ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகத்தடை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இளையராஜா

பட மூலாதாரம், MANISH SWARUP

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தினமணி : பாரம்பரிய இசையை காக்க 'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா

சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.

பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

தினந்தத்தி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகத்தடை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட, இதையடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு சார்பில் பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்துச் செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற பசுமை தீப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 15-ம் தேதி அன்று பிற்பகலில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது அன்றையதினம் காலை 7.39 மணி அளவில் வேதாந்தா குழுமம் சார்ந்த ஏஜென்சிக்கு இந்த தீர்ப்பு நகல் இணையதளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

''தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதற்கு வருகிற மார்ச் மாதம் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா? என்பதை ஜனவரி மாதம் 21-ம் தேதி இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்'' என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை உடனடியாக திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) : சிறுமியை வல்லுறவுக்குள்ளக்கிய குற்றத்துக்கு பீகார் எம்.எல்.ஏவுக்கு ஆயுள்தண்டனை

பட மூலாதாரம், Getty Images

பீகாரில் நவாடா மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றத்திற்காக ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ ராஜ் பல்லா யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாட்னாவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம்.

சுலேகா தேவி மற்றும் ராதா தேவி எனும் மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று குற்றவாளிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுமி 2016-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி எம்.எல்.ஏ இல்லத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்.

லாலு இவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கினார். பின்னர் எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.

தினகரன் : தமிழகத்தில் இருந்து 30 இளம்பெண்கள் சபரிமலை பயணம்

பட மூலாதாரம், ARUN SANKAR

தமிழகத்தில் இருந்து வரும் 23-ம் தேதி 30 இளம்பெண்கள் சபரிமலை தரிசனத்துக்கு செல்ல உள்ளதாக மனிதி அமைப்பு நிர்வாகி சுசீலா தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மாதவிடாயை காரணம் காட்டி குறிப்பிட்ட வயதில் இருக்கும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை ரத்து செய்து, அனைத்து பெண் பக்தர்களும் சபரிமலை செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் செயல்பட்டுவரும் மனிதி எனும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 30 இளம்பெண்கள் விரைவில் சபரிமலைக்குச் செல்லவுள்ளதாக அதன் தலைவர் சுசீலா தெரிவித்துள்ளார். இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பை அதிகரிக்க கேரள காவல்துறை தீர்மானித்துள்ளது.

''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 இளம் பெண்கள் 23-ம் தேதி கோட்டயம் செல்வார்கள். அங்கிருந்து சபரிமலை செல்வார்கள். ஏற்கனவே இது குறித்து கேரள முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் பாதுகாப்பு கேட்டுள்ளோம். முதல்வர் அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என பதில் கிடைத்துள்ளது'' என்கிறார் சுசீலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: