பிளாஸ்டிக் தடை வந்தால் பல லட்சம் தமிழக தொழிலாளர்கள் வாழ்க்கை என்னவாகும்?

plastic
Image caption பிளாஸ்டிக் மறு சுழற்சி பணியில் ஈடுபடும் தொழிலாளி

(2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? யாரைப் பாதிக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்று இத்தடையின் பல பக்கங்களையும் அலசும் வகையில் ஒரு கட்டுரைத் தொடரை தயாரிக்கிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் கட்டுரை இது.)

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தடையை நடைமுறைப்படுத்தினால் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதை சார்ந்து பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என பிளாஸ்டிக் சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Image caption சங்கரன் - தமிழ்நாடு மற்றும் பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர்

தமிழ்நாட்டில் மட்டும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் மறு சுழற்சி பணிகளில் நேராடியாக 2 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு மற்றும் பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன் கூறுகிறார்.

"கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவிக்கும் போதும், தொடர்ந்து அதே ஜூன் மாதம் 25-ம் தேதியன்று அந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அறிவிப்பானையை வெளியிடும்போதும் எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை," என்கிறார் சங்கரன்.

Image caption பிளாஸ்டிக் கழிவுகள்

"பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதாலோ அல்லது அதை பயன்படுத்துவதாலோ சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், பிளாஸ்டிக்கை பயன்படுத்திய பின் பொதுமக்கள் அதை தெருக்களில் தூக்கி எறிவதும் கழிவு மேலாண்மையில் கவனக்குறைவாக செயல்படும் அரசும்தான் இதற்கு காரணம்" என்கிறார் சங்கரன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

ஒரு குப்பை பிரச்சனைக்காக குறிப்பிட்ட பொருளை அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு வணிகர்களை பாதிக்கும் வகையில் தடை செய்வது தவறானது என்பதும் சங்கரனின் கருத்தாக இருக்கிறது.

நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரமும் நுகர்வு கலாசாரமும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் உயர்த்தியுள்ளது.

Image caption மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுசூழல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் சேகரிக்கப்படாத கழிவுகள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு உற்பத்தியாளர்களை மட்டும் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என்கிறார் சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் காமராஜ்.

Image caption காமராஜ் - சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர்

"பிளாஸ்டிக் மூலப்பொருள் உற்பத்தியாளர், சந்தைப்படுத்தும் நபர், பேக்கிங், அச்சிடுதல், விற்பனையாளர்கள், நுகர்வோர் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட ஏழு நிலைகளை கடந்து தான் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை முறைப்படுத்தாமல் பிளாஸ்டிக்கை நம்பி வாழும் தொழிலாளர்களை மட்டும் பாதிக்கக்கூடிய வகையில் இந்த தடை அமைந்துள்ளது" என்கிறார் காமராஜ்.

"குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குறைந்தபட்சமாக மூன்று முதல் ஐந்தாண்டு காலம் அவகாசம் வேண்டும்" என்றும் கூறுகிறார் காமராஜ்.

Image caption பிளாஸ்டிக் மறு சுழற்சி பணியில் ஈடுபடும் தொழிலாளி

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யும் பணியிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மறுசுழற்சித் தொழிலுக்கு முறையான உதவி செய்து ஊக்கமளிக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்.

இந்நிலையில் முறையான மாற்று ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்கவில்லை என்பதும் பிளாஸ்டிக் சங்கத்தினரின் குற்றச்சாட்டு.

பிளாஸ்டிக் கழிவுகளால் உண்டாகும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை சீர்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற தாங்கள் தயார் என்று கூறும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தடை நடவடிக்கையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிளாஸ்டிக் தடையால் ஜனவரி-1 முதல் எவ்வித தாக்கம் உண்டாகும் என்ற குழப்பம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீடிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: