சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக ஐ.டி. இளைஞர் கைது

#MeeToo படத்தின் காப்புரிமை Getty Images

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினகரன்: சென்னையில் 80 பெண்களை வன்புணர்வு செய்ததாகஐ.டி இளைஞர் கைது

சென்னையில் இரவு நேரத்தில் திருப்புளி மூலம் வீடுகளின் கதவைத் திறந்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அதைப் காணொளியாக பதிவு செய்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார் என்கிறது இந்த செய்தி.

அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதாகவும் நகைகள் திருடப்படுவதாகவும் காவல்துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. ஆனால் பலரும் நகை திருட்டு குறித்து மட்டும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆவடியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அறிவழகன் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டே ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்ட்டிருந்தாலும் கடந்த மார்ச் மாதம் பிணையில் வெளிவந்த பிறகு மீண்டும் இச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோல 80 சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்கிறது அச்செய்தி. இது குறித்து போலீஸ் என்ன சொல்கிறது?

தினமணி : துபாயில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது இந்திய சிறுவன்

கேரளாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் எனும் சிறுவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளார். தனது 9 வயதிலேயே நிறுவனங்களுக்கு இணையதள பக்கத்தை வடிவமைப்பது, நிறுவனத்தின் சின்னங்களை கணினியில் வடிவமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த இச்சிறுவன் செல்லிடப்பேசி செயலி ஒன்றையும் உருவாக்கியிருந்தார்.

தற்போது டிரினெட் சொல்யூஷன்ஸ் எனும் பெயரில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் இணைந்து மென்பொருள் நிறுவனத்தை துவங்கியதாகவும் சட்டப்படி 18 வயது கடந்தபிறகுதான் நிறுவனத்துக்கு உரிமையாளராக அறிவித்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

''தற்போது 12 வாடிக்கையாளர்கள் உள்ளனர் அவர்களுக்கு இலவசமாக சேவை அளித்து வருகிறோம்'' என அச்சிறுவன் தெரிவித்துள்ளார்

படத்தின் காப்புரிமை Maharashtra Forest Dept

தி இந்து (ஆங்கிலம்) - இந்தாண்டு இந்தியாவில் எத்தனை புலிகள் இறந்தன?

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பதிவேடுகளில் உள்ள தகவலின்படி டிசம்பர் 15 வரை இந்த ஆண்டில் நாடு முழுவதும் 95 புலிகள் இறந்துள்ளன.

புலிகள் பாதுகாப்பு மையத்துக்கு வெளியில் மஹாராஷ்டிராவில் மட்டும் 14 புலிகள் இருந்துள்ளன. மொத்தமாக இவ்வாண்டு அம்மாநிலத்தில் 19 புலிகள் இறந்துள்ளன.

மகாராஷ்டிராவில் 190 புலிகள் இருப்பதாக 2014-ல் புலிகள் கணக்கெடுப்பு பணியில் தெரியவந்தது. ஆனால் அதில் புலிகள் மையத்துக்கு வெளியே 74 புலிகள் இருக்கின்றன.

மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதிகளில் இப்புலிகள் வாழ்வதாலும் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் காரணமாகவும் புலிகள் இறப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு மைய செயலர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15 வரை நிகழ்ந்துள்ள புலி இறப்புகளில் 41 நிகழ்வுகள் புலிகள் பாதுகாப்பு பகுதிக்கு வெளியே நிகழ்ந்துள்ளன. மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 22 புலிகள் இறந்துள்ளன, கர்நாடகத்தில் 15 புலிகள் இறந்ததாகப் பதிவாகியுள்ளது என்கிறது தி இந்துவின் செய்தி.

படத்தின் காப்புரிமை Reuters

தினத்தந்தி - ''ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசின் அனுமதியை கேட்போம்''

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசின் அனுமதியை கேட்போம்" என ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செய்தி அதிகாரி பி.ராம்நாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசை அடுத்த வாரம் அணுகுவோம். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசின் அனுமதியை கேட்போம். எங்கள் நோக்கம், ஆலையை கூடிய விரைவில் செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான்" என்று கூறியுள்ளார்.

'' நாங்கள் சுற்றுச்சூழல் சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்கிறோம். கடந்த 6 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்ததால், தாமிர இறக்குமதி அதிகரித்துள்ளது. நாட்டின் கந்தக அமிலத் தேவையில் 80-90 சதவீதத்தையும், பாஸ்பாரிக் அமிலத் தேவையில் 15 சதவீதத்தையும் ஸ்டெர்லைட் ஆலைதான் பூர்த்தி செய்தது'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: