தேர்தல் முடிவுகள்: சித்தாந்த ரீதியாக பா.ஜ.க வென்றுள்ளதா?

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் கோசாலைகளுக்கு முன்னுரிமை அளித்தது, தேர்தல் பிரசாரங்களில் அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம்" என்றது, ராகுல் தன் கோத்திரம் குறித்து விவரித்தது இந்த கேள்விக்கு வலுசேர்கின்றன.

படத்தின் காப்புரிமை Facebook

பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன், "இதுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை எதிர் முனையில் நிறுத்திய காங்கிரஸ், இம்முறை அதன் கொள்கைகளை பேசி இருக்கிறது. அது மட்டுமல்ல, தேர்தல் பிரசாரங்களின் போது, ராகுல் காந்தி கோயில் கோயிலாக சென்றது மக்களிடம் இந்துத்துவ கொள்கைகளை பேசினால்தான் வாக்கு பெற முடியும் என்பதை அவர்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால், அதேவேளை மக்கள் யார் தேர்தலுக்காக பேசுகிறார்கள், யார் உண்மையாக பேசுகிறாகள் என்பதை அறிந்தே இருக்கிறார்கள்" என்கிறார்.

இந்துத்துவ கொள்கை வெற்றியா?

இது குறித்து செயற்பாட்டாளர் அ.மார்க்ஸூடம் பேசிய போது, "நிச்சயம் அவ்வாறெல்லாம் இல்லை" என்றார்.

அவர், "மக்கள் உண்மையில் இந்துத்துவ கொள்கைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்கள் ஏன் காங்கிரஸூக்கு வாக்களிக்க போகிறார்கள், அந்த கொள்கையில் வேரூன்றி இருக்கும் பா.ஜ.கவுக்கே வாக்களித்து இருப்பார்களே" என்கிறார்.

"இந்த தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முறை தோல்வியை காட்டுகின்றன. 2014ஆம் ஆண்டு பா.ஜ.க அட்சி பொறுப்பேற்றவுடன் மக்கள் அவர்களிடம் நிறைய எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய பிம்பம் அப்படி. ஆனால், பணமதிப்பிழப்பு, கார்ப்பரேட் ஆதரவு என தொடர்ந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வந்தார்கள். தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த மக்கள் இந்த தேர்தலில் தங்கள் மொழியில் பதில் அளித்து இருக்கிறார்கள்." என்கிறார் அவர்.

'அடித்தள ஜனநாயகம்'

இதே பார்வையை முன் வைக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி. மகேந்திரன்.

"மக்களிடம் சில வேற்றுமைகள் உள்ளன. ஆனால், பலமான அடித்தள ஜனநாயகம் இந்திய சமூகத்தில் நிலவுகிறது. அதற்கு ஊறு ஏற்படுவதை பெரும்பான்மை மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதைதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன." என்கிறார்.

காங்கிரஸ் பயணிக்க வேண்டியது பா.ஜ.கவின் பாதையில் அல்ல; அதற்கு எதிர் திசையில், மக்கள் அதனைதான் விரும்புகிறார்கள் என்பதன் சாட்சியம்தான் இந்த தேர்தல் முடிவுகள் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சி.மகேந்திரன்.

'மாநில மனநிலையை பிரதிபலித்தோம்'

பா.ஜ.கவின் கொள்கையை காங்கிரஸ் சுவீகரித்துக் கொண்டது என்றெல்லாம் இல்லை. அந்தந்த மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து மாநில வளர்ச்சிக்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். மக்களின் மனநிலையை பிரதிபலித்தோம் என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

மேலும் அவர், "வி.எஹ்.பி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஆழமாக வேறூன்றி இருக்கும் காங்கிரஸ் வென்று இருப்பது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்