பிளாஸ்டிக் தடை: இன்று முதல் மதுரையில் அமலாகிறது

ஐந்து முக்கிய மாநில, தேசிய, மற்றும் சர்வதேச செய்திகளை தொகுத்துள்ளோம்.

மதுரையில் பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல்

பிளாஸ்டிக் படத்தின் காப்புரிமை OLIVIER MORIN/GETTY IMAGES

மதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக்குகள், கப்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, வைத்திருக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் என்பதை உருவாக்க, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்தப் பிரசார வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.


அ.தி.மு.க. - அ.ம.மு.க. அணிகள் இணைப்பு சாத்தியமா?

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

ஆளும் அ.இ.அ.தி.மு.கவுடன் இணைவதற்கு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் சில நிபந்தனைகளை விதிக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். டிடிவி அணியின் வேறு சிலரும் இதில் முரண்படுகிறார்கள்.

டிடிவி தினகரன் வந்தால் அ.தி.மு.க. பலம் பெறும் என பா.ஜ.க. நினைப்பதாகவும், அவர்கள்தான் வலியுறுத்தி தாங்கள் சொல்லும் நிபந்தனைக்கேற்ப இரு பிரிவுகளையும் சேர்க்க வேண்டுமென்று அழுத்தம் தருவதாகவும், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வெற்றிடத்தை டிடிவி தினகரன் நிரப்புவார் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.

ஆனால், தங்க தமிழ்செல்வனின் இந்தக் கருத்தை ஆளும் அ.தி.மு.க கடுமையாக கண்டித்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "அவர்களை நாங்கள் இணைப்பிற்கே அழைக்கவில்லை. தங்க தமிழ்ச் செல்வனுக்கு ஆசையிருந்தால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் வரலாம். ஆனால், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை இணைப்பதாக இல்லை. இமய மலையுடன் காளான் இணைய முடியாது" என்று தெரிவித்தார்.


தேர்தல் முடிவுகள்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநிலங்களிலும் காலை 8 மணி அளவிற்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.


உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவாரா மல்லையா?

படத்தின் காப்புரிமை Getty Images

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் உடனடியாக இந்தியா கொண்டுவரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், இந்த உத்தரவின் பொருள் அவர் உடனடியாக இந்தியா கொண்டுவரப்படுவார் என்பதல்ல. இந்த தீர்ப்பு வெளியான 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்ற தீர்ப்பை மல்லையா ஏற்றுக் கொள்வதாகக் கருதப்பட்டு அவர் 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.


பிரான்ஸ் மஞ்சளாடைப் போராட்டம்: குறைந்தபட்சக் கூலியை உயர்த்த மக்ரோங் ஒப்புதல்

படத்தின் காப்புரிமை Reuters

பிரான்சில் இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சளாடைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியை உயர்த்தவும், வரிச்சலுகைகள் அளிக்கவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் ஒப்புக்கொண்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், வாழக்கைச் செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் முன்னிறுத்தியது.

தொலைக்காட்சி வழியாக இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய மக்ரோங் வன் செயல்களைக் கண்டித்தார். அதே நேரம், "போராட்டக்காரர்களின் கோபம் ஆழமானது, பலவழிகளில் நியாயமானது?" என்றும் அவர் குறிப்பிட்டார். 2019 முதல் குறைந்தபட்சக் கூலி மாதம் 100 யூரோ அதிகரிக்கும் என்றார் அவர்.

2019 முதல் குறைந்தபட்சக் கூலி மாதம் 100 யூரோ அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

குறைந்த ஓய்வூதியங்களின் மீதான வரிவிதிப்பை அதிகரிக்கும் திட்டம் கைவிடப்படும். அதைப்போல ஓவர்டைம் செய்வதற்காகப் பெறும் ஊதியத்துக்கு இனி வரிவிதிக்கப்படமாட்டாது. இது தவிர, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வரியில்லா ஆண்டிறுதி போனஸ் வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மக்ரோங் தெரிவித்தார்.

அதே நேரம் செல்வந்தர்கள் மீதான ஒரு வரியை மீண்டும் விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மக்ரோங் நிராகரித்தார். "இது நம்மை பலவீனப்படுத்திவிடும். நாம் வேலைகளை உருவாக்கியாகவேண்டும் என்று அவர் கூறினார்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: