கஜ புயலால் வீழ்ந்த தென்னை மரங்களுக்கு 30ஆம் நாள் துக்கம் அனுசரித்த விவசாயிகள்

Gaja cyclone

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினமலர் - புயலால் வீழ்ந்த தென்னை மரங்களுக்கு 30ஆம் நாள் துக்கம்

கஜ புயலால் தென்னை மரத்தை இழந்த பட்டுக்கோட்டை விவசாயிகள் நேற்றைய தினம் ஒன்றுக்கூடி 30ஆம் நாள் துக்கம் அனுசரித்ததாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

30 நாட்கள் கடந்த நிலையிலும், விழுந்த தென்னை மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் காசாங்குளத்தில் ஒன்று கூடி இந்நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாங்குளத்திலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்ற விவசாயிகள், விழுந்த தென்னை மரங்களை அரசே அகற்ற வேண்டும் என்றும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக அச்செய்தி கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி - ராஜஸ்தானில் 199 எம்.எல்.ஏக்களில் 158 பேர் கோடீஸ்வரர்கள்

படத்தின் காப்புரிமை NurPhoto

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள 199 எம்.எல்.ஏக்களில் 158 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், கடந்த சட்டமன்றத்தில் 145 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர் என்றும் தினத்திந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ப்ரஸ்ராம் மோர்டியா ரூ.172 கோடியும், உதய்லால் அஞ்சனா ரூ.107 கோடியும், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்கேஷ் மீனா ரூ.39 கோடியும் சொத்து உள்ளதாக வருமான வரி கணக்கில் தெரிவித்துள்ளனர்.

மேலும், 59 எம்.எல்.ஏ.க்கள் 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையும், 129 எம்.எல்.ஏ.க்கள் பட்டம் மற்றும் முதுநிலை பட்டமும், 7 பேர் எழுத, படிக்க மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளனர்.

46 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றவழக்குகளும், இவர்களில் 28 பேர் மீது தீவிரமான குற்றவழக்குகளும், பர்சாடிலால் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கும் உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் -ரஃபேல் தீர்ப்பில் 'இலக்கணப் பிழை'

படத்தின் காப்புரிமை ERIC FEFERBERG

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ நிறுவனத்துடன் ரஃபேல் போர் விமானம் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விலை விவரங்கள் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அந்த அறிக்கை நாடாளுமன்றப் பொதுக் கணக்கு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது ஓர் இலக்கணப் பிழை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ஏற்கனவே விலை விவரங்கள் குறித்த அறிக்கை பொது வெளியில் உள்ளதாகப் பொருள்படும் அந்தப் பிழையைத் தீர்ப்பில் சரி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்குகளுக்கு பதில் அளித்த மத்திய அரசு அந்த அறிக்கை பொது கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.

பொது கணக்குக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் மக்களவைக் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அப்படி ஒரு அறிக்கையே தங்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

தினகரன் - குட்கா முறைகேடு: 9 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரமணா நேற்று காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானதாகவும், அவரிடம் மாலை விசாரணை நடைபெற்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.00 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார் என்றும், இருவரிடமும் விசாரிக்க தலா 100 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: