விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதிக்கு மாறாக பேசினாரா ராகுல்? #RealityCheck

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி படத்தின் காப்புரிமை NURPHOTO

ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கடன்களை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துவிடும் என்ற வாக்குறுதிதான், மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக கூறப்பட்டது.

"விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதோடு, விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடங்குவோம்" என்று தன்னுடைய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

அவர் பேசிய காணொளியானது, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நடைபெற்றதொரு செய்தியாளர் சந்திப்பு காணொளியோடு இணைக்கப்பட்டு பல வலது சாரி சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. வாட்சப் குழுக்களிலும் இது பகிரப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தன்னுடைய வக்குறுதியில் இருந்து பின்வாங்குவது போன்ற தோற்றத்தை இந்த காணொளி வழங்குகிறது.

இந்த காணொளி பகிரப்பட்டுள்ள வலது சாரி பக்கங்கள் அனைத்தும் பல மில்லியன் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்ற பக்கங்களாக இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

இந்த காணொளியின் முதல் பகுதியில், ராகுல் காந்தி கீழ்கண்டவாறு பேசுவது கேட்க முடிகிறது.

"காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் உங்களுடைய (விவசாயிகள்) கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன்".

இந்த காணொளியின் இரண்டாவது பகுதியில் ராகுல் காந்தி இவ்வாறு பேசுகிறார்.

"கடனை தள்ளுபடி செய்வது ஓர் ஆதரவு நடவடிக்கையாக இருக்குமென எனது உரைகளில் தெரிவித்திருக்கிறேன். இதுவொரு தீர்வு அல்ல. இதற்கான தீர்வு சிக்கலானது. காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்".

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த இரண்டு காணொளிகளையும் இணைத்து பார்க்கின்றபோது, ராகுல் காந்தி தன்னுடைய விவசாய கடனை தள்ளுபடி செய்யும் வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதுபோல தோன்றுகிறது.

ஆனால், இது உண்மையல்ல. ராகுல் காந்தி பேசிய இரண்டு உரைகளை எடுத்து தவறான பொருளை கொடுக்கும் வகையில் புத்திசாலித்தனமாக தொகுத்து இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி தன்னுடைய வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்ற உணர்வை கொடுக்கும் முயற்சியாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், செய்தியாளர் சந்திப்பின் முழு காணொளி இதுதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள், அவை பேசப்பட்ட சூழலுக்கு வெளியே எடுக்கப்பட்டு தவறான பொருளை கொடுக்கும் நோக்கத்தோடு இந்த வைரல் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திடம், "விவசாய கடனை தள்ளுபடி செய்வது காங்கிரஸ் கட்சியின் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமா?" என கேள்வி கேட்கிறார்.

ராகுல் காந்தி இவ்வாறு பதிலளிக்கிறார். ""விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது ஒர் ஆதரவு நடவடிக்கையாக இருக்குமென எனது உரைகளில் தெரிவித்திருக்கிறேன். இது ஒரு தீர்வல்ல. விவசாய பிரச்சனைகளுக்கான தீர்வு சிக்கலானது. காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் - இவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதில், உள்கட்டுமான வசதிகளை வளர்ப்பது, தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது ஆகியவை அடங்குகின்றன. தீர்வு காண்பது எளிதான ஒன்றாக இருக்கப்போவதில்லை. சவால்மிக்கதாக இருக்கும். ஆனால், நாங்கள் செய்வோம். விவசாயிகள், இந்நாட்டின் மக்கள் அனைவரோடும் இணைந்து நாம் இதை செய்ய வேண்டும். நாம் செய்வோம்".

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் பெருமளவு விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாக விவசாயிகள் பிரச்சனை இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களின் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த மாதம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பேரணி நடத்தினர்.

கோபமடைந்துள்ள விவசாயிகள் நரேந்திர மோதி அரசுக்கு ஒரு சவாலாகவே உள்ளனர்.

விவாசயிகள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மீது கோபம் கொண்டிருந்தால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் விவசாய பகுதியில், இந்த கட்சி தொகுதிகளை வெல்லது கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருத்தப்பட்டு தொகுக்கப்பட்ட இந்த காணொளியை இந்த பின்னணியில் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறார் என்ற புரிதலை வழங்க இந்த காணொளி முயல்கிறது.

இருப்பினும், மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்த 10 நாட்களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமா என்பதை சற்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: