பிரிவினையை தூண்டுபவர்களை வேரறுங்கள் - மோதி காவல்துறையிடம் வலியுறுத்தல்

மோதி

பட மூலாதாரம், Suhaimi Abdullah

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தினமணி : பிரிவினை சக்திகளை வேரறுக்க வேண்டும் - மோதி வலியுறுத்தல்

குறுகிய கால ஆதாயத்துக்காக சாதிப் பிரச்சனைகளை தூண்டிவிடும் பிரிவினைச் சக்திகளை வேரறுக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு நரேந்திர மோதி அறிவுறுத்தினார்.

குஜராத்தில் காவல்துறை ஐஜி, டிஜிபி ஆகியோருடன் ஆண்டுதோறும் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோதி கலந்துகொண்டு பேசுகையில் சமூகத்தில் சாதிப் பிரச்சனைகளையும் பிரிவினையையும் தூண்டிவிடுபவர்களை வேரறுக்க வேண்டும். ஒற்றுமையை வலியுறுத்துபவர்களை ஊக்குவிக்கவேண்டிய அதே நேரத்தில் பிரிவினை சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: சபரிமலைக்கு புறப்பட்டனர் 12 தமிழக பெண்கள்

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சனிக்கிழமை மாலையில் சென்னையில் இருந்து 12 பெண்கள் சபரிமலைக்கு பயணம் செய்துள்ளனர்.

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் பெண்கள் உரிமைகள் சார்ந்து இயங்கும் நிறுவனமான மனிதி எனும் குழுவில் அங்கம் வகிக்கும் 42 வயது வழக்கறிஞர் செல்வி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் பாதுகாப்பு கேட்டதாகவும், துணை செயலருக்கான அதிகாரத்தை கொண்டிருக்கும் ஒரு கேரள உயரதிகாரி பாதுகாப்பு தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் பயணிக்கும் மூன்று செயற்பாட்டளர்கள் கோயிலின் புனிதமான 18 படிகளில் ஏறமாட்டார்கள் என்றும் மற்ற ஒன்பது பக்தர்கள் அய்யப்பனை தரிசிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

''முதலில் நாங்கள் நிலக்கல், பம்பா செல்வோம் அங்கிருந்து கோயில் செல்ல காவல்துறையின் பாதுகாப்பு எங்களுக்கு கிடைக்குமென நம்புகிறோம்'' என செல்வி கூறியதாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளையில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள சிறு அமைப்புகள் பெண்கள் கோயிலுக்குச் செல்வதை தடுத்து நிறுத்துவோம். கோட்டயத்திலேயே அக்குழு தடுத்து நிறுத்தப்படும் எனக் கூறியிருக்கிறார்கள்.

தி இந்து (ஆங்கிலம்): அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்குச் சமம் - டிடிவி தினகரன்

அதிமுகவுடன் அமமுக என செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேட்டபோது ''அமமுகவின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறவர்கள் இது மாதிரியான செய்திகளை பரப்பிவிடுகிறார்கள். எங்களது குழு சுதந்திரமாக இயங்க வேண்டும் எனவிரும்புகிறது. நாங்கள் தேர்தலில் எங்களது பலத்தை நிருபித்து அதிமுக மற்றும் இரட்டை இலையை மீட்டெடுப்போம்.

மக்களவைத் தேர்தலை பொருத்தவரையில் ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சிந்திப்போம். தேசிய கட்சிகளால் முல்லைப்பெரியாறு, காவிரி, மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகளில் உறுதியான தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. அமமுக கட்சி யார் பிரதமர் என்பதை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியமான கட்சியாக உருவெடுக்கும்'' எனக் கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

தினத்தந்தி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களின் 12 பேரின் தலை, மார்பில் குண்டு ஊடுருவியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக உடல் கூராய்வில் தெரிய வந்துள்ளது.

இறந்தவர்களின் உடல் கூறாய்வு குறித்த அறிக்கையை ஒரு தனியார் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் தெரிவிக்கிறது.

அதன்படி, இறந்த 13 பேரில், 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டு பாய்ந்துள்ளது. எட்டு பேர் பின்புறமிருந்து சுடப்பட்டதால் இறந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் தலையில் குண்டு ஊடுருவியுள்ளது.

ஸ்னோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியே வந்துள்ளதாக உடல்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜான்சி என்ற 40 வயது பெண் அவரது வீட்டுக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது காதில் குண்டு பாய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல் கூறாய்வு நடந்த தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறை தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்கிறது அந்நாளிதழின் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: