அவசரப்பட்டுவிட்டாரா மு.க.ஸ்டாலின்…?

  • ஆர்.மணி
  • மூத்த பத்திரிகையாளர்
அவசரப் பட்டு விட்டாரா மு.க.ஸ்டாலின்…?

பட மூலாதாரம், TWITTER

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

சென்னையில் டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

''1980 ல் எங்கள் தலைவர் கலைஞர், நேருவின் மகளே வா, நிலையான ஆட்சியை தா, என்று அறைகூவல் விடுத்தார். அதே போல இப்போது நான் சொல்லுகிறேன். ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. ஆம். நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன். இந்தியாவை காப்பாற்றக் கூடிய வல்லமை ராகுலுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தக் கூடிய வல்லமை உங்களுக்கு (ராகுலுக்கு) இருக்கிறது என்று நம்புகிறேன்'' என்று பேசினார்.

ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் தான் முன் மொழிவதாக அறிவித்தார். ஆனால் அந்த மேடையில் இருந்த ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடோவோ, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே. ரங்கராஜனோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜாவோ ஒருவர் கூட இதனை வழிமொழியவில்லை.

சிலை திறப்பு விழா மேடையில் இருந்த திமுக தவிர்த்த மாற்று கட்சி தலைவர்கள் மட்டுமில்லை, இந்தியாவின் வேறெந்த பிரதான எதிர்கட்சியும், ஸ்டாலினின் முன்மொழிதலை வழிமொழியவில்லை. ஆம். மேற்கு வங்க முதலமைச்சரும், மக்களவையில் 30 க்கும் மேற்பட்ட எம் பி க்களை கொண்டிருக்க கூடிய, நான்காவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் (டிஎம்சி) மம்தா பானர்ஜியோ, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவோ (எஸ்பி) பகுஜன் கட்சியின் (பிஎஸ்பி) மாயாவதியோ, தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) ஷரத் பவாரோ, டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலோ, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நேஷனல் கான்ஃபிரன்ஸ் (என்சி) தலைவர் ஃபாரூக் அப்துல்லாவோ எவரும் ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு வழிமொழியவில்லை.

மேலே குறிப்பிட்ட கட்சிகளும், இன்னும் சில கட்சிகளும், மத்தியில் ஆளும் மோடியின் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற கடுமையாக கடந்த சில மாதங்களாக சேர்ந்தும், தனித்தனியாகவும் போராடிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இதில் ஸ்டாலின் முன்மொழிதலை கடுமையாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்தது திரிணாமுல் காங்கிரஸ் தான்.

பட மூலாதாரம், Getty Images

''இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும், தீவிரமாகவும், உன்னிப்பாகவும் இந்த விஷயத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறோம். எவர் ஒருவரது பெயரையும் பிரதமர் பதவிக்கு தற்போது முன் மொழிவது வரவேற்கத் தக்கதல்ல. இந்த நிகழ்வு எதிர்கட்சிகளிடம் இப்போது நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வல்லமை கொண்டது என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்று கொல்கத்தாவில் பேசிய திரிணாமூல் காங்கிரஸின் ஒரு மூத்த தலைவர் குறிப்பிட்டார்.

''பாஜக-வை வீழ்த்துவது ஒன்று மட்டுமே அனைத்து எதிர்கட்சிகளின் ஒற்றை இலக்காக தற்போது இருந்துகொண்டிருக்கிறது. அதற்காகவே எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், இன்னும் பல கட்சிகளின் தலைவர்களும் தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் ஸ்டாலின் சற்றே பொறுமை காத்திருக்கலாம். மற்ற எதிர்கட்சிகளையும் கலந்து பேசி அவர் ராகுலின் பெயரை முன்மொழிந்திருக்கலாம்'' என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது தமிழகத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்டாலினின் அறிவிப்பின் விளைவுகள் அடுத்தடுத்த இரண்டு மூன்று நாட்களில் தெரிய வந்தன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பதவியேற்பு விழாக்களில் மமதா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை. இந்த மூவருக்கும் முறையாக அழைப்புகள் கொடுக்கப்பட்டு அவர்கள் தாங்கள் பதவியேற்பு விழாக்களுக்கு வருவதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப் பட்டாலும், உண்மையான காரணம், ராகுல் காந்தியை பிரதமராக ஸ்டாலின் முன்மொழிந்ததுதான் என்றே பார்க்கப் படுகிறது.

இந்தியாவின் ஒவ்வோர் பிராந்திய கட்சிக்கும் பிரத்தியேகமாக பிரச்சனைகள் இருக்கின்றன. கடந்த நான்கரை ஆண்டு கால மோடி ஆட்சியில் கிட்டத்தட்ட அத்தனை பெரிய பிராந்திய கட்சிகளும் மோடியின் அணுகுமுறையால் கடுமையான கோபத்துக்கும், எரிச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஆளாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தங்களுடைய மாநிலத்தில் காங்கிரஸ் ஓரளவுக்கு மேல் தலை தூக்குவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் இது அந்தந்த குறிப்பிட்ட மாநில கட்சிகளின் அரசியல் செல்வாக்கின் அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்துவிடும். உதாரணத்திற்கு மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், மமதா பானர்ஜிக்கு இன்றைய பிரதான எதிரியாக மார்க்ஸிஸ்ட் கட்சி இல்லை. மாறாக பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக-வை வீழ்த்த காங்கிரஸுடன் சேர மமதா தயார்தான். ஆனால் எந்தளவுக்கு காங்கிரஸின் வளர்ச்சியை அவர் அனுமதிப்பார் என்பது பிரதான கேள்வியாக இன்று இருக்கிறது.

பட மூலாதாரம், TWITTER

இதே கதைதான் உத்திர பிரதேசத்திலும், மாயாவதியும், அகிலேஷ் யாதவும் காங்கிரஸுடன் சேரத் தயார். ஆனால் எந்தளவுக்கு காங்கிரஸை வளர அனுமதிக்க வேண்டும், அனுமதிக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வி. மமதா பானர்ஜி, மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இவர்கள் மூவரும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பதாக சொல்லுகிறார்கள். இந்த மூன்று மாநிலக் கட்சிகளின் சார்பில் வெற்றி பெறும் எம்பி-க்களின் எண்ணிக்கை, காங்கிரஸின் எம் பி க்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு இது நன்மை பயக்கும், இல்லையென்றால், இது மீண்டும் காங்கிரஸின் மேலாதிக்கத்திற்கு வழி வகுத்து விடும். ஆகவே இதனை எந்தளவுக்கு மட்டுப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மட்டுப்படுத்த வேண்டும், குறைக்க வேண்டும் என்பது இந்த மூன்று முக்கிய மாநில கட்சிகளின் அரசியல் அணுகுமுறையாக தற்பொழுது இருந்து கொண்டிருக்கிறது.

இன்னோர் நிகழ்வையும் நாம் நினைவில் கொள்வது முக்கியமானது. ஸ்டாலினின் முன்மொழிதலுக்கு சில நாட்களுக்கு முன்பு 21 எதிர்கட்சிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் டில்லியில் நடந்தது. இதனை மமதாவும், மாயாவதியும் புறக்கணித்தனர். இதனை கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடந்த குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் சோனியா காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால், ஷரத் யாதவ், சந்திரபாபு நாயடு, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால், மோதி அரசை வீழ்த்தும், எதிர்கட்சிகளின் ஒற்றுமை, ஸ்டாலினின் அறிவிப்புக்குப் பிறகு, தாற்காலிகமாவது பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றே நான் பார்க்கிறேன்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் நான் பணியாற்றிய போது டில்லி ஏஎன்ஐ தலைமை அலுவலகத்தில் பணியாற்றி, தற்பொது கொல்கத்தாவில் வங்க மொழி பத்திரிகை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் என்னுடைய நீண்ட நாள் பத்திரிகை நண்பர் ஒரு கருத்தை சொன்னார்; ''இன்று முக்கியமான பல மாநில கட்சிகள் மோதியை கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானவர் மமதா பானர்ஜி. ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழியும் செயலை ஸ்டாலின் மமதா உள்ளிட்ட தலைவர்கள் இருக்கும் மேடையில் செய்திருக்கலாம். மற்றும் ஒரு விஷயம், இந்த முன்மொழிதலை வேறோர் முக்கியமான, அகில இந்திய அளவிலான கூட்டத்தில், பேரணியில் ஸ்டாலின் செய்திருக்கலாம். உதாரணத்திற்கு வரும் ஜனவரியில் டில்லியில் இந்தியாவின் அனைத்து பெரிய தொழிற்சங்கங்களும் மிகப் பெரிய கண்டன பேரணிக்கும், பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் இந்தியாவின் அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், மமதா உட்பட கலந்து கொள்ள இருக்கிறார்கள். அது போன்ற ஒரு முக்கிய நிகழ்வில் ஸ்டாலின் இந்த முன்மொழிவை செய்திருந்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போதுதான் அரும்பத் தொடங்கியிருக்கும் எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சிகளில் தெரிந்தோ, தெரியாமலோ ஸ்டாலின் மண்ணை அள்ளி போட்டு விட்டோரோ என்றே நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்.

அவர் வேறோர் கருத்தையும் என்னிடம் சொன்னார்; ''பல பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து, அதன் சார்பில் காங்கிரஸுடன் பேரம் பேசும் காரியத்தை மேற்கொள்ளுவதற்கான ஒரு முயற்சியின் பூர்வாங்க வேலைகளை கடந்த சில மாதங்களாக மும்முரமாக மமதா மேற்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட செயல் ஒரு மாநில கட்சியின் தலைவரை பிரதமர் வேட்பாளராக நிலை நிறுத்தக் கூடிய அளவுக்கு போக முடியும் என்று மமதா உண்மையாகவே நம்பினார். ஆகவே, அதீதமான தன்முனைப்பு (Personal Ego) கொண்ட மமதா போன்ற தலைவர்கள் ஸ்டாலினின் முன்மொழிவை எப்படி எடுத்துக் கொள்ளுவார்கள் என்பதை அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். இதுதான் தற்போதய சிக்கலே'' என்கிறார் அந்த நண்பர்.

2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அன்றைய வாஜ்பாய் அரசுக்கு எதிராக மிகப் பெரிய ஒரு கூட்டணி தேசிய அளவில் (Rainbow alliance) உருவாக்கப் பட்டது. அதில் முக்கிய பங்காற்றியவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதய பொதுச் செயலாளர் ஹர்கிஷண் சிங் சுர்ஜித், முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி. இதில் குறிப்பாக சுர்ஜித்தைப் பற்றி சொல்லும் போது, விருப்பு, வெறுப்பற்று, கள அரசியலை துல்லியமாக எடை போடுவதிலும், எதிரும், புதிரும் அரசியல் நிலைப்பாடு கொண்ட, பல பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை செய்து, வலுவான அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதிலும் சுர்ஜித் கைதேர்ந்த ஒரு நிபுனர் என்று விவரமறிந்தவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நவீனகால அரசியல் கூட்டணிகளின் சிற்பி ஹர்கிஷன்சிங் சுர்ஜித். இன்று துரதிர்ஷ்டவசமாக மேலே சொன்ன மூவரும் உயிருடன் இல்லை. ஆகவே 2004-ல் நடந்தது போன்ற மோடிக்கு எதிரான மிகப் பெரிய ஒரு கூட்டணி (Rainbow alliance) தேசிய அளவில் இன்று உருவெடுப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.

ஆனால் திமுக இது சரியான நடவடிக்கை என்றே ஸ்டாலினின் முன்மொழிதலை பார்க்கிறது. எப்படியென்றால், மூன்று மாநிலத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் வரும் தேர்தலில் முக்கிய பங்காற்றப் போகிறது. காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வரும். ஒன்று காங்கிரஸ் பிரதமர் நாட்டை ஆளுவார். அல்லது பல பிராந்திய கட்சிகளின் கூட்டணி, ஒரு மூன்றாவது அணியாக ஆட்சிக்கு வரும். அந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு தரும். ஆகவே எப்படி பார்த்தாலும் காங்கிரஸின் பங்கு தேர்தலுக்கு பிறகு அமையும் ஆட்சியில் முக்கியமானதாக இருக்கும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது தங்களுக்கு லாபம் என்றே திமுக பார்க்கிறது.

பட மூலாதாரம், Getty Images

திமுக வின் கணக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் சரியானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் மற்ற சில மாநிலங்களில் நிலைமை வேறு மாதிரி போகலாம். தெலுங்கானா தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை சந்தித்தது. இதே கதைதான் உத்திரபிரதேசத்திலும் நடந்தது. சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பாஜக-விடம் பறிகொடுத்து நிற்கிறது. அந்த பின்புலத்தில் பார்த்தால் காங்கிரஸுடனான கூட்டணி தமிழ்நாட்டில் திமுக வுக்கு லாபம் பயக்கலாம். ஆனால் வேறு மாநிலங்களில் அந்தந்த பெரிய மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒரு பெரிய பாரமாகி, குறிப்பிட்ட பெரிய மாநில கட்சிகள் தங்களது தேர்தல் தோல்வியை மோடியின் காலடியில் சமர்ப்பணம் செய்யும் அரசியல் நிலைமை தோன்றலாம்.

பாஜக வழக்கம் போலவே இந்த நிகழ்வுகளை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறது. ''மோடி அரசை தோற்கடிக்க உரிய யோசனைகளை உருப்படியாக உருவாக்குவதற்கு முன்பே எதிர்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டன. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்'' என்கிறார் பாஜக பொதுச் செயலாளர் ஒருவர். ''இன்னும் பத்தாண்டுகளுக்கு பிரதமர் பதவி காலியாக இல்லை' என்கிறார் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ்.

மூன்று மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உள்ளுக்குள் ஆட்டம் கண்டிருக்கும் பாஜக வெளிப்புறத்தில் தாங்கள் ஸ்டாலினின் முன்மொழிதலைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொல்லுவது வெற்றுச் சவாடல் பேச்சாகவும் கூட இருக்கலாம். ஆனால் நேரடியாக மோடியுடன் ராகுலை மோதவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பது எதிர்கட்சிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

இதில் பாஜகவில் ஒரு சாராரின் சுவாரஸ்யமான ஒரு கருத்து இதுதான்; ''வரும் தேர்தல் மோடியா அல்லது ராகுலா என்று இரண்டு ஆளுமைகளை சுற்றி சுழல்வது எங்களுக்கு நல்லது. அதிபர் தேர்தல் போலவே இருவரை சுற்றி பிரச்சாரம் சுழலட்டும். மோடியின் அரசியல் ஆளுமையும், பேச்சுத் திறனும், ராகுலுடன் மோதட்டும். வெற்றி மோடிக்குத் தான் என்பதை நாடறியும். அந்த வகையில் ஸ்டாலினின் முன்மொழிதலை நாங்கள் வரவேற்கிறோம்'' என்று மறைமுகமாக சில பாஜக தலைவர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் வரும் முக்கியமான மற்றுமோர் கருத்து, மோடியா ராகுலா என்று தேர்தலை இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலேயே சுருக்குவது என்பது பாஜக வீசநினைத்த அல்லது ஏற்கனவே விரித்து வைத்திருக்கும் வலை, இதில் ஸ்டாலின் தெரிந்தே போய் விழுந்தாரா அல்லது தெரியாமல் தானே போய் அந்த வலைப்பின்னலில் அவராகவே சிக்கிக் கொண்டாரா என்பதுதான் கேள்வி. ஓர் எதிர்கட்சிகூட ஸ்டாலினின் முன்மொழிதலை இது வரையில் வழிமொழியாமல் இருப்பதும், அதில் சில எதிர்கட்சிகள் இதனை எதிர்ப்பதும், சில எதிர்கட்சிகள் மெளனம் காப்பதும், பாஜக-வின் கூற்றை ஒதுக்கித் தள்ள முடியாததாகவே இன்றைய அளவில் மாற்றியிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன்.

திமுக 1980 ஜனவரியில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் போட்டியிட்டு அந்த கூட்டணி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 30, 1979ல் சென்னை பொதுக் கூட்டத்தில் பேசும் போதுதான் கருணாநிதி, ''நேருவின் மகளே வா, நிலையான ஆட்சியை தா'' என்றார். மக்களும் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு நிலையான ஆட்சியை தந்தார்கள். இந்திரா காந்தியை பிரதமராக்கினார்கள்.

டிசம்பர் 16, 2018 பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது ''நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன். இந்தியாவை காப்பாற்றக் கூடிய வல்லமை ராகுலுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தக் கூடிய வல்லமை உங்களுக்கு (ராகுலுக்கு) இருக்கிறது என்று நம்புகிறேன்'' என்று பேசினார்.

ஆனால் 39 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கும் தற்போதய நிலைமைக்கும் அடிப்படையிலேயே ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது. கருணாநிதி காலத்தில் தேசிய மற்றும் மாநில அளவில் இவ்வளவு கட்சிகள் இல்லை. அப்போது காங்கிரஸ், சிதைந்த ஜனதா கட்சியின் இரண்டு அல்லது மூன்று கட்சிகள், இரண்டு இடதுசாரி கட்சிகள், திமுக, அஇஅதிமுக, உள்ளிட்ட சொற்ப மாநில கட்சிகளே இந்தியாவில் இருந்தன. தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இந்தியாவில் குறைந்தது 15 வலுவான மாநில கட்சிகள் இருக்கின்றன. பிரச்சனைகளின் தன்மைகளும் பெரிய அளவில் மாறியிருக்கின்றன.

அப்பாவின் வேண்டுகோளுக்கு தேசிய அளவில் கிடைத்த வெற்றி, மகனின் வேண்டுகோளுக்கு தேசிய அளவில் கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதற்கான முக்கிய காரணம் அது 1979. இது 2018. இன்று இந்தியா முழுவதும் பல கட்சிகள் வந்து விட்டன. ஸ்டாலினின் வேண்டுகோள் வெற்றியில் முடியுமா என்பது இன்றளவில் மில்லியன் டாலர் கேள்விதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: