சமூக சேவகர் முதல் மாநில முதல்வர் வரை - அசோக் கெலோட்டின் சவாலான அரசியல் பயணம்

  • 14 டிசம்பர் 2018
அசோக் கெலாட் படத்தின் காப்புரிமை Getty Images

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் அஷோக் கெலோட் ஒரு திறமையான பேச்சாளர் இல்லை, அவரது உரையில் அலங்கார வார்த்தைகள் இருக்காது. ஆனால் அவர் பேசும் வார்த்தைகள் தனது இலக்கை துல்லியமாக சென்றடையும் வலிமை கொண்டவை.

சமூக சேவைகளில் ஈடுபட்டு அதன் மூலமாக அரசியலில் ஈடுபட்டவர் கெலோட். தற்போது மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் அசோக் கெலோட், 1971ஆம் ஆண்டு ஜோத்பூரில் வங்கதேச அகதிகள் முகாமில் சேவை செய்தவர். 1968 முதல் 1972 வரை காந்தி சேவா சமிதியில் இணைந்து பணியாற்றினார் கெலோட்.

ஜோத்பூரில் 1951 மே மாதம் மூன்றாம் தேதியன்று பிறந்த அசோக் கெலோட்டின் தந்தை லக்ஷ்மண் சிங் மாயாஜால வித்தைகள் செய்யும் மேஜிக் நிபுணர். அசோக் கெலோட்டுக்கும் மாயாஜால வித்தைகள் தெரியும் என்பதும் கூடுதல் தகவல்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமூக சேவைகளின் காரணமாகவே அசோக் கெலோட், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானார் என்பதை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தலின்போது அசோக் கெலோட் தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமித்து அதற்காக கொடுக்கப்பட்ட பணத்திற்கு அவர் அளித்த செலவு கணக்கு மிகவும் தெளிவாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மீதமிருந்த பணத்தை திருப்பிக் கொடுத்ததும் அதுவரை யாரும் செய்யாத ஒன்று.

1973ஆம் ஆண்டு ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பொருளாதார மாணவரான அசோக் கெலோட் மாணவர் தேர்தலில்தான் முதன்முறையாக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருந்த புதிய மாணவர் சங்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்த பிறகு, சட்டக் கல்வியும் பயின்றார் அசோக் கெலோட்.

ஜோத்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோது, வெறும் நான்காயிரத்து ஐநூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். ஆனால், அவரது மன உறுதி தளரவில்லை. அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்.

காந்தியின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட கெலோட், தன்னை பொதுமக்களின் சேவகர் என்றே கூறுவார். 1974ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சியின் மாணவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார் அசோக் கெலோட். மாணவர் அணிக்கான நடத்தை விதிமுறைகளையும் உருவாக்கியவர் அசோக் கெலோட் என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

படத்தின் காப்புரிமை FACEBOOK @ASHOK GEHLOT
Image caption இந்திரா காந்தியுடன் அசோக் கெலாட்

1980ஆம் ஆண்டு ஜோத்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982இல் சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விமானத்துறை துணை அமைச்சராகவும், பிறகு விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1991இல் ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டப்பட்டார். பிரதமர் நரசிம்மராவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டாலும், அமைச்சர் பதவியில் இருந்து அசோக் கெலோட் நீக்கப்பட்டதற்கு காரணம் சாமியார் சந்திரசாமி.

நரசிம்ம ராவுடன் நெருக்கமாக இருந்தவராக அறியப்பட்டவர் சந்திரசாமி. பாலி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் அசோக் கெலோட். ஆனால், ஆயுத பேரம், அந்நிய செலாவணி மோசடி, போபர்ஸ் பீரங்கி ஊழல் என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்திரசுவாமியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தெரிந்த்தும் நிகழ்ச்சிக்கு வர மறுப்பு தெரிவித்தார்.

இதனால் சந்திரசுவாமிக்கு கெலோட் மீது கோபம் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அசோக் கெலோட்

படத்தின் காப்புரிமை TEKEE TANWAR/AFP/GETTY IMAGES

1998ஆம் ஆண்டு முதன்முறையாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2008ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது தனது உறவினர்களுக்கு உதவி செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

அரசியல் நிபுணர்களின் பார்வையில், கெலாட் பிரச்சனைகளை திறமையாக கையாள்பவர். மிகவும் புத்திசாலியான அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை சாதுரியமாக கையாண்டார்.

"அரசியலில் திருப்தியாக செயல்படுபவர்களை பட்டியலிட்டால், அதில் நானும் ஒருவனாக இருப்பேன்" என்று அசோக் கெலோட்டே ஒரு முறை கூறியிருக்கிறார்.

அரசியலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் அவர் ஒருபோதும் மனச்சோர்வோ, விரக்தியோ அடைந்ததில்லை. ஆனால் 1991ஆம் ஆண்டு அசோக் கெலாட் மனசோர்வடைந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஜோத்பூரில் வசிக்கும் ராம் சிங் ஆர்யா, "ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும், ஜோத்பூர் சர்க்யூட் ஹவுஸில் மக்கள் திரண்டனர். எப்போதும் கம்பீரமாக இருக்கும் அசோக் கெலோட்டின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்ததை நாங்கள் அன்றுதான் பார்த்தோம்" என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK @ASHOK GEHLOT

இரு முறை முதலமைச்சராகவும், மூன்று முறை மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்திருக்கும் அசோக் கெலோட் கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் . அரசியலில் இருந்து அசோக் கெலோட் ஓய்வு பெற்றுவிட்டார் என்று அவரது எதிரிகள் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், கட்சியில் நடைபெற்ற சீர்திருத்தங்களில் கெலாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அசோக் கெலோட்டின் பங்கு கட்சித் தலைமையால் பாராட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: