புலந்த்ஷகர் வன்முறை: என்ன நினைக்கிறது உ.பி. போலீஸ்? யார் பக்கம் பாஜக அரசு? கள ஆய்வு

  • நிதின் ஸ்ரீவத்சவ்
  • பிபிசி செய்தியாளர், புலந்த்ஷகரில் இருந்து
புலந்த்ஷகர்
படக்குறிப்பு,

பிரேம்ஜீத் சிங்

பகுதி 1

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷகரில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று நடைபெற்ற பசுவதை, அதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளில் காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் மற்றும் வன்முறை கும்பலைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் என்பவரும் கொல்லப்பட்ட விவகாரத்தால் மாநில அரசியலில் கொந்தளிப்பு நிலவுகிறது. அங்கு இப்போதைய நிலைமை என்ன என்பதை தெரிந்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட பிபிசியின் கள ஆய்வு இது.

முதலில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று ஒரு டஜன் பசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சென்றோம்.

அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் அறுவடை நடந்துக் கொண்டிருந்தது. அறுவடை வேலைகளை கண்காணித்துக் கொண்டிருந்த அந்த தோட்டத்தின் உரிமையாளர் பிரேம்ஜீத் சிங் எங்களிடம் வந்தார்.

தற்போது கிராமத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேட்டோம். "அமைதியாக இருந்த மஹாவ் கிராமத்தின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. பேச்சுவார்த்தைகள் மூலமாகவே சரிசெய்து விடக்கூடிய பிரச்சனையை வெளியில் இருந்து வரும் யோகேஷ் ராஜ் போன்றவர்கள் மோசமாக்கிவிட்டார்கள்" என்று பிரேம்ஜீத் சிங் வருத்தத்துடன் பதிலளித்தார்.

ஜனவரி 18ஆம் தேதியன்று பிரேம்ஜீத்தின் மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. கிராமத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்த திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்துக் கொள்கிறார் பிரேம்ஜீத்

படக்குறிப்பு,

இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்ட இடம்

பதற்றம்

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று பசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

அருகில் இருக்கும் சிங்ராவடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகையிடனர். கோபத்தில் இருந்த கும்பல் நெருப்பு வைக்க, உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக போலீசார் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்த பதற்றமான சூழ்நிலையில் காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங்கும், கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.

ஜீதூ ஃபெளன்ஜி, மஹாவ் கிராமத்து இளைஞர்கள் உட்பட மொத்தம் 20 பேர் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மஹாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள் பசுவதைக்கு எதிராகவும் பசுக்களை கொன்றவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

டஜன் கணக்கான வீடியோ பதிவுகள் மூலமாக காவல்நிலையத்திற்கு வந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தடம் புரளும் வாழ்க்கை

கரும்புத் தோட்டத்தில் அறுவடைப் பணிகள் நடந்துக் கொண்டிருந்தாலும் பிரேம்ஜீத் கவலையுடனே இருக்கிறார். காவல்துறையினர் வந்து தன்னை அழைத்துக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்திலேயே இருக்கிறார்.

டெல்லியில் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் தனது மகள், திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருந்தாலும், கிராமத்திற்கு வரத் தயாராக இல்லை என்று சொல்கிறார் பிரேம்ஜீத்.

மகள் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமல்ல, உறவினர்களும் கூட மஹாவ் கிராமத்திற்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். எங்கள் வாழ்க்கையே தடம் புரண்டுவிட்டது. ஆனால் வன்முறைக்கு காரணமான பிரதான குற்றவாளியை இன்னமும் ஏன் பிடிக்க முடியவில்லை? எங்கள் கிராமத்தின் மேல் காவல்துறையினர் கோபமாக இருக்கிறார்கள். மக்களை தாக்கும் அவர்கள், முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று தொடர்ந்து பல கேள்விகளை முன்வைக்கிறார்.

"தொகுதி எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் லோதியைத் தவிர வேறு யாரும் எங்களை சந்திக்க வரவில்லை, தேர்தல் வந்தால் எல்லாரும் வந்து எங்களை சந்திப்பார்கள்" என்று சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டார் பிரேம்ஜீத்.

பகுதி 2

"போலீஸையே அடிப்பீங்களா? எவ்வளவு தைரியம்? சும்மா நீலிக் கண்ணீர் விட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. எதுவாயிருந்தாலும் சரி, ஜட்ஜ் ஐயா கிட்டயே பேசிக்கோ".

முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசும் ஒரு போலீஸ்காரார், இளைஞர்கள் மூன்று பேரின் கைவிலங்குகளையும் ஒன்றாக இணைத்து தடிமனான கயிற்றால் கட்டுகிறார்.

பிராண்டட் ஜீன்ஸ், ஷூ, ஜாக்கெட் அணிந்திருக்கும் அந்த மூன்று இளைஞர்களும் விசும்பி அழுகின்றனர்.

மஹாவ் கிராமத்தில் இருந்து 25 நிமிட பயணத் தொலைவில் இருக்கும் ஸ்யானா காவல் நிலையத்தில் நாங்கள் நேரிடையாக பார்த்த நிகழ்வு இது.

அதில் இவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்கள்.

சிரங்காவடியில் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு கிடைத்த வீடியோப் பதிவுகளின் உதவியுடன், இந்த மூன்று இளைஞர்கள் உட்பட 28 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் பிரதான குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருக்கும் யோகேஷ் ராஜ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பட மூலாதாரம், Adnan Abidi/Reuters

கோபமும் தவிப்பும்

வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் இந்த காவல் நிலையத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சுபோத் குமாரின் மரணமும், அந்த வன்முறைச் சம்பவங்களும் காவல்துறையினருக்கு கோபத்தையும், தவிப்பையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் எங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். "யார் வேண்டுமானாலும் யாரையும் அடித்துவிட முடியுமா? அதிலும் போலீஸ் ஒருவரை அடிப்பதும் கொல்வதும் சிறிய விஷயமா என்ன? இப்போது அந்த வீடியோவை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், துப்பாக்கியால் சுடலாம் என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் சரி, வன்முறைக்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டோம்" என்று சீற்றத்துடன், ஆனால் அழுத்தம் திருத்தமாக அவர் கூறினார்.

டெல்லியில் இருந்து சில எம்.பிக்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட வருவதைப் பற்றி இரண்டு அதிகாரிகள் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, நம்மை நன்றாக திட்டுவார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் நாம் தான் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சலிப்புடன் அவர்கள் பேசிக் கொண்டதை அறிந்து கொண்டோம்.

பட மூலாதாரம், Adnan Abidi/Reuters

பகுதி 3

புலந்த்ஷகர் வன்முறை சம்பவத்திற்கு பிறகு, உள்ளூர் நிர்வாகத்தினருக்கு, அரசியல் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. சம்பவம் நடைபெற்ற சில நாள்களில் மாவட்ட காவல்துறை உயரதிகாரி பர்வீர் ரஞ்சன் சிங் லக்னோவில் அவசரசேவை 100 பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

காவல்துறை கண்காணிப்பாளர் ரைஸ் அக்தர் மற்றும் மண்டல அதிகாரி எஸ்.பி. சிங் என இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு போலீசாரின் பொறுப்பற்ற செயல்பாடு என்று விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ தேவேந்திர சிங் லோதி மற்றும் எம்.பி. போலா சிங், அதிகாரிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இது காவல்துறை வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கும்பலால் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் அறிக்கைகள் போலீசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங்கிடம் பிபிசி பேசியது. "பட்டப்பகலில் காவல்துறை அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகப்பெரிய குற்றம்" என்று அவர் தெரிவித்தார்.

"என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இதுபோன்ற சம்பவம் முதல்முறையாக நடந்திருக்கிறது. 72 மணி நேரத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வீடியோ பதிவுகள் இருக்கும் நிலையில், நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்படுவது அரசு நிர்வாகத்தின் அழுத்தம் இருப்பதை தெளிவாக உணர்த்துகிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Adnan Abidi/Reuters

படக்குறிப்பு,

புலந்த்ஷகர் வன்முறையில் எரிக்கப்பட்ட வாகனம்

நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை

விக்ரம் சிங்கின் கருத்துப்படி "இதுபோன்ற சூழ்நிலைகளில் போலீசாருக்கு அழுத்தம் இருப்பது இயல்பானதுதான். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடப்போம் என்று பணியில் சேரும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை போலீசார் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். முதலமைச்சர்கள் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருப்பார்கள், அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மீண்டும் ஆட்சியில் இருந்தாலும்கூட, காவல்துறையினர் தங்கள் உறுதியில் இருந்து பின்வாங்கக் கூடாது."

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்யானா தொகுதி பாஜக எம்.எல்.ஏ தேவேந்திர சிங் லோதியின் கருத்து மாறவில்லை.

பிபிசியிடம் பேசிய அவர், "உயர்மட்ட நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதுவரை இந்த விவகாரத்தை சரியான திசையில் கொண்டு செல்லவில்லை என்று கருதுகிறேன். எனவே நீதி விசாரணை தேவை என்று கோருகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏக்கள் பலருடன் சென்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவர் சந்தித்திருக்கிறார்.

"தவறு செய்யாதவர்களை சிறைக்கு அனுப்பக்கூடாது. சம்பவத்திற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியம்தான். புகார் பதிவு செய்வது, மக்களுக்கு விஷயத்தை புரியும்படி விவரிப்பது, அவர்களை அமைதிப்படுத்துவது என பலவிதங்களில் தாமதமாக செயல்பட்டிருக்கின்றனர். காவல்துறை நடவடிக்கையில் எனக்கு திருப்தி இல்லை" என்று சொல்கிறார் எம்.எல்.ஏ தேவேந்திர சிங் லோதி.

பாரபட்சமற்ற நடவடிக்கை

ஆனால் எம்.எல்.ஏவின் கருத்தில் இருந்து மாறுபடுகிறார் புலந்த்ஷகர் மூத்த போலீஸ் அதிகாரி பிரபாகர் சௌத்ரி. "போலீசாருக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது அழுத்தம் கொடுத்தாலும், அதை ஏற்கமுடியாத அளவுக்கு விவகாரம் தீவிரமாகிவிட்டது" என்கிறார் அவர்.

"பசுவதை மற்றும் கும்பல் வன்முறை தொடர்பான இரு விவகாரங்களிலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பசுவதை விவகாரத்தை விசாரித்தபோது, அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்ததால் அவர்களை விடுவித்துவிட்டோம்" என்கிறார் பிரபாகர் சௌத்ரி.

புலந்த்ஷகர் மாவட்ட ஆட்சியர் அனூஜ் ஜாவிடம் பேசியபோது, அரசியல் ரீதியிலான அழுத்தமோ, அச்சுறுத்தலோ இல்லை என்று என்று கூறுகிறார். "வன்முறை பரவக்கூடாது என்பதுதான் இந்த சம்பவத்திற்குப் பிறகு எங்களின் முன் இருந்த மிகப்பெரிய சவால். அந்த இக்கட்டான நிலைமையை நாங்கள் சாதுரியமாக கையாண்டோம். அதற்கு பிறகு தவறு செய்தவர்களை அடையாளம் காண்பதிலும், கைது செய்வதிலும் கவனமாக ஆனால் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டோம். எந்தவொரு விஷயத்திலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை."

ஆனால் பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம் பேசியபோது சொன்ன வார்த்தைகள் இவை: "இதுபோன்ற சூழ்நிலையில் அதிகாரிகளின் மனவுறுதி குறைந்துவிடுகிறது"

"பணியில் இருக்கும்போது இவ்வாறு ஒரு அதிகாரி கொல்லப்படும்போது, காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். நிலைமையை சமாளிப்பதற்காக செல்லும்போது, தாங்களும் இதே போன்று உயிரிழக்க நேரிடலாம் என்ற அச்சம் வருவது இயல்பானதுதான்"என்று அவர் நிதர்சனத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.

அரசின் நோக்கம்

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த சம்பவம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுவதை மறுக்கிறார் உத்திர பிரதேச பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சந்திரமோகன்.

"வன்முறை சம்பவத்தை அடுத்து அங்கு நிலைமை மோசமாகாமல் தடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் வெற்றி பெற்றுள்ளன" என்று சொல்கிறார் சந்திரமோகன்.

வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் யோகேஷ் ராஜ் மற்றும் ஷிகர் அகர்வால் இருவரும் பஜ்ரங் தள் மற்றும் பாஜக இளைஞர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவர் மீதான நடவடிக்கைகள் மந்தமாக இருப்பது ஏன்? இருவரும் இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறும் வீடியோவை ஏன் வெளியிட்டார்கள்? என பல கேள்விகளை பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திரமோகனின் முன் வைத்தோம்.

"இந்த குற்றச்சாட்டு தவறானது, கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதுமட்டுமல்ல, அதிகாரிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு செயல்படுகிறது" என்கிறார் சந்திரமோகன்.

பட மூலாதாரம், Adnan Abidi/Reuters

படக்குறிப்பு,

புலந்த்ஷகர் வன்முறையில் பிரதான குற்றவாளியாக கூறப்படும் யோகேஷ் ராஜின் குடும்பத்தை சேர்ந்த பெண்

'அரசியல் சதி'

புலந்த்ஷகர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று இரண்டு வார காலம் ஆகிவிட்டது. எதிர்கட்சி, ஆளும் கட்சி என ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதால் அரசியல் களமும் சூடு பிடித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு குற்றவாளிக்கு துணை போகிறது என்று குற்றம் சுமத்துகிறார் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங்.

இவ்வளவு பெரிய விவகாரம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறார். ஆனால், இரண்டு உயிர்கள் பறிபோனதைப் பற்றி எதுவுமே குறிப்பிடாத அவர், நிர்வாகத்தினர் பசுவதையை தடுக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அரசின் முன்னுரிமை எது என்பதையும் குற்றவாளிக்கு துணைபோகும் போக்கையும் இது காட்டுகிறது என்கிறார் அகிலேஷ் பிரதாப் சிங்.

உண்மையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதலமைச்சர், பசுவதையை தடுக்க வேண்டும் என்று கூறியதை பலரும் விமர்சிக்கின்றனர். மனிதர்கள் கொலை செய்யப்பட்டது பெரிய விஷயமாக தெரியாத முதலமைச்சருக்கு பசுவை கொன்றது மட்டுமே பெரிதாக தெரிகிறது என்றும், இதுபோன்ற செயல்கள் காவல்துறையின் மனவுறுதியை குறைத்துவிடும் என்றும் கவலைகள் எழுகின்றன.

இதைப் பற்றி பாஜக செய்தித்தொடர்பாளர் சந்திரமோகனிடம் கேள்வி எழுப்பியபோது, முதலமைச்சரின் அறிக்கை சரியானதுதான் என்று பதிலளித்தார். வன்முறை சம்பவம் நடைபெறுவதற்கு ஆணிவேராக இருந்தது பசுவதை தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இந்த வன்முறை சம்பவமும் அரசியல் சதிதான். புலந்த்ஷகரில் மிகப்பெரிய மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற சமயத்தில் பல்வேறு இடங்களில் பசுக்கள் கொல்லப்பட்டு, அவற்றின் சடலங்கள் பொது இடங்களில் வீசப்பட்டது ஏன் என்று அவர் எதிர்க் கேள்வி எழுப்புகிறார்.

படக்குறிப்பு,

புலந்த்ஷகர் மாவட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஹாமித் அலி

கோயில்-மசூதி அரசியல்

டிசம்பர் முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதிவரை புலந்த்ஷகரில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் கூட்டமான 'இஜ்தேமா'வில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர் என்பதை பாஜக சுட்டிக்காட்டுகிறது.

சுன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக கலந்துக் கொண்ட அந்த கூட்டத்தில், முஸ்லிம்கள் தங்கள் அடிப்படை போதனைகளை பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுபோன்ற இஜ்தேமா' கூட்டங்கள் அரசியல் பிரச்சனைக்கு அப்பாற்பட்டது என்று இஸ்லாமிய மத குருக்கள் கூறினாலும், அதில் அரசியல் கலப்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

வன்முறையை 'அரசியல் சூழ்ச்சி' என்று விவரிக்கும் பாஜகவின் கூற்றை சமாஜ்வாதி கட்சியின் புலந்த்ஷகர் மாவட்ட தலைவர் ஹாமித் அலி மறுக்கிறார்.

"அரசு உயரதிகாரிகளை அவசரமாக இடம் மாற்றியது ஏன்? இதில் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அலுவலர்களை மாற்றாமல் இருந்திருந்தால் இதற்குள் வழக்கு விசாரணையே முடிந்திருக்கும், ஆனால் கோயில் - மசூதி, இந்து-முஸ்லிம் போராட்டம் இனிமேலும் மக்களிடையே எடுபடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிறார் ஹாமித் அலி.

படக்குறிப்பு,

யோகேஷ் ராஜின் வீடு

பகுதி 4

மஹாவ் கிராமத்தில் பசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து எழுந்த வன்முறை, இருவர் உயிரிழந்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.

மஹாவ் கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் நயாபாஸ் கிராமத்திற்கு சென்றோம்.

இங்குள்ள வீடுகளில் பலவற்றில் இன்னமும் பூட்டு தொங்குகிறது. குறுகலான தெருவில் இருக்கும் யோகேஷ் ராஜின் வீட்டிற்கு சென்றோம்.

தெருவுக்குள் நுழையும்போதே "அகண்ட பாரதம்" வரைபடத்தை பார்க்க முடிகிறது. யோகேஷ் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர். இந்த பகுதியில் பசுவதை நடைபெற்றால் அங்கு முதலில் செல்வது யோகேஷ் தான் என்று அவரது அண்டை வீட்டுக்காரர் தெரிவித்தார்.

வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான குற்றவாளியாக கூறப்படும் யோகேஷ் ராஜ், சம்பவம் தொடர்பான வீடியோப் பதிவுகளில் காணப்படுகிறார். பசுவதை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுடன் சீற்றத்துடன் யோகேஷ் பேசுவது வீடியோக்களில் தெளிவாக பதிந்துள்ளது. ஆனால் தற்போது தலைமறைவாக இருக்கும் இவரை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை.

படக்குறிப்பு,

யோகேஷின் சித்தி பூரி தேவியும், அவரது மகளும்

புலந்த்ஷகர் காவல்துறை என்ன சொல்கிறது?

யோகேஷின் வீட்டிற்கு செல்லும் வழியில் எங்களை இடைமறித்த ஒரு பெண்மணி, "என் கணவரையும், மகனையும் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முடியுமா?" என்று கேட்டார். அப்படி கேட்டது யோகேஷ் குமாரின் சித்தி பூரி தேவி.

அவரிடம் பேசியபோது பல தகவல்கள் தெரியவந்தன. "சம்பவத்தன்று இரவு சுமார் 12 மணிக்கு இங்கு வந்த போலீசார் என் மகன் சமன் குமாரை அடித்து இழுத்துச் சென்றார்கள். தடுத்த என் மகளையும் அடித்தார்கள். அந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் என் மகன் இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். யோகேஷ் தலைமறைவாக இருப்பதால் என் மகனை கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள்" என்று பூரி தேவி கூறுகிறார்.

வன்முறையில் தொடர்புடையவர்கள் என போலீஸ் தாக்கல் செய்துள்ள 28 பெயர் கொண்ட பட்டியலில் பூரி தேவியின் கணவர் மற்றும் மகனின் பெயரும் இருக்கிறது. ஆனால், தன் மகன் காவல்துறைப் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுதும் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்ததாகவும், சம்பவ இடத்தில் அவன் இல்லை என்றும் பூரி தேவி சொல்கிறார்.

இது பற்றி போலீசாரின் கருத்து என்ன? "போலீஸின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டவர்கள் தான். சந்தேக நபர்களின் பெயரை தனியாக குறிப்பிட்டிருக்கிறோம்" என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

யோகேஷின் அண்டை வீட்டார் பேசுவதற்கே மறுத்துவிட்டார்கள். யோகேஷின் பெற்றோர் வன்முறை சம்பவங்கள் நடந்த அன்றே வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார்கள்.

படக்குறிப்பு,

மஹாவ் கிராமம்

பகுதி 5

வன்முறையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக்குடன் பேசினோம்.

"அப்பாவின் கொலை தொடர்பான விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பல கேள்விகள் மனதில் எழுகின்றன. அரசு, தனது ஆதரவாளர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது. மத அமைப்புகளின் அழுத்தம் அரசியல்வாதிகளுக்கு இருகிறது" என்கிறார் அபிஷேக்.

ஸ்யானா காவல்நிலைய ஆணையர் சுபோத் குமார் சிங்கின் மரணம் தொடர்பான விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர்.

படக்குறிப்பு,

புலந்த்ஷகர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் குட்டு என்பவரின் தாய்

வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த சுமித் என்ற இளைஞர் வன்முறையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவராக இருப்பது வீடியோ பதிவுகளில் தெளிவாகத் தெரிகிறது. அவருடன் இருந்தவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சிறைக்காவலில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுமித்தின் குடும்பம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும், சுமித்தை தியாகி என்று அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அதுமட்டுமல்ல, சுமித்தின் தந்தையை தனது அலுவலகத்தில் சந்தித்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்களுக்கும் காவல்துறைக்கும் என்ன சொல்ல விரும்புகிறார்? பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திரமோகனிடம் இந்த கேள்வியை எழுப்பினோம்.

"இளவயது மகனை பறிகொடுத்த ஒரு குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது தவறா? புலந்த்ஷகரில் அமைதியை கொண்டுவருவதுதான் எங்களுடைய முக்கிய குறிக்கோள்" என்று கூறுகிறார் உத்தரபிரதேச மாநில ஆளும் கட்சியான பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திரமோகன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :