சாதி: 'யோகி ஆதித்யநாத் கடவுள்களின் சாதி பெயரை வெளியிட வேண்டும்' - அகிலேஷ் யாதவ்

யோகி ஆதித்யநாத் படத்தின் காப்புரிமை Hindustan Times

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

தினமணி : கடவுள்களின் சாதி பெயரை யோகி ஆதித்யநாத் வெளியிட வேண்டும்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமன் ஒரு தலித் என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ''சில கடவுள்களின் சாதிப் பெயர்கள் வெளிவந்துள்ளன. இது போல அனைத்து கடவுள்களின் சாதி பெயரையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். அப்போது எனது சாதியைச் சேர்ந்த கடவுளை வழிபடுவேன்,'' என தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : இணையத்தில் அதிகரிக்கும் வேலை தேடல்

கடந்த நான்கரை ஆண்டுகளில் கூகுள் தேடுபொறியில் 'எனக்கு அருகே உள்ள வேலைகள்' என்று பொருள்படும் 'jobs near me' எனும் ஆங்கிலச் சொற்றொடர் தேடப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் முதல் பக்க செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் இந்தத் தேடல் மிகவும் அதிகமாகியுள்ளது.

ஒரு சொல் அல்லது தொடர் தங்கள் தேடுபொறியில் தேடப்படுவதை பூச்சியம் முதல் அதிகபட்சம் 100 வரையிலான மதிப்புகளில் கூகுள் அளவிடுகிறது. தேடல் அதிகமாக அதிகமாக இந்த மதிப்பும் அதிகமாகும்.

மே 2014இல் 'jobs near me' சொல் தொடரின் தேடல் மதிப்பு வெறும் ஒன்றாக இருந்தது. ஏப்ரல் 2018இல் 88 எனும் அளவுக்கு உயர்ந்த இந்த மதிப்பு, அதிகபட்ச மதிப்பீடான 100-ஐ ஜூலை 2018இல் எட்டியது.

இந்து தமிழ் திசை : மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவன்

சென்னை சேத்துப்பட்டில் பிரிந்து வாழ்ந்த மனைவியை நடுரோட்டில் மது போதையில் கணவர் குத்திக் கொன்றார்.

குடிப்பழக்கத்துக்கு ஆளான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் சண்டை போட்டிருக்கிறார். இதனால் கடந்த ஆண்டு டேவிட்டை விட்டு தனது குழந்தைகளுடன் பிரிந்து வாழ ஆரம்பித்தார் மனைவி லேகா.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் மனைவியை மறித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றார் டேவிட்.

"மது போதையால் மனைவியை சந்தேகப்பட்டு, குடும்ப வாழ்வும் சிதைந்தது. பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் டேவிட்டின் செயலால் தாயாரையும், தந்தையையும் இழந்த இரண்டு பெண் குழந்தைகள் நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது," என்கிறது அந்த செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

தினத்தந்தி : ''ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை நிலை நிறுத்துவேன்'' - சக்தி காந்ததாஸ்

மும்பையில் நேற்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னரான இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

பதவியேற்ற பின்னர் பேட்டியளித்த சக்தி காந்ததாஸ், ''ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியையும் நம்பத்தன்மையையும் நிலை நிறுத்துவேன். ரிசர்வ் வங்கி மாபெரும் நிறுவனம். மத்திய அரசுதான் இதன் முக்கிய பங்குதாரர்.''

''ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்குள் நான் போக மாட்டேன். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும், அதற்கான தன்னாட்சியை பராமரிக்க வேண்டும். பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது என்பது ஒரு முக்கிய பணி. அது இப்போது ரிசர்வ் வங்கியின் கட்டாய தேவை ஆகும். உரிய நேரத்தில் பொருளாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்'' என தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்