பொன். மாணிக்கவேல் : ''என் மீது புகார் மனு அளித்தவர்களுக்கு சட்ட அறிவு இல்லை''

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

''என் மீது புகார் மனு அளித்தவர்களுக்கு சட்ட அறிவு இல்லை'' - சாடும் பொன். மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள் சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்ய வற்புறுத்தியதாக அவரது பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழக காவல்துறை தலைவரைச் சந்தித்து புகார் அளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், தன் மீது புகார் அளித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதாகவும் அவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தன் மீது புகார் அளித்திருக்கும் 21 அதிகாரிகளில் யாரும் ஒரு முதல் தகவல் அறிக்கையைக்கூட பதிவுசெய்யவில்லையென்றும் ஒரு குற்றவாளியைக்கூட கைதுசெய்யவில்லையென்றும் தெரிவித்தார்.

தன் மீது மனு அளித்தவர்களுக்கும் சட்ட அறிவு இல்லை; அதை வாங்கியவர்களுக்கும் சட்ட அறிவுஇல்லை என்றும் தன்னிடமிருந்து விலகிச் சென்ற அதிகாரிகளுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை அளிக்க வேண்டுமென உள்துறைச் செயலருக்கு மனு அனுப்பியிருப்பதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

விரிவாக படிக்க - பொன்.மாணிக்கவேல் Vs தமிழக காவல்துறை: மோதல் முற்றுகிறது

படத்தின் காப்புரிமை AFP
Image caption எப்போது அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்பது குறித்து தெளிவில்லை.

சிரியாவிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப்பெற திட்டம்

சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்கத் துருப்புகள் சிரியாவில் இருந்து வெகு விரைவில் வெளியேறும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்திலே அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்திகள் குறித்து கருத்துக் கூற மறுத்துவருகிறது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன்.

விரிவாக படிக்க - சிரியா போர்: "துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்" - பின்னணி என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

இரா.சம்பந்தன்: "என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை"

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் தற்பொழுது இரண்டு பேர் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் முன்னர் தன்னை எதிர்க் கட்சி தலைவர் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக சபாநாயகர் நீக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்கட்சி தலைவர் நியமனம் தொடர்பில் விஷேட உரையினை நிகழ்த்தும்போது ''நீதிமன்றத் தீர்ப்புக்கேற்ப கடந்த 16ம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை'' என்றார் இரா.சம்பந்தன்.

விரிவாக படிக்க - என்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை: இரா.சம்பந்தன்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பெண்கள் தங்களது ஆடைகளை வீடுகளில் கருப்பு கொடியாக கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்போவதாக ஆலை எதிர்ப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இதையொட்டி பண்டாரம்பட்டி, குமாரெட்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியேற்றி உள்ளனர். சில தெருக்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.

காவல் துறை மிரட்டி கருப்புத் துணியை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கருப்புக்கொடிக்கு பதிலாக தெற்கு வீரபாண்டியபுரத்தில் பெண்கள் தங்களது ஆடைகளை கொடியில் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரிவாக படிக்க - "ஸ்டெர்லைட் வேண்டாம்": கருப்பு ஆடைகளை கொடியில் போட்டு பெண்கள் எதிர்ப்பு

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் விவசாயக் கடன் தள்ளுபடி

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வசம் இருந்த மூன்று மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது ராஜஸ்தானிலும் இரண்டு லட்ச ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் அறிவித்துள்ளார். இதன் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையை ராஜஸ்தான் மாநில அரசு சுமக்கும்.

மூன்று மாநிலங்களிலும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில் ''நாங்கள் ஆட்சிக்கு வந்து 10 நாள்களுக்குள் கடன் தள்ளுபடி செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறினோம் ஆனால் இரண்டே நாளில் தள்ளுபடி செய்துவிட்டோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: