அ.தி.மு.க. - அ.ம.மு.க. அணிகள் இணைப்பு சாத்தியமா?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆளும் அ.இ.அ.தி.மு.கவுடன் இணைவதற்கு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் சில நிபந்தனைகளை விதிக்க, பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர் அ.தி.மு.க. அமைச்சர்கள். டிடிவி அணியின் வேறு சிலரும் இதில் முரண்படுகிறார்கள்.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன், ஞாயிற்றுக் கிழமையன்று ஊடகம் ஒன்றிடம் பேசும்போது, இரு பிரிவுகளும் இணைந்தால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நல்லது என்றும் அதற்கு முதலமைச்சரும் ஊழல் செய்யும் சில அமைச்சர்களும் வெளியேறிவிட்டு நிர்வாகத்தை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

டிடிவி தினகரன் வந்தால் அ.தி.மு.க. பலம் பெறும் என பா.ஜ.க. நினைப்பதாகவும் அவர்கள்தான் மிரட்டி தாங்கள் சொல்லும் நிபந்தனைக்கேற்ப இரு பிரிவுகளையும் சேர்க்க வேண்டுமென்றும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வெற்றிடத்தை டிடிவி தினகரன் நிரப்புவார் என்றும் கூறினார்.

ஆனால், தங்க தமிழ்செல்வனின் இந்தக் கருத்தை ஆளும் அ.தி.மு.க தரப்பு கடுமையாக கண்டித்துள்ளது.

திங்கட்கிழமையன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "அவர்களை நாங்கள் இணைப்பிற்கே அழைக்கவில்லை. தங்க தமிழ்ச் செல்வனுக்கு ஆசையிருந்தால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் வரலாம். ஆனால், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை இணைப்பதாக இல்லை. இமய மலையுடன் காளானும் இணைய முடியாது" என்று தெரிவித்தார்.

இதற்கு சிறிது நேரத்தில் டிடிவி தினகரனைச் சந்தித்த பெரம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், "நாங்கள் போய் அங்கு இணையும் எண்ணமில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "தங்க தமிழ்ச் செல்வன் அ.தி.மு.க. எங்களுடன் வந்து இணைய வேண்டும் என்றுதான் சொன்னார். ஆனால், இப்போதைக்கு இந்த இணைப்பு சாத்தியமில்லை. ஒரு பெரிய தேர்தலில், அதாவது இடைத்தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ அ.தி.மு.க. தோற்ற பிறகு அந்தப் பிரிவு கலகலத்துப் போய்விடும். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக இங்கு வந்து இணைவார்கள்" என்று தெரிவித்தார்.

இரு தரப்பும் இணைய பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு அழுத்தம் கொடுக்க அவர்கள் யார்? வேண்டுமானால், ஆளும் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கலாம். எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் கருத்தையே தான் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளரான பிறகு, அவர் ராஜினாமா செய்யவைக்கப்பட்டு, எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். இதற்குப் பிறகு, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா சிறைக்குச் சென்றார். அதன் பின், அவரது ஆதரவாளராக இருந்த டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை மாற்ற வேண்டுமென ஆளுனரைச் சந்தித்து மனு அளித்ததால், சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: