ஜெயலலிதா சிகிச்சை: மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு வழங்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஜெயலலிதாவின் சிகிச்சைச் செலவு ஆறு கோடியே எண்பத்தி ஐந்து லட்சம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு சுமார் ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. இதில் இன்னும் 44 லட்ச ரூபாய் பாக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் அவ்வப்போது ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஊடகங்களுக்கு வெளியானது. அதில், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஒட்டு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இதில் முதற்கட்டமாக காசோலை மூலம் 41 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது கட்டமாக அவரது மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி ஆறு கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றும் சுமார் 44 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் இன்னும் பாக்கியிருப்பதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரவழைத்து சிகிச்சையளித்த செலவு 92 லட்ச ரூபாய் எனவும் சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 29 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது.

உணவுக்காக மட்டும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.

ஆனால், இந்த உணவுச் செலவு என்பது ஜெயலலிதாவுக்கு மட்டும் அளிக்கப்பட்ட உணவுக்கானதல்ல என அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகின்றனர். ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்கள், அங்கே இருந்த அமைச்சர்கள், செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட உணவுக்கான செலவே இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அ.இ.அ.தி.மு.கவோ, அப்போலோ மருத்துவமனையோ இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்