ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்ந்து, பொருளியல் வல்லுநர் சுர்ஜித் பல்லா பதவி விலகல் - ரூபாய் மதிப்பு சரிவு

  • 11 டிசம்பர் 2018
சுர்ஜித் பல்லா படத்தின் காப்புரிமை @SURJITBHALLA

இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் நேற்று திடீரென 'சொந்த காரணங்களுக்காக'' பதவி விலகிய நிலையில் பிரதமரின் பொருளாதார ஆலசோனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லாவும் இன்று பதவி விலகியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்தப் பின்னணியில் இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.3% சரிந்துள்ளதுடன் , பங்குச் சந்தை குறியீடுகளும் சரிவை சந்தித்துள்ளன.

நாட்டில் ரூபாயை அச்சிட்டு, பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும், பண மதிப்பை நிர்வகிக்கும் மைய வங்கியான ரிசர்வ் வங்கி சமீப காலமாக சர்ச்சையில் இருந்தது. அரசாங்கத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையிலான கருத்து மோதல்கள் நிலவிய நிலையில் உர்ஜித் பட்டேல் திடீரென பதவி விலகினார்.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா பின்தங்கியுள்ள நிலையில் பங்குச் சந்தை குறியீடுகளும் சரிந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தில் உண்டாகும் தாக்கங்கள் மற்றும் படேல் பதவி விலகலுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் ஆகியவையும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

"அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செயலைப் போலவே படேலின் பதவி விலகல் அமைந்துள்ளது," என ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்-இன் இந்திய மற்றும் தெற்காசியப் பொருளாதாரத் துறைக்கான தலைவர் பிரியங்கா கிஷோர் கூறியுள்ளார்.

நிதிக் கொள்கைகளில் இந்திய அரசு தலையிடுவதாகக் கருதப்படுவது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைப்பத்துடன், நாணய மதிப்பிலும் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்