சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு : குஜராத் ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே.

தி இந்து(ஆங்கிலம்) : சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு : குஜராத் ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

சொராபுதீன் கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.வஞ்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்தவர் ரஜ்னிஷ் ராய்.

சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌவ்சர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி உள்ளிட்டவர்களை போலியாக என்கவுன்ட்டர் செய்ததாக கூறப்படும் வழக்கு ஒன்றில் மும்பையில் முக்கியத் தீர்ப்பு வருவதற்கு ஒருநாள் முன்னதாக இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்த ரஜ்னிஷ் ராய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெறுவதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியிருந்தார். ஆனால் மத்திய அரசு அவரது மனுவை நிராகரித்தது.

விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தபிறகு அலுவகம் வருவதை அவர் நிறுத்தியிருந்தால், விடுப்பை காரணம் காட்டி அவருக்கு பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி:''அனுமன் ஒரு முஸ்லிம்'' - பாஜக மேலவை உறுப்பினர் புக்கால் நவாப்

படத்தின் காப்புரிமை NARINDER NANU

இறைவன் அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என உத்தரப்பிரதேச மாநில பாஜக மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சமண துறவி ஒருவர், அனுமன் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்றார். இதுபோல பல்வேறு தரப்பினரும் அனுமனை மதம், ரீதியில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு சமாஜ்வாதியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மேலவை உறுப்பினரான புக்கால் நவாப் என்பவர் தற்போது அனுமனை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், '' அனுமன் அனைவருக்கும் சொந்தமானவர். ஆனால் உண்மையில் அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என நான் நம்புகிறேன். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பலரின் பெயர்கள் அனுமனின் பெயரோடு ஒத்துப்போகிறது. ரஹ்மான், ரம்ஜான், பர்மான், ஜீஷான், குர்பான் உள்ளிட்ட பெயர்களை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும்'' என்றார்.

ஷியா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புக்கால் நவாப், ராஷ்ட்ரீய ஷியா சமாஜ் தலைவராக உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை அவர் ஆரம்பம் முதல் ஆதரித்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை NurPhoto

தினகரன் : மக்களவை தேர்தலுடன் 7 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, மஹாராஷ்டிரா, அரியானா, ஆந்திரா, அருணாச்சலம் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில தேர்தல்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்பதற்கும் கோளாறு என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 1.76 லட்சம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிலவற்றில்தான் கோளாறு இருந்தது .

''மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்வது சாத்தியமில்லை. இது வாக்குகளை பதிவு செய்யும் இயந்திரம் மட்டுமே. நிரல்கள் எதுவும் செய்து இயக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் சரி என்றும், பாதகமாக வந்தால் மின்னணு இயந்திரம்தான் காரணம் என்றும் பழி போடுமளவுக்குத்தான் அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை உள்ளது.

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பானவை மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறவேண்டாம் என்பதால் ஆணையத்தின் நிலைப்பாடு'' என்றார் சுனில் அரோரா

தினத்தந்தி: பத்து சிறந்த காவல்நிலையம் பட்டியலில் பெரியகுளத்துக்கு இடம்

2018-ம் ஆண்டின் நாட்டிலேயே சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலை உள்துறை மந்திரி ராஜநாத்சிங் வெளியிட்டார். இதில் முதலாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் காலு காவல்நிலையமும், இரண்டாவது இதத்தில் கேம்ப்பெல் பே காவல்நிலையமும் உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் ஃபிராக்கா காவல்நிலையத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் காவல்நிலையம் உள்ளது.

எட்டாவது இடத்தில் தமிழகத்தின் பெரியகுளம் காவல்நிலையம் இடம்பெற்றுள்ளது. பத்தாவது இடத்தில் கோவாவின் சர்ச்சோரம் காவல்நிலையம் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்