ஸ்டெர்லைட் : தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அமைப்போம்

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அமைப்போம் - ஸ்டெர்லைட் உறுதி

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலையை எப்போது திறக்கமுடியும் என்பது குறித்து ஸ்டெர்லைட் காப்பரின் முதன்மை செயல் அலுவலர் பி.ராம்நாத் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் நூறு கோடி ரூபாய் செலவில் ஒரு ஸ்மார்ட் பள்ளியையும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றையும் அமைக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவது எப்போது? தலைமை அதிகாரி கருத்து

படத்தின் காப்புரிமை Getty Images

கும்பல் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றியது அமெரிக்கா - நூற்றாண்டு போராட்டம் வெற்றி

கும்பல் கொலைகளை தனி குற்றமாக்கும் சட்டம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.

ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியாக சட்டம் இயற்றிக்கொள்ளும் அதிகாரம் கொண்டுள்ள அமெரிக்காவில், இந்த மத்தியச் சட்டம் நாடு முழுமைக்கும் செல்லுபடியாகும்.

ஜூன் மாதம் கறுப்பினத்தைச் சேர்ந்த மூன்று செனட் உறுப்பினர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, குமபல் கொலை இனிமேல் கொலைக் குற்றமாக மட்டுமல்லாது, வெறுப்புணர்வால் செய்யப்படும் குற்றமாகவும் பதிவு செய்யப்படும்.

அமெரிக்க வரலாற்றில், இது வரை பெரும்பாலான கும்பல் கொலைகளுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதில்லை.

விரிவாகப் படிக்க:கும்பல் கொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தனிச் சட்டம் - நூற்றாண்டு போராட்டம் வெற்றி

படத்தின் காப்புரிமை BUDDHIKA WEERASINGHE

'மஹிந்த கட்சி மாறவில்லை'

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகிப்பதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது அந்தக் கூட்டணி.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சி மாறி பொதுஜன பெரமுனவில் உறுப்பினரானதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியே பறிபோய்விட்டதாகவும், எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது என்றும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க - மஹிந்த கட்சி மாறவில்லை என இலங்கை சபாநாயகருக்கு கடிதம்

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Image

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், டிசம்பர் 21 முதல் 26 வரை, இடையில் ஒரு நாள் தவிர 5 நாட்கள் இந்திய வங்கிகள் செயல்படப் போவதில்லை.

டிசம்பர் 21ம் தேதி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. டிசம்பர் 22ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படாது. 24ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும்.

25ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால் பொது விடுமுறை. 26ம் யு.எஃப்.பி.யு. கூட்டமைப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.

எனவே இந்த 6 நாட்களில் திங்கள்கிழமை தவிர 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

இவ்வாறு வங்கிகள் தொடர்ந்து இயங்காமல் இருக்கும்போது, மக்கள் பல்வேறு விதங்களில் அல்லல்படுகின்றனர்.

இந்த கஷ்டங்களை களைய என்ன செய்ய வேண்டும்? வங்கிகளுக்கு செல்லாமல் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இருக்கும் மாற்று வழிகள் என்ன?

விரிவாக படிக்க - வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

படத்தின் காப்புரிமை Reuters

எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த புகைப்படத்தில், `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை கூகுளில் 'ரிவர்ஸ் இமேஜ் தேடல்' ஆய்வு செய்தால் இது ஒரு உண்மையான புகைப்படம் என்பது தெரியவருகிறது; ஆனால், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க - எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா?

டிரம்ப் நிர்வாகத்தில் தொடரும் வெளியேற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலராக பதவி வகித்து வந்த ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகியுள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த மறுநாளே மேட்டிஸ் பதவி விலகியுள்ளார்.

"என்னைவிட உங்களுடன் ஒத்த கருத்துடைய ஒருவரை பாதுகாப்புச் செயலராக பதவியில் வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இருப்பதால் நான் இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்," என்று மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தில் கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் முன்னரே வெளியேறுவது ஓர் உத்திப் பிழை என்று விமர்சிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: