சந்திர சேகர ராவ் வெற்றிப் பயணத்திற்கு உதவியது அரசியல் வியூகமா அல்லது மக்களைக் குறிவைத்த திட்டங்களா?

சந்திரசேகர் ராவ் படத்தின் காப்புரிமை Getty Images

``சோனியா காந்தியால்தான் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுவது சாத்தியமாயிற்று. தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால் தான் தெலங்கானா மாநிலம் என்ற கனவு நனவானது. தெலங்கானாவின் நான்கு கோடி மக்கள் சார்பாக அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

``நமது சுதந்திரப் போராட்டத்தில், மகாத்மா காந்தி, நேரு மற்றும் இந்தியர்கள் நிறைய பேர் பங்கேற்றார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். அதற்காக, மக்கள் சென்று ராணி எலிசபெத்திடம் சென்று மாலையிட்டார்களா?''

``தெலங்கானாவுக்கு அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் தேவை. போராட்டம் நடத்திய கட்சி எப்படி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகலாம் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். போராட்டத்தை நடத்தியவன் நான். தெலங்கானாவை மறுசீரமைப்பு செய்யும் தலைமையை நான் ஏற்று செயல்படுத்துவேன்.''

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை மாற்றி அமைக்கும் மசோதா -2014 -க்கு மக்களவை ஒப்புதலை அளித்த இரண்டு நாட்கள் கழித்து மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு, சில வாரங்களில், மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களையும், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டி.ஆர்.எஸ். - TRS) கட்சியின் தலைவர் கல்வகுண்ட்ல சந்திரசேகர் ராவ் கூறினார்.

தன்னுடைய பேச்சால் மக்களை மயக்கும் கே.சி.ஆரின் பாணி யாருக்கும் வராது. அரசியலில் மக்கள் மத்தியில் உரையாற்றும் கலை எவ்வளவு முக்கியமானது என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இருந்தபோதிலும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில், பேசிய வார்த்தைகள் அல்லது பொதுவில் வெளியிடப்படும் அறிக்கைகளின்படி அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பது சாதாரணமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஆனால், பொது வாழ்வில் மக்கள் அதை ஏற்பதில்லை என்றும் தெரிகிறது. அப்போதுகூட, `வார்த்தையில் கூறுவது' என்பதன் காலம் காலமான சமூக மதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எனவே, அரசியல் சொற்பொழிவுக் கலையை பெற்றுள்ள இந்தத் தலைவர், `அரசியல் முரண்பாடுகள்', `தார்மிக முரண்பாடுகள்' ஆகியவற்றை `அரசியல் ஆதாயங்களுக்கு' அப்பாற்பட்டதாகப் பார்க்க மறுக்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

காங்கிரஸ் கட்சியுடன் டி.ஆர்.எஸ். கட்சியை இணைக்கப் போவதாக கடந்த காலத்தில் அவர் பேசியிருக்கிறார். சோனியா காந்தியுடன் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். தலித் ஒருவரை முதலாவது முதலமைச்சராக ஆக்கப் போவதாக அறிவித்தார்.

இவை அனைத்தும், மேலே குறிப்பிட்டவாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட போது கூறியவை. அதன் தொடர்ச்சியாக, தன்னுடையது ``பக்காவான (முழுமையான) அரசியல் கட்சி'' என்று அறிவித்து, போராட்டத்தின் பின்னணியில் தேர்தலுக்கான செயல் திட்டத்தையும் அறிவித்தார்.

டெல்லியில் இருந்து ஹைதராபாத் நகருக்குத் திரும்பியபோது, மேளதாளங்கள் முழங்க கே.சி.ஆருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பரவசங்களைப் பயன்படுத்தி சில மாதங்களில் `வெற்றி ஊர்வலமாக' அதை மாற்றி, தெலங்கானாவின் முதலாவது முதலமைச்சரானார்.

அரசியலில் எதுவும் தற்செயலாக நடப்பது கிடையாது, எல்லாமே ஒரு செயல்திட்டத்தின் மூலம்தான் அடைய முடிகிறது என்று மக்கள் கூறுவது உண்டு. கே.சி.ஆர். இதை நன்கு அறிந்தவர். சூழ்நிலைகள் தனக்குச் சாதகமாக இருந்தபோது போராடுவதற்கு அவர் முடிவு செய்தார். அதனால் தான், தன்னுடைய எதிரிகளை ஆரம்பகால தேர்தலில் சந்தித்தார்.

நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு உருவான ஜனநாயக அரசு பதவியேற்றதில் வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. அது வேறொரு இடத்தில், வேறொரு சமயத்தில் உத்வேகம் அளிக்கும். போராட்டத்தை நடத்தியவரே முதல்வராக ஆனபோது, புதிய மாண்புகளுடன் புதிய சமுதாயம் உருவாகும், பழையன எல்லாம் புதைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.

தெலங்கானாவின் முதலாவது முதல்வராகப் பொறுப்பேற்ற (போராட்டத்தின் பயனாக கிடைத்தது) கே.சி.ஆர். ஆட்சிக் காலம் வரலாற்றை உருவாக்குவதாக அமைந்ததா? போராட்டத்தின் லட்சியங்கள், கொள்கைகளை நிறைவேற்றும் திசையில் அது சென்றதா? `'பக்காவான அரசியல் கட்சி' என்று கே.சி.ஆர். உருவாக்கிய வார்த்தைகளில் கொள்கைகள் இருந்தனவா?

எந்த ஒரு தலைவரையும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையைப் பொருத்து தான் மதிப்பிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் டன்கசலா அசோக் கூறுகிறார். ``கே.சி.ஆர். அற்ப அரசியலில் ஈடுபடுபவர் அல்ல. அவர் காரியக்காரர். சூழ்நிலைகளை மதிப்பீடு செய்பவர். செயல் திட்டத்தை அவர் முடிவு செய்துவிட்டால், அதை உறுதியாக அமல்படுத்தக் கூடியவர். வலுவான தலைவரின் தகுதி இதுதான்'' என்று அவர் சொல்கிறார்.

``அவருடைய திறமை, உறுதி மற்றும் கடின உழைப்புதான் கே.சி.ஆரின் நுட்பமான முடிவுகளுக்குக் காரணிகளாக இருந்தன. அவர் வலுவான ஒரு தலைவர். எதிரிகளின் பலத்தை தன்னுடைய பலமாக மாற்றக் கூடிய நுட்பத்தை அறிந்தவர். திட்டங்களைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, மக்கள் மனதில் அதை விதைக்கும் திறமையும் பெற்றவர். தெலங்கானா என்ற எண்ணத்தை மக்களிடம் மிக நன்றாக ஊன்றச் செய்தார். தன்னுடைய பேச்சுத் திறமையால் மக்களை ஈர்க்கக் கூடியவர். ஆனால், இவ்வளவு திறமைகள் இருந்தும், தன்னுடைய உயர்லட்சியங்களை நனவாக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்'' என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒரு தலைவரே ஆட்சியாளராகவும் மாறுவது என்பது பெரிய வெற்றி என்று சொல்கிறார் தெலங்கானா போராட்டத்தை ஆதரித்த அறிவுஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் ஹரகோபால். ஆனால், ஆட்சியாளராக அவர் ஏமாற்றம் அளித்துவிட்டார் என்கிறார்.

அறிவிப்பு செய்தவற்றை உறுதியாக அமல் செய்வது நல்லதுதான். ஆனால், இந்த முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்பது மிகவும் முக்கியம். அவர் தன்னுடைய விருப்பங்களின்படி முடிவுகள் எடுத்தார். இது எதேச்சாதிகார போக்கு. கக்கட்டீயா மிஷன், பாகீரதி திட்டம், விவசாயிகளின் நண்பன் போன்ற திட்டங்கள், மாவட்டங்களைப் பிரிப்பது போன்றவற்றில் முடிவு செய்தபோது அவர் ஜனநாயகவாதியாக நடந்து கொள்ளவில்லை. நிபுணர்களைக் கலந்து ஆலோசிக்காதது, கமிஷன்கள் அமைக்காதது ஆகியவை ஜனநாயகத்துக்கு விரோதமானவை என்று அவர் கூறுகிறார்.

``அரசியல் நிர்பந்தங்களால் தன்னுடைய தனித்துவத்தை உருவாக்கிக் கொண்ட தலைவர் கே.சி.ஆர். மற்றவர்கள் தன்மீது ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாதவர். தனிப்பட்ட முறையில் சிந்திக்கிறார். நிறுவன ரீதியிலான கட்டமைப்புகளில் சிக்கிக் கொள்வதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது'' என்று பிரபல கவிஞரும், முதல்வர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக இருந்தவருமான தேசபதி சீனிவாஸ் கூறுகிறார்.

தோல்வியுடன் தொடங்கிய பயணம் - தோல்வி இல்லாத பயணம்

``நாம் சிறியதாகத் திட்டமிடக் கூடாது. பெரியதாக சிந்திக்க வேண்டும்! பெரிய திட்டங்களாக யோசித்து அமல்படுத்த வேண்டும்.'' இந்தக் கொள்கையில் தான் அவருக்கு நம்பிக்கை உள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

கல்வகுண்ட்ல ராகவய்யா, வெங்கடம்மா தம்பதியரின் மகன் கே.சி.ஆர். முன்பிருந்த மேடக் மாவட்டத்தில் சிந்தமடகா கிராமத்தில் அவர்கள் குடியேறினார்கள். மனேர் மேல் அணை கட்டும்போது நிலத்தை இழந்ததால் அங்கு குடியேறினர். அவர்களுடையது பெரிய பணக்கார குடும்பம் கிடையாது. ஆனால், ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்ற லட்சியம், அவருடைய கல்லூரிக் காலத்திலேயே உருவானது. இந்த லட்சியத்தை நோக்கிய அவருடைய பயணம், ஆரம்பத்தில் தோல்விகளுடன்தான் தொடங்கியது.

1970 மற்றும் 1975 காலக்கட்டத்தில் இன்டர் மற்றும் கல்லூரிப் படிப்பின்போது கே.சி.ஆரின் வகுப்புத் தோழரும், கவிஞரும், தெலங்கானா சாகித்ய அகாடமி தலைவருமான நந்தினி சித்தரெட்டி கூறும்போது, ``சித்திப்பேட்டை கல்லூரியில் அவர் பி.ஏ. படித்தார். வரலாறு, தெலுங்கு இலக்கியம், அரசியல் அறிவியல் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகப் படித்தார். அந்தக் காலக்கட்டத்தில், அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் தலைவர் அனந்த்துல மதன்மோகனின் அரசியல் சீடராக இருந்து, அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தார். கே.சி.ஆருக்கு வேலை வாங்கித் தருவதற்கு ஒரு சமயம் மதன்மோகன் முன்வந்தார். ஆனால், ``நான் வேலைக்குச் செல்ல மாட்டேன், அரசியலில் நுழைவேன்'' என்று கூறி அதை கே.சி.ஆர். மறுத்துவிட்டார். தன்னுடைய எதிர்காலம் பற்றி அப்போதே அவ்வளவு தெளிவாக இருந்தார்'' என்று தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

``பட்டப் படிப்பு முடித்ததும், உண்மையான அரசியல் மாநிலத்தில் நடக்கவில்லை, டெல்லியில் தான் நடக்கிறது என்று கே.சி.ஆர். உணர்ந்தார். எமர்ஜென்சி அமல் செய்யப்பட்ட அந்த ஆண்டில் அவர் டெல்லிக்கு சென்று சஞ்சய் விசார் மஞ்ச் அமைப்பில் சேர்ந்தார். விபத்தில் சஞ்சய் காந்தி மரணம் அடைந்த பிறகு, 1980-ல் அவர் சித்திப்பேட்டைக்குத் திரும்பினார். மர்ரி எம். சென்னாரெட்டி முதல்வராக இருந்து சித்திப்பேட்டைக்கு கூட்டங்களுக்கு வரும்போது, இளைஞராக இருந்த கே.சி.ஆர். மேடையில் பேசுவார். ``இந்த இளைஞர் நன்றாகப் பேசுகிறார். அவர் மேடையில் பேசட்டும்'' என்று சென்னா ரெட்டி சொல்வார். கே.சி.ஆர். வீட்டுக்கு அவர் செல்வார்'' என்று தேசபதி சீனிவாஸ் கூறுகிறார்.

கே.சி.ஆருக்கு என்.டி.ஆரின் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று சித்த ரெட்டி கூறுகிறார். புராணப்படங்களை அவர் மிகவும் ரசிப்பார். திரையரங்குகளில் அதிகமாக தாங்கள் சந்திப்பது உண்டு என்று அவர் கூறுகிறார்.

நந்தமூரி தரக்க ராமா ராவ் 1983-ல் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்தபோது, கே.சி.ஆர். அதில் சேர்ந்தார். தன்னுடைய அரசியல் குரு மதன் மோகனை எதிர்த்து சித்திபேட்டை தொகுதியில் போட்டியிட்டு 877 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பிறகு 1985-ல், அவர் களமிறங்கி, தன்னுடைய அரசியல் வாழ்வில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தார். அப்போது தொடங்கி, அவருக்குத் தோல்வியே கிடையாது. தொடர்ச்சியாக ஏழு முறைகள் அவர் சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்துக்கு ஐந்து முறை தேர்வு செய்யப்பட்டார். 1987-ல் முதன்முறையாக என்.டி.ஆர். அமைச்சரவையில் அவர் அமைச்சரானார். 1997-ல் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 1999 தேர்தலில் அவர் வெற்றி பெற்றபோது, துணை சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு அளித்தார். அமைச்சரவையில் இடம் தராததை கே.சி.ஆர். விரும்பவில்லை.

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொடக்கம்

முதலாவது தெலங்கானா இயக்கத்தை தன்னுடைய 15 வயதில் பார்த்த கே.சி.ஆர். இப்போது அந்த இயக்கம் மீண்டும் சிறகுவிரிக்க வேண்டிய தேவை வந்திருப்பதாகக் கருதினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1996ல் பிரதமராக இருந்த எச்.டி. தேவெ கவுடா தனது சுதந்திர தின உரையில், உத்தரகாண்ட் தனி மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்ட சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்தது. அப்போது சீமா ஆந்திரா பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அந்தப் பகுதிக்கு வந்தனர். அது தெலங்கானா எண்ணத்தை தோன்றச் செய்தது. அதே ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, தெலங்கானாவின் சிந்தனையாளரான பேராசிரியர் ஜெயசங்கரும், வேறு சிலரும் வாரங்கலில் சிறிய அரங்கில் கூட்டம் நடத்தினர். எதிர்பாராத வகையில் அதில் 5,000 பேர் கலந்து கொண்டனர். அதன்பிறகு தொடர்ச்சியாக அதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்றன. 2000வது ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை சந்திரபாபு நாயுடு அரசாங்கம் உயர்த்தியபோது, அதிருப்தி வலுத்தது. அதன் ஒரு பகுதியாக, தன்னுடைய கட்சித் தலைவருக்கு கே.சி.ஆர். ஒரு கடிதம் எழுதினார். அதே ஆண்டு நவம்பர் மாதம் உத்தராகண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

தெலங்கானா என்ற தனி மாநிலத்தை அடைவது சாத்தியமற்றது அல்ல என்று உணர்ந்தபோது, முன்னாள் நக்சல் தலைவர் இன்னய்யா, ஜெய்சங்கர் மற்றும் தெலங்கானா சிந்தனையாளர் தலைவர்கள் சிலருடன் தீவிரமாக கலந்து ஆலோசித்தபிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை கே.சி.ஆர். தொடங்கினார்.

``காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தது, அரசியலில் நீடித்திருப்பதற்காக அவர் எடுத்த முடிவு. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி, தெலங்கானா முழக்கத்தை எழுப்பியது அவருடைய அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது'' என்று சொல்கிறார் டன்கசலா அசோக்.

தெலங்கானா இயக்கத்துக்கு புதிய தலைவர்

ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழமாக ஆய்வு செய்வது கே.சி.ஆரின் இயல்பு. அவர் அமைச்சராக இருந்தபோது, தன்னுடைய இலாகாவில் அனைத்து விஷயங்களிலும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள பிரச்சினைகள் பற்றியும் அதிகாரிகளுடன் முழுமையாக கலந்துரையாடி, துறையைப் பற்றி அவர் முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, சித்திப்பேட்டை தொகுதியில் தனக்கு எதிர்ப்பு இல்லாத நிலையை உறுதி செய்து கொண்டார். டி.ஆர்.எஸ். கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு, தெலங்கானா இலக்கியம் பற்றி ஓராண்டு காலம் படித்தார். சீரற்றதைப் போலத் தோன்றினாலும், ஒவ்வொடு நடவடிக்கையையும் அறிவியல்பூர்வமாகவே அவர் எடுப்பார்'' என்று மூத்த பத்திரிகையாளர் துர்கம் ரவீந்தர் விவரிக்கிறார்.

கட்சி தொடங்கி 25 நாட்கள் கழித்து, மே 17 ஆம் தேதி கரீம்நகரில் சிம்ம கர்ஜனை கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் தெலங்கானாவை அடைவேன் என்றும், அரசியல் போராட்டத்தின் மூலமாகவே தெலங்கானாவை அடைவேன் என்றும் அங்கு அவர் அறிவித்தார். ``இந்த நோக்கத்தில் இருந்து யாராவது விலகினால், கல்லால் அடித்து கொல்லுங்கள்'' என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

தனி மாநிலம் என்ற கோரிக்கை குறித்து அன்று தொடங்கிய கே.சி.ஆரின் நாவன்மை, காலப் போக்கில் கூர்மை பெற்றது. தெலங்கானா அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் பேச்சுவழக்கில் அவர் பேசியதைக் கேட்டு தெலங்கானா மக்கள் ஈர்க்கப்பட்டனர். ஒவ்வொரு முறை அவர் ராஜிநாமா செய்து திரும்பி வந்த போதெல்லாம், ஆர்வத்துடன் அவரை வரவேற்றனர்.

கே.சி.ஆரின் அரசியல் வாழ்க்கை பற்றி முன்னாள் எம்.எல்.சி.யான பேராசிரியர் நாகேஸ்வர் பேசும்போது, ``தெலங்கானா போராட்டத்தால் செதுக்கப்பட்ட தலைவர் கே.சி.ஆர். இந்தத் தலைமைக்காக பலர் முயற்சி செய்தனர். ஆனால் கே.சி.ஆர். கடினமாக உழைத்து இந்த இடத்தைப் பிடித்தார். முன்பு சென்னா ரெட்டியால் செய்ய முடியாமல் போனதை, கே.சி.ஆர். செய்து காட்டினார்'' என்று தெரிவிக்கிறார்.

மக்களின் தலைவர்

``மக்களின் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, அதை சாதாரண வார்த்தைகளில் அவர்களிடம் சொல்வது தான் கே.சி.ஆரின் சிறப்பம்சம். தங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தலைவரால், அவற்றைத் தீர்த்து வைத்து ஆதரவாக இருக்க முடியும் என்று மக்கள் நினைத்தார்கள்'' என்று உளவியல் ஆய்வாளரும், ஆளுமை மேம்பாட்டு நிபுணருமான டாக்டர் வீரேந்திரா கூறுகிறார். அது மட்டுமல்ல. சிக்கலான பிரச்சினைகளையும் அவர் சாதாரண வார்த்தைகளில் சொல்லக் கூடியவர். அதில் அவருக்கு இணையாக யாரும் கிடையாது. ``Telangana Bautukulu" "BogguBayi" "Bombai" "Dubai" [தெலங்கானா வாழ்கிறது, நிலக்கரி சுரங்கங்கள், மும்பை {குடியேற்றம்}, துபாய் {வாழ்வு நிலையில் இருந்து வெளியேறுதல்}]ஆகியவற்றை சில உதாரணங்களாகக் கூறலாம். அந்த வகையில், நூறு வாக்கியங்களில் சொல்ல முடியாததை வெறும் `மூன்று வார்த்தைகளில்' அவர் கூறிவிடுவார். தெலங்கானா குளங்கள் என்பது கோப்பைகளைப் போல இருந்தது மாறி, இப்போது அதை ஏந்தும் சாஸர்களைப் போல இருக்கிறது என்றும் அவர் சொல்வார். பொது மேடைகளில் பேசும் கலையில் வல்லவர் அவர்'' என்று வீரேந்திரா கூறுகிறார்.

போராட்ட காலத்தில் மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்த பிறகும் கூட, அவருடைய பேச்சுத் திறன் மக்களையும், எதிரிகளையும், ஊடகங்களையும் ஈர்த்தது. ``மொழியை நேசிப்பது மட்டுமல்ல, தெலங்கானா கலாசாரம் மற்றும் அடையாளத்தை முன்வைத்து கே.சி.ஆர். தன்னை அடையாளப்படுத்தினார். எதையும் அனுபவித்து பிறகு செயலாற்றுவது என்பது அவருடைய எண்ணமாக இருந்தது'' என்கிறார் தேசபதி சீனிவாஸ்.

``மக்களை `கடவுளாகவும்' தன்னை பக்தராகவும் கூறிக் கொள்ளும் என்.டி.ஆர். வரலாற்றில் மக்கள் தலைவராக உருவானார். கே.சி.ஆர். சற்று மாறுபட்டவராக இருக்கிறார். `தெலங்கானா சமுதாயம் எனது தாய்' என்பார். அந்தத் தாயின் புதல்வனாக தாம் வந்திருப்பதாக அவர் கூறுவார். அப்படி தெலங்கானா மக்களின் மனதுக்குப் பிடித்தவராக மாறினார்'' என்று தெரிவிக்கிறார் வீரேந்திரா.

படத்தின் காப்புரிமை Getty Images

நான்கரை ஆண்டு கால ஆட்சி...

ஆட்சிப் பொறுப்பேற்றதும் மின்சாரத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு கே.சி.ஆர். உயர் முன்னுரிமை அளித்து, அதைத் தீர்த்து வைத்தார். தெலங்கானா தனி மாநிலமாக உருவானால், இருளில் மூழ்கிவிடும் என்று கூறியதை பொய்யாக்கி, ஆட்சிக்கு வந்து இரண்டாவது சாகுபடி காலத்தில் இருந்தே 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் நிலையை உருவாக்கினார். மேலும், கலேஸ்வரன் திட்டத்தை துரித வேகத்தில் கட்டமைப்பு செய்தது, நலத் திட்டங்களை ஒழுங்குபடுத்தியது, கல்யாண் லட்சுமி (பெண்களுக்கு திருமணப் பரிசு), ஷாதி முபாரக் (முஸ்லிம் பெண்களுக்கு திருமணப் பரிசு), கண்ட்டி வேலுகு (கண்ணொளி), ரயிடு பந்து (விவசாயிகளின் நண்பன்), என இவற்றை சிலர் விரும்பினாலும், இவற்றை குறைகூறும் சாமானிய மக்கள் பலர் இருக்கிறார்கள்.

``கடந்த காலத்தில் இந்திரா காந்தி, என்.டி.ஆர்., ஒய்.எஸ்.ஆர். போன்ற தலைவர்கள் ஏழைகளின் நலனுக்கான திட்டங்கள் மூலமாக கட்சிகளின் தலைவர்களாக அங்கீகாரம் பெற்றார்கள். கே.சி.ஆரும் அந்த வரிசையில் சேர்ந்தார். குடும்பங்கள் ஏன் ஒரே அறையுள்ள வீடுகளில் வசிக்க வேண்டும், குறைந்தபட்சம் இரண்டு அறைகள் வேண்டும் என்ற அவருடைய சிந்தனை, பாராட்டுக்குரியது. ஆனால், அந்த வீடுகளைக் கட்டுவதற்கு, அவராக நிர்ணயித்துக் கொண்ட அவகாசம் தோல்வியில் முடிந்துவிட்டது. அதேபோல, தலித்களுக்கு 3 ஏக்கர்கள் நிலம் அளிக்கும் திட்டமும் பெரிய தோல்வியாகிவிட்டது'' என்று அசோக் தெரிவிக்கிறார். ``ஒரு பக்கம் பாசனத் திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன. மறுபுறம் விவசாயிகளின் நண்பன் திட்டம் அமல் செய்யப்படுகிறது. இதனால் நிலத்தின் மதிப்பு நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற முரண்பட்ட சூழ்நிலையில், இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்?'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

``என்.டி.ஆர்., ஒய்.எஸ்.ஆர். மட்டுமின்றி சந்திரபாபுவிடம் இருந்தும் கே.சி.ஆர். கற்றுக் கொண்டார். என்.டி.ஆரின் முடிவு எடுக்கும் பாணி, ஒய்.எஸ்.ஆரின் செயல்படுத்தும் உறுதி, சந்திரபாபுவின் கையாளும் திறன் ஆகியற்றின் கலவை அவர்'' என்று ஹரகோபால் சொல்கிறார்.

அறிகுறிகளும் சந்தேகங்களும்

``தண்ணீர், நிதி, வேலைகள்'' [நீலு, நிதிலு, நியமக்காலு]- இந்த முழக்கத்தோடு தான் மாணவர்கள் போராட்டத்தில் ஒருங்கிணைந்தார்கள். ஆனால் வாக்குறுதி அளித்தபடி ஒரு லட்சம் வேலைகள் அளிக்கப்படவில்லை. இது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. போராட்டத்தின் உணர்வுப்பூர்வ மையமாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழகம், நூற்றாண்டைக் கொண்டாடியபோது, அரசு கண்டுகொள்ளவில்லை என்று மாணவர்கள் புகார் கூறுகின்றனர். மாணவர்கள் மீது பழிவாங்கும் நோக்குடன் கே.சி.ஆர். செயல்படுகிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வர் அப்படி நடந்து கொள்வது நியாயமற்றது என்கின்றனர்.

தலைமைச் செயலகத்துக்கு கே.சி.ஆர். செல்வது இல்லை என்றும், பிரகதி பவனிலேயே இருக்கிறார் என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அவர் மரியாதையை இழந்துவிட்டார் என்றும், ஒரு காலத்தில் போராட்டத்தில் பங்காளராக இருந்த கோதண்ட ராம், வீட்டுக்கு காவல் துறையை அனுப்பியது மற்றும் தர்னா சவுக் ரத்து போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் விமர்சிக்கின்றனர்.

கே.சி.ஆரை சந்திக்க நேரம் கிடைக்காத அமைச்சர்களின் கம்டனக் குரல்கள் கே.சி.ஆருக்கு எட்டாதா? காவல் துறையினர் மற்றும் புலனாய்வு அமைப்பினரைத் தவிர, வேறு யாருடைய கருத்துகளையும் அவர் கேட்பது கிடையாது என்று தோன்றுகிறது. அவருடைய நிர்வாக பாணி, தெலங்கானா கலாசாரத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்றும், தெலங்கானா சமூகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட பிரபுத்துவ கலாசார பாணியில் உள்ளது என்றும் ஹரகோபால் கூறினார். ``விவசாயிகளின் நேசத்துக்குரியவராக பெயர் பெற்றிருந்த ஒய்.எஸ்.ஆர். சற்று வித்தியாசமானவராக இருந்தார். அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் எப்போதும் அவரைச் சந்திக்க முடியும். இரண்டாம் நிலை தலைவர்கள் வளர்வதை அவர் அனுமதித்தார். ஆனால் கே.சி.ஆர். அதுபோல கிடையாது. தாம் தான் எல்லாமே என்பது போல அவர் செயல்பட்டார். அதிகாரத்தில் இருக்கும் போது ஒருவர் ஆணவத்துடன் செயல்பட்டால், மக்களிடம் தவறான உணர்வுகள் தோன்றும்'' என்று நலகொண்டாவைச் சேர்ந்த எச்.சி. பல்கலைக்கழகப் பேராசிரியர் பி. ராமுலு கூறுகிறார்.

முன்கூட்டியே தேர்தல்........ புதிய வார்த்தை அம்புகள்

ரேங்க் கார்டில் kongara kalan-ல் அவருடைய கடுகடுப்பான மனநிலைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், சட்டசபையை கலைத்த பிறகு அவருடைய பிரசார பாணி மெல்ல வேகம் பிடித்தது. யாராலும் முடியாத அளவுக்கு எதிரிகளை தீவிரமாகத் தாக்கிப் பேசிய கே.சி.ஆருக்கு, இதுவரை என்ன செய்தார் என்று மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அதனால் தான் அவருடைய உரையில் ஒரு தற்காப்பு போக்கை நாம் காண முடிகிறது. ``பங்காரு தெலங்கானா'' [பொன்னான தெலங்கானா], விஸ்வநகரம் [யுனிவர்சல் நகரம்] போன்ற வார்த்தைகள் அவருடைய இப்போதைய உரைகளில் அவ்வளவு நம்பிக்கையாக பேசப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

கே.சி.ஆர். அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ``குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவரை முதல்வராக ஆக்கினால், அந்தச் சாதியில் உள்ள அனைவருடைய வறுமையும் ஒழிந்துவிடுமா?'' ``டி.ஆர்.எஸ். தோற்கடிக்கப்பட்டால், எனக்கு பெரிய நட்டம் எதுவும் கிடையாது. நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், பணியாற்றுவோம். இல்லாவிட்டால், வீட்டில் ஓய்வெடுப்போம்'' என்பவை போன்ற வழக்கத்துக்கு மாறாக அவர் பேசியதைக் கேட்டால் இது தெளிவாகிறது.

``முதல்வராகப் பணியாற்றிய ஒருவர் வெற்றி பெறாமல் போனால், அவர் ஓய்வெடுப்பாரா? வெற்றி பெற்றால் மட்டும் தான் ஒரு தலைவர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வாரா?'' என்று உஸ்மானியா பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர் ஒருவர் துடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

``போராட்டத்துக்குப் பிறகு ஒரு புதிய மாநிலத்தின் முதலாவது முதல்வராக ஆகும் பெரிய வாய்ப்பு கே.சி.ஆருக்கு கிடைத்தது. ஆனால், அவரால் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது'' என்று ராமுலு கருத்து தெரிவித்தார்.

``இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ராஜதந்திரிகளை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், தெலங்கானா விவகாரங்களை நன்கு அறிந்த, புரிதல் உள்ள, எதிரிகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாக கே.சி.ஆர். போன்ற தலைவர்களை நம்மால் காண முடியாது'' என்று டன்கசாலா அசோக் உறுதியாகக் கூறுகிறார்.

``போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தங்களுடைய தலைவரின் சில குறைகளைப் பற்றி மக்கள் கவலைப்படுவது கிடையாது. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வரும்போது, அனைத்தையும் பற்றி மக்கள் கவலைப்படுவார்கள். முடிவெடுப்பதில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஜனநாயகத்தில், ஓட்டு போடுவதுடன் மக்களின் பங்களிப்பு முடிந்துவிடுவது இல்லை. சொல்லப் போனால், அங்கிருந்து தான் தொடங்குகிறது'' என்று ஹரகோபால் உறுதியாகக் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: