செந்தில் பாலாஜியை தொடர்ந்து அணி மாறப்போவது யார்?

செந்தில் பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த காரணமும் சொல்லாமல் திமுகவில் சேர்ந்தார்.

அதன்மூலம் டிடிவி அணியில் இருந்து கட்சித் தாவலுக்கான முதல் புள்ளியை வைத்துள்ளார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததில் வருத்தம் இல்லை என அமமுகவின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்தாலும், அவரது அமைப்பில் உள்ள மற்ற 17 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அணி மாறும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விளக்கிப் பேச திங்களன்று அமமுகவினர் அங்கு செல்லவுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அமமுகவினர் சசிகலாவை சந்திப்பதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைதான் என உறுதிசெய்த அமமுகவின் செய்தி தொடர்பாளர் வெற்றிவேல், தங்களது அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்காக பத்து உறுப்பினர்கள் செல்லவுள்ளனர் என்றார்.

''செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதில் எங்களுக்கு வருத்தம் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். அமமுகவில் இருந்த இத்தனை மாதங்களில் தனக்கு பிரச்சனை இருந்தால், செந்தில் பாலாஜி வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். எந்த பிரச்னையும் இல்லை என்பது தற்போது தெளிவாகிறது. சொந்த காரணங்களுக்காக அவர் சென்றிருக்கலாம்,'' என்று கூறினார்.

செந்தில் பாலாஜியைப் போல பிற உறுப்பினர்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்லவுள்ளனரா என்று கேட்டபோது, ''நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அமமுகவின் வெற்றியை பார்த்து பயந்துள்ள திமுக, எங்கள் அணியில் இருந்து ஆட்களை இழுக்க எண்ணுகிறது. எங்கள் பலம் தேர்தல் நேரத்தில் தெரியும். எங்கள் உறுப்பினர்கள் யாரும் எந்த அணியிலும் சேரமாட்டார்கள்,'' என்று தெரிவித்தார் வெற்றிவேல்.

ஆனால், அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சென்றதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அந்த அமைப்பின் மீதான அவநம்பிக்கையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.

தற்போது தேர்தல் இல்லாவிட்டாலும், அமமுக தலைமை மீது உள்ள அவநம்பிக்கைதான் அந்த அமைப்பு ஒரு உறுப்பினரை தற்போது இழந்துள்ளதற்கு காரணம் என்கிறார் அவர்.

''தலைமை மீது பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் கிடையாது. இடைத் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சென்றது, அந்த அமைப்பின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்துகிறது. அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பில் அவர் திமுகவில் சேர்ந்துவிட்டார். இது ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடு என்று எடுத்துக்கொண்டாலும், அமமுகவில் ஒரு ஊசலாட்டம் ஏற்பட்டுள்ளது என்பது புரிகிறது'' என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

அதிமுக அமைச்சர்கள் பலரும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்புங்கள் என அறிவித்துவரும் நிலையில், செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றது, அதிமுகவுக்கு பின்னடைவா என்று கேட்டபோது, இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று கூறுகிறார் செந்தில்நாதன்.

''கரூர் பகுதியில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து, அங்குள்ள ஒரு தலைமைக்கு நல்லவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் அவர் இணையவில்லை, திமுகவிற்கு சென்றதால், அதிமுகவுக்கு லாபம், இழப்பு என்று எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர் திமுகவுக்கு சென்றுள்ளனர் என்பதால் பெரிய இழப்பு இல்லை,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்