செந்தில் பாலாஜி: அதிமுகவில் பெற்ற வளர்ச்சியும், அமமுகவில் அடைந்த சரிவும்

செந்தில் பாலாஜி
Image caption செந்தில் பாலாஜி

ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் தி.மு.கவில் இணைந்து ஒரு சுற்றை முடித்திருக்கிறார். யார் இந்த செந்தில் பாலாஜி?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அந்த நேரத்திலேயே அதாவது 2017 ஏப்ரலிலேயே அவர் தி.மு.கவுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே தற்போது அவர் தி.மு.க பக்கம் சென்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அவரது வருகை கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், கரூரில் முன்பு பரபரப்பாக செயல்பட்ட கே.சி. பழனிச்சாமி ஒதுங்கியிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் வருகை கட்சிக்கு சுறுசுறுப்பளிக்குமென நினைக்கிறது கட்சித் தலைமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்