் தொகையும் பெற்ரார்.

"தனக்கு பரிசாக கிடைத்த 1500 ரூபாயில், ஈகை பெருநாளுக்காக பொருட்கள் வாங்குவதற்காக ஜுனைத், தனது அண்ணன் மற்றும் இரு நண்பர்களுடன் டெல்லிக்கு சென்றான். டெல்லி ஜம்மா மசூதி கடைவீதியில் துணிகளை வாங்கிக் கொண்டு மாலையிலேயே ஊருக்கு திரும்புவதற்காக ரயில் ஏறினார்கள். ரயிலில் ஏறிய அவன் வீடு வரும்போது பிணமாகத்தான் வந்தான், எந்தவொரு தாய்க்கும் இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது" என்று அந்த கொடூரமான நாளை நினைவுகூர்கிறார் ஜுனைதின் தாயார்.

ஜுனைதின் தந்தையும் சகோதரனும்

சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மகனுக்காக, தந்தை நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜுனைதின் தாய் சாய்ராவின் இடது கண் பார்வை ஏறக்குறைய மங்கிவிட்டது. விலா எலும்புகளில் அதிக வலியும், கடுமையான தலைவலியாலும் அவதிப்படும் சாய்ரா அடிக்கடி மயக்கமடைகிறார்.

ஜுனைதின் தந்தை ஜலாலுதீன், ஜுனைதின் சகோதரர்கள் ஷாகிர் மற்றும் ஹாஷிம் ஆகியோரிடம் பேசினோம்.

21 வயது ஹாஷிம் கொலையை நேரில் கண்ட சாட்சி. பெற்றோரின் நிலைமையை பார்த்து வேதனைப்படும் ஹாஷிம், நீதிமன்ற விசாரணையில் குடும்பத்தினருக்கு ஏற்படும் அதிர்ச்சியே இதற்கு காரணம் என்று சொல்கிறார்.

"தொடக்கத்தில் 20 பேர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது, ஆனால் பலரின் பெயர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு இறுதியில் அது ஆறு பேராக சுருங்கிவிட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் உடனே பிணையும் கிடைத்துவிட்டது. வழக்கின் பிரதான குற்றவாளியான நரேஷ் குமாருக்கும் பிணை கிடைத்துவிட்டது. இவர்கள் ஓடும் ரயிலில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக ஜுனைதை அடித்துக் கொன்றார்கள். என் அண்ணன் ஷாகிரும் தாக்கப்பட்டான். என்னையும் அடித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் விடுவிக்கப்பட்டதைப் பார்த்து மன வேதனையில் பெற்றோரின் உடல்நிலை பலவீனமாகிவிட்டது" என்று வேதனையை பகிர்ந்துக் கொள்கிறார் ஹாஷிம்.

படக்குறிப்பு,

ஜுனைதின் சகோதரன் ஷாகிர், தந்தையுடன்

தங்கள் மீது இனவாத வன்முறை நடத்தப்பட்டதை குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யாமல், ரயிலில் உட்கார்வதற்கு ஏற்பட்ட தகராறால் தாக்குதல் என்று கூறி வழக்கை பலவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்றுள்ளதாக ஜுனைதின் குடும்பத்தினர் குமுறுகின்றனர்.

"சம்பவத்தன்று நாங்கள் பயணித்த ரயிலில் ஓக்லா ரயில் நிலையத்தில் 15-10 பேர் ஏறினார்கள். நான், ஜுனைத் மற்றும் நண்பர்கள் இருவர் என நான்கு பேரும் உட்கார்ந்திருந்தோம். ரயிலில் ஏறியவர்கள் எங்களிடம் வந்து சண்டை போட்டார்கள். நீங்கள் முஸ்லிம்கள், மாட்டிறச்சி சாப்பிடுபவர்கள். தீவிரவாதிகள், பாகிஸ்தானிகள், இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொல்லி கூச்சலிட்டார்கள். எங்களை விட வயதில் மூத்தவராக இருந்த அவர்களில் ஒருவர் உட்கார்வதற்காக இடத்தை விட்டு எழுந்துவிட்டான் ஜுனைத்" என்று சொல்கிறார் ஹாஷித்.

"ஆனால் அவர்கள் என்னுடைய குல்லாவை பிடுங்கி கீழே போட்டு காலால் மிதித்து ரயிலுக்கு வெளியே வீசினார்கள். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் எங்களை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் கைகுப்பி கெஞ்சினோம். விட்டுவிடுங்கள் என்று சொல்லி அழுதோம். நாங்கள் நோன்பு இருக்கிறோம் என்று சொன்னோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் எதுவுமே அவர்களின் காதுகளில் ஏறவேயில்லை. ஜுனைதின் அந்தரங்க உறுப்புகளிலும் எட்டி உதைத்து மோசமாக நடந்துக் கொண்டார்கள். மாட்டிறைச்சி உண்பவர்களை கொல் என்று சொல்லிக் கொண்டே என்னை அடித்தார்கள். பல்லப்கட் ரயில் நிலையம் வரும்வரை அடித்துக் கொண்டே வந்தார்கள். இதற்குள் ஷாகிர் அண்ணாவுக்கு போன் செய்து, ரயிலில் எங்களை அடிக்கிறார்கள், கூட்டிக் கொண்டு போக ரயில் நிலையத்திற்கு வா என்று தகவல் சொல்லிவிட்டோம்" என்கிறார் ஹாஷிம்.

பல்லப்கட் ரயில் நிலையத்திற்கு வந்த ஷாகிரையும் கும்பல் விட்டுவிடவில்லை. அன்றைய சம்பவத்தை சொல்லும்போது, அதன் வலி இப்போதும் அவரது முகத்தில் எதிரொலிக்கிறது. "அந்த ரயில் பெட்டியில் கூட்டமாக இருந்தது. இருந்தாலும் நான் எப்படியோ உள்ளே ஏறி அவர்களின் பெயர் சொல்லி கூப்பிட்டேன். அதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. கும்பலில் இருந்த சிலர் என்னை பிடித்துக் கொண்டார்கள். அதற்குள் ஒருவர் கத்தி எடுத்து என்னை குத்தத் தொடங்கினார். என்னை காப்பாற்றுவதற்காக ஜுனைத் வந்தபோது அவனுக்கும் கத்துக் குத்துகள் விழுந்தது. இவர்களை அடித்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்தவர்கள் எல்லோரும் கூச்சலிட்டார்கள். யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை. இதற்குள் ஜுனைதை ரயிலில் இருந்து கீழே தள்ள முயற்சித்தார்கள். ஹாஷிம் அதை தடுக்க முயன்றபோது அவனையும் கத்தியால் குத்தினார்கள். பிறகு எங்கள் அனைவரையும் பிடித்து அடிக்கத் தொடங்கினார்கள். எனக்கும், ஜுனைத்துக்கும் கத்திக் குத்துகள் பலமாக விழுந்ததில் நாங்கள் இருவருமே மயங்கி கீழே விழுந்துவிட்டோம்" என்று அந்த வேதனையை வார்த்தைகளால் வடிக்கிறார் ஷாகிர்.

தங்கள் மதத்தைப் பற்றி சொல்லி ஏன் திட்டுகிறார்கள், மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்கள் என்று கரித்துக் கொட்டுவது ஏன் என்றே ஷாகிர் மற்றும் ஹாஷிமுக்கு புரியவேயில்லை. ஆனால் இந்த அடிப்படை விஷயத்தை தவிர்த்துவிட்டு, ரயிலில் உட்கார்வதற்கான தகராறு என்று குற்றப்பத்திரிகையில் போலீஸ் குறிப்பிட்டது ஏன்? வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜுனைத் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர்.

"கொலைக்கான குற்றச்சாட்டை போலீசார் ஒருவர் மீது மட்டுமே பதிந்திருக்கிறார்கள். என்னை மூன்று பேர் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஜுனைதை மூன்று பேர் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அதோடு, எங்களை கத்தியால் குத்தியவர்கள், அங்கே நின்று கொண்டு, மாட்டிறைச்சி சாப்பிடும் இந்த முஸ்லிம்களை கொல்லுங்கள் என்று கூச்சலிட்ட கும்பல் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை? இத்தனைப் பேரும் தாக்குதலில் ஈடுபட்டபோது ஒருவர் மீது மட்டும் எப்படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும்? பிறர் மீது பலவீனமான சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து ஏன் விட்டுவிட்டார்கள்? குற்றம் பதிவு செய்த ஒருவருக்கும் மூன்றே மாதத்தில் பிணை வழங்கப்பட்டது ஏன்? கொலை வழக்கில் இவ்வளவு எளிதாக பிணை கிடைப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்கிறார் ஷாகிர்.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34இன் கீழ் வழக்கு பதிவு செய்யாததே போலீசாரின் தவறு என்று சொல்கிறார் கும்பல் வன்முறை சம்பவங்களில் கவனம் செலுத்தும் வழக்குரைஞர் அசத் ஹயாத். "இலக்கு வைத்து தாக்குவது அல்லது தாக்கும் நோக்கத்தில் செயல்படுவது போன்ற குற்றங்களுக்கு 34ஆம் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். ஜுனைத், ஷாகிர், ஹாஷிம் ஆகியோரை ரயிலில் தாக்கியது இலக்கு வைத்து தாக்கியது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. ஆனாலும் ஏன் வழக்கை நீர்த்துப் போகும் விதமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்கள் என்று தெளிவாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், இது இனவாத தாக்குதல் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் ஏன் அதை போலீசார் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை, ரயிலில் சீட்டுக்காக தகராறு என்று பலவீனமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்றும் புரியவில்லை. எனவே ஜுனைத் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர்" என்கிறார் வழக்குரைஞர் அசத் ஹயாத்.

இதனிடையே ஜுனைத் கொலையில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் நரேஷ் குமார், 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஃபரீதாபாத் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்கள் ஜுனைதின் குடும்பத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

ஜுனைதின் தந்தை ஜலாலுதீன் சொல்கிறார். "நவநிர்மாண் சேனாவை சேர்ந்தவர்கள், கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தேடித்தேடி தேர்தலில் போட்டியிடச் செய்கின்றனர். எங்கள் பிள்ளைகளை கொடூரமாக தாக்கியவர்களை தேர்தலில் களமிறக்கி, எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள்? என்ன நடந்தாலும் சரி, நரேஷ் குமார் தேர்தலில் நின்றால், என் மகனையும், ஷாகிரையும் தேர்தலில் போட்டியிடச் சொல்வேன். இந்த உலகத்தில் மனிதாபிமானம் என்பது எந்த அளவுக்கு எஞ்சியிருக்கிறது என்பதை பார்த்துவிட முடிவு செய்துவிட்டேன்" என்று துக்கத்தில் வலுவேறிய நிலையில் சூளுரைக்கிறார் ஜலாலுதீன்.

முகமது அக்லாக்

பட மூலாதாரம், AFP

2015ஆம் ஆண்டு தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்ட முகமது அக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் என்பவரை, டெல்லியில் அவரது வழக்கரைஞரின் அலுவலகத்தில் சந்தித்தேன். இந்திய விமானப்படையில் பணிபுரிவதால் என்னுடன் இந்த வழக்கு தொடர்பாக பேச மறுத்துவிட்டார் சர்தாஜ். ஆனால் வழக்கு நடைபெறும்போது ஒருநாள் விசாரணையை பார்க்க வருவதற்கு கோரியபோது அதற்கு அனுமதி கொடுத்தார்.

நவம்பர் மாதக் கடைசியில் கிரேட்டர் நொய்டாவில் சூரஜ்புர் நீதிமன்றத்தில் அக்லாக் கொலை வழக்கு விசாரணை நடைபெறவிருந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வாய்தாக்களை இந்த வழக்கு கடந்திருக்கிறது என்பதை கேட்கும்போதே ஆயாசம் ஏற்படுகிறது. வழக்கம்போலவே மனதை தளரவிடாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில் சர்தாஜ் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். அவரது வண்டியில், வழக்குரைஞருடன் நானும் சென்றேன்.

பார்க்கும் அனைவரிடம் புன்னகை பூத்த முகத்துடன் கை குலுக்கும் இளைஞரான சர்தாஜ், தனது வண்டியில் இரண்டு மூவர்ண கொடியை வைத்திருக்கிறார். முஸ்லிம் என்பதற்காக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லாக்கின் மகன் இந்திய சிப்பாய்.

தானிஷ்

முகமது அக்லாக்கின் மரணத்தின் வலி, இன்றும் அவரது குடும்பத்தில் அப்படியே இருக்கிறது. இருந்தாலும், தாய் மற்றும் தம்பி தானிஷை இயல்பான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டே, மறுபுறம் கொலைக்கு காரணமானவர்களின் மீதான வழக்குக்காக அலைந்தாலும், அவற்றை தனது முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்கிறார் சர்தாஜ்.

பிஸ்ஹாடா கிராமத்தில் ரக்கம் சிங் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், எந்தவித வேறுபாடும் காட்டாமல் கிரமத்தில் உள்ள் இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் சேரவேண்டும் என்று ஊக்கமளித்தார் என்று குறிப்பிடுகிறார் சர்தாஜ். அனைவருக்கும் படிப்புச் சொல்லிக் கொடுத்து ராணுவத்தில் சேருவதற்கு உற்சாகப்படுத்தும் ரக்கம் சிங்கின் உதவியால் தான் படித்து வேலையில் சேர்ந்திருக்கிறார் சர்தாஜ். 2015ஆம் ஆண்டுவரை ரக்கம் சிங் உயிருடன் இருந்திருந்தால், பசு வதை என்ற பெயரில் கும்பல் வன்முறை நடக்காமல் அவர் தடுத்திருப்பார் என்று அக்லாக்கின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

சர்தாஜ் ராணுவத்தில் சேர்ந்துவிட்டதால் டெல்லியில் அவருக்கு வீடு கிடைத்தாலும், கிராமத்தை விட்டு வரமாட்டேன் என்று குடும்பத்தினர் மறுத்துவிட்டார்கள்.

கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த அக்லாக், மற்றும் பல மாதங்கள் மகன் தானிஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை பார்த்த குடும்பத்திற்கு அதற்கு நியாயம் வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 18 பேருக்கும் பிணையில் விடுவிக்கப்பட்டது, தங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வியை அக்லாக்கின் குடும்பத்தினருக்கு எழுப்பியிருக்கிறது.

முகமது அசத் ஹயாத் தான் இந்த வழக்கிலும் வழக்குரைஞராக பணிபுரிகிறார். உத்தரப்பிரதேச மாநில எல்லைக்குள் சர்தாஜின் கார் நுழைந்ததும் ஒரு இடத்தில் அவர் வண்டியை நிறுத்தினார். ஒரு போலீஸ்காரர் வந்து வண்டியில் ஏறிக் கொண்டார். இப்போதும் அக்லாக்கின் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர்கள் டெல்லியில் இருந்து வெளியே வந்தால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்குரைஞர் காட்டினார். "நேர்மையான போலீசாரை ஒரு வழக்கில் நீதியும் நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் கும்பல் வன்முறை விவகாரங்களில் விசாரணை முகமைகள், பாதிக்கப்பட்டவரையே பகடைக் காய்களாக பயன்படுத்துவதை பார்க்கிறேன். இவர்கள் ஏழைகள், இவர்களின் குரல் யாருக்கு கேட்கப் போகிறது என்ற அலட்சியமே காரணம். அக்லாக்கின் வழக்கின் நிலையும் அதுதான். மொத்தம் 18 குற்றவாளிகளும் பிணையில் வெளிவந்துவிட்டார்கள். மூன்று ஆண்டுகள் க்டந்துவிட்டது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார் அசத்.

193 சட்டப்பிரிவின் கீழ் அக்லாக்கின் மனைவி தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சஞ்சய் ராணா, சோனூ, சதேந்திர, புனீத், ஆதர்ஷ், சூரஜ்பால் மற்றும் ஓம்பால் ஆகியோரை கொலைக் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று அக்லாக்கின் வழக்குரைஞர்கள் கோரியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையில் உள்ள அறிக்கைகள் புனையப்பட்டவையாக தோன்றுகின்றன.

பட மூலாதாரம், EPA

"கிராமத்தில் மாடு வெட்டப்பட்டது, அக்லாக் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியை பரப்பிய சஞ்சய் ராணா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் கோயில் ஒலிபெருக்கியில் இவ்வாறு அறிவித்து, மக்களை கும்பல் வன்முறையில் ஈடுபட தூண்டினார்" என்கிறார் வழக்குரைஞர் அசத்.

சஞ்சய் ராணா மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என்று கோரும் மனு, கோயிலின் பூசாரி சுக்தாஸ் மீதும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. "வழக்கு விசாரணையில் இருந்து வேண்டுமென்றே பூசாரி சுக்தாஸ் தவிர்க்கப்பட்டிருக்கிறார். சஞ்சய் ராணாவுக்கு எதிராகவும் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

பூசாரியின் முன் குற்றவாளிகளை நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. சஞ்சய் ராணா மற்றும் வேறு சிலரை கிரமத்தில் இருந்து வெளியேற்றி தப்பிக்க வைத்துவிட்டார்கள். உண்மையில் சம்பவ இடத்தில் வெட்டப்பட்ட மாடோ அல்லது மாட்டிறைச்சியோ இல்லை. இந்த வதந்தி கும்பலை தூண்டிவிட வேண்டுமென்றே கோயிலின் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்டது" என்று விரிவாக கூறுகிறார் வழக்கறிஞர்.

நாங்கள் நீதிமன்றத்தை சென்றடைந்ததும், வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். எனவே 193 சட்டப்பிரிவில் குற்றவாளிகள் சேர்க்கப்படவேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட மேலும் ஒரு வாரம் காத்திருக்கவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

"கும்பல் வன்முறை வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் தினசரி அடிப்படையில் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஜுலை மாதமே உச்ச நீதிமன்றம் வழங்கிவிட்டது. ஆனால் இப்போது என்ன நடந்தது என்பதை நீங்களே பார்த்தீர்கள், என்ன சொல்வது?" என்று டெல்லிக்கு திரும்பிவரும் வழியில் வருத்தத்துடன் தெரிவித்தார் வழக்குரைஞர் அசத்.

பிஸ்ஹாடா கிராம பஞ்சாயத்தின் அழுத்தத்தின் பேரில், தேசிய அனல் மின் நிலையத்தில் (என்.டி.பி.சி) அக்லாக் கொலையில் பிணையில் வெளியில் இருப்பவர்களுக்கு தற்காலிக வேலைக்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. உள்ளூர் ஆட்களுக்கு வேலை தர வேண்டியது தங்கள் கொள்கையின் ஒரு பகுதி என்று ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

மறுபுறமோ, நவநிர்மாண் சேனா என்ற புதிய அரசியல் அமைப்பு, அக்லாக்கை அடித்து கொலை செய்தவர்களில் முக்கியமான ஒருவருக்கு 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

கொல்லப்பட்ட அக்லாக்கின் மகன் சர்தாஜோ, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் அடுத்து எப்போது விசாரணை என்று தெரிந்துக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், வழக்கு விசாரணைக்காக அவர் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுக்க வேண்டுமே?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: