சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை

பட மூலாதாரம், FREDERIC J. BROWN

சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரையும் விடுதலை செய்து மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் காவல் அதிகாரிகள்.

அரசு தரப்பால் உறுதியான ஆதாரம் எதையும் இந்த வழக்கில் முன்வைக்க முடியவில்லை.

"உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை. தங்கள் முன்பு வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை," என்று நீதிபதி ஜே.எஸ்.சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி சர்மா ஓர் ஊழல்வாதி சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், இன்றைய தீர்ப்புக்குப்பின் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இதற்கு ஆதாரம் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

சொராபுதீன் வழக்கின் பின்னணி என்ன?

குற்றப்பின்னணி உடையவர் எனச் சொல்லப்படும் சொராபுதீன் ஷேக் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை என்கவுன்டர் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருக்கு லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

ஐதராபாத்தில் இருந்து மஹாராஷ்டிராவில் உள்ள சங்லிக்கு சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கௌஸர் பி, மற்றும் கூட்டாளி துல்சிராம் பிரஜாபதி ஆகியோர் குஜராத் காவல்துறையால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Hindustan Times

பின்னர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து எடுத்த ஒரு கூட்டு நடவடிக்கையில் அஹமதாபாத் அருகே ஒரு என்கவுன்டரில் சொராபுதீன் கொல்லப்பட்டார். சில நாள்கள் கழித்து பனஸ்கந்தா மாவட்டத்தில் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி டிஜி வஞ்சாராவின் கிராமத்தில் சொராபுதீன் மனைவி கௌசர்பியும் கொல்லப்பட்டார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் போலியானது என்றும், இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் வழியில் துல்சிராம் தப்பிக்கமுயன்றதாகவும் அவரை தடுக்கும் முயற்சியில் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

பட மூலாதாரம், SAM PANTHAKY

படக்குறிப்பு,

சொராபுதீன் வழக்கில் 2010-ல் அமித் ஷாவுக்கு பிணை கிடைத்தபோது எடுக்கப்பட்ட படம்

2010-ல் இந்த வழக்கு சிபிஐயிடம் வந்தது. குஜராத் புலனாய்வுத்துறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வி.எல் சோலங்கி, அமித் ஷா இந்த என்கவுன்ட்டர் வழக்கை முடிக்க வேண்டும் என விரும்பியதாக சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

சிபிஐ விசாரணையில் ஒரு முக்கிய சேதி வெளிச்சத்துக்கு வந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த பளிங்கு சுரங்கத்தின் முதலாளியான விமல் படானி சொராபுதீன் ஷேக்கை கொல்வதற்காக குலாப்சந்த் கட்டாரியாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு இதற்காக 2 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் விசாரணை தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, அமித் ஷா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

2012-ல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

பட மூலாதாரம், CARAVAN MAGAZINE

படக்குறிப்பு,

நீதிபதி லோயா

2014-ல் எப்படி நிலைமை மாறியது?

சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரி அமித் ஷாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

2014-ல் மத்தியில் ஆட்சி மாறியது. நரேந்திர மோதி நாட்டின் பிரதமாரானார். அதிலிருந்து இந்த வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது.

அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.

இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை. 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா இறந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.

நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவையும், குலாப்சந்த் கட்டாரியா, விமல் படானி, அகமதாபாத் மாவட்ட வங்கியின் தலைவர் அஜய் படேல் மற்றும் இயக்குநர் யாஷ்பால் ஷர்மா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: