5 மாநில தேர்தல் : வெல்லப்போவது யார்? - இன்று தெரியும்

தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இரு பெரும் கட்சிகளுக்கும் இடையே இறுதிப் போட்டிக்கு முந்திய முக்கியப் போட்டியாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய ஐந்து மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு இடங்கள், யாருக்கிடையில் போட்டி போன்ற விவரங்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தெலங்கானா

119 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த டிசம்பர் ஏழாம் தேதி நடந்துமுடிந்தது.

கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 63 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களையும் வென்றிருந்தது. பாஜக 5 இடங்களை வென்றது.

ஆனால் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் பலம் விரைவிலேயே 90 ஆனது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை பதவிக்காலம் இருந்தும் 9 மாதங்களுக்கு முன்னதாகவே சட்டமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.

இம்முறை தெலுங்கு தேசம், காங்கிரஸ், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

சந்திரசேகர் ராவ் கட்சி 119 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது

படத்தின் காப்புரிமை Getty Images

சட்டீஸ்கர்

இரண்டு கட்டமாக சட்டீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தெற்கு சட்டீஸ்கரில் 18 இடங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12 அன்று நடந்து முடிந்தது. இரண்டாவது கட்ட தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடந்தது.

90 இடங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் ராமன் சிங் தலைமையில் பாஜகவும் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் போட்டிபோடுகின்றன.

மூன்று முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த ராமன் சிங் இம்முறையும் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன. எனினும் போட்டி கடுமையாக இருக்குமென தெரிகிறது என்கின்றன பல்வேறு நிறுவனங்களின் தேர்தல் கணிப்புகள்.

46 இடங்கள் ஆட்சியமைக்க தேவை எனும் நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 39 இடங்களை வென்றிருந்தது. ராமன் சிங் 49 இடங்களை வென்றார்.

படத்தின் காப்புரிமை SOPA Images

மிசோரம்

நாற்பது இடங்களை கொண்ட மிசோரத்துக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி நடந்து முடிந்தது. 21 இடங்களை வென்றால் மிசோரத்தில் ஆட்சியை பிடிக்க முடியும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களை வென்றது. காங்கிரசுக்கு கடும் சவால் அளிக்கும் கட்சியாக மிசோ தேசிய முன்னணி கட்சி விளங்குகிறது. வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் மிசோரம்.

இம்முறை காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறுவது எளிதானதல்ல என்கின்றன வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்.

காங்கிரஸ் கட்சியின் லால் தான்ஹாவ்லா 2008-ம் ஆண்டில் இருந்து முதல்வராக பதவி வகித்து வருகிறார். எம் என் எஃப் கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா 1998-2008 வரையில் மிசோரம் மாநில முதல்வராக இருந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய பிரதேசம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் 158 இடங்களை வென்று ஆட்சியமைத்தது பாஜக. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 58-ல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது.

2003, 2008,2013 என தொடர்ச்சியாக மூன்று முறை பாஜக ஆட்சியமைத்த நிலையில் இம்முறை ஆட்சியை தக்கவைக்குமா என மிகப்பெரிய கேள்வி ஏற்பட்டுள்ளது.

சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக கட்சிக்கு இம்முறை கமல்நாத் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ் சவால் அளிக்கலாம்.

116 இடங்களை வென்றால் மட்டுமே மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க முடியும். இம்முறை 2013 தேர்தலை விட சுமார் 2.98% கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன. 75.05% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் இந்த முறை தனது தேர்தல் அறிக்கையில் சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் திட்டம் , ராமர் பாதையை அமைக்கும் திட்டம் , ஆன்மீகத்துறை அமைக்கும் திட்டம், கோ மூத்திரம் மற்றும் மாட்டு சாண வறட்டி போன்றவற்றை வணிகநோக்கில் உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ராஜஸ்தான்

வசுந்தர ராஜே தலைமையில் பாஜகவும் சச்சின் பைலட் தலைமையில் காங்கிரசும் 101 இடங்களுக்கு மேல் வென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போட்டு போடுகின்றன.

1993-க்கு பிறகு பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி இங்கு ஆட்சியமைந்துள்ளன. கடந்த முறை பாஜக 163 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராஜஸ்தானில் அனைத்து இடங்களையும் (25) வென்றது.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை 21 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி இம்முறை பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சி வரும் தேர்தலில் வென்றால் மாநிலத்தின் 21 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் தரப்படும் என்கிறார் அம்மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே.

காங்கிரஸ் கட்சி ''ராகுல் மாடல்'' அடிப்படையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறுகிறது. பாஜக அரசால் மூடப்பட்ட பல்கலைகழகங்கள் திறக்கப்படும்; உள்ளாட்சி தேர்தல்களில் குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் எனும் விதி நீக்கப்படும். பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்கிறது காங்கிரஸ் கட்சியின் அறிக்கை.

200 இடங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த டிசம்பர் ஏழாம் தேதி நடந்துமுடிந்தது.

பாஜகவின் வெற்றி தொடருமா, காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: