சபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிக்குள் செல்லாமல் திரும்புகின்றனர்

சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்

பட மூலாதாரம், A.S.Satheesh

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி - கம்பமேடு வழியை காலை 3.30 மணிக்கு வந்தடைந்த பெண்கள், சபரிமலைக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

30-40 போராட்டக்காரர்கள் அய்யப்பன் குறித்து கோஷங்களை எழுப்ப தொடங்கியவுடன், கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்

பட மூலாதாரம், A.S.Satheesh

"நாங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லப்படுகிறோம். மூன்று ஜீப் மற்றும் ஒரு போலிஸ் பேட்ரோல் வண்டி எங்களின் பாதுகாப்பிற்கு எங்களுடன் வரவுள்ளது. போலிஸ் எங்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை. மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாங்கள் திரும்பிதான் செல்ல வேண்டும்" என்று மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி தெரிவித்தார்.

கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களில் ஆறுபேர் பக்தர்கள், பிறர் செயற்பாட்டாளர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சபரிமலை கோயிலுக்கு செல்ல முற்பட்ட பெரிய பெண்கள் கூட்டம் இதுவே.

இந்த பெண்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது இருப்பினும், போராட்டக்காரர்கள் அவர்களை துரத்தியதால் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

"கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. பிற பக்தர்களும் அவர்களை எதிர்க்கிறார்கள்" என சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பான, சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்த குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் "தமிழகத்தை சேர்ந்த அந்த பெண்கள் மாவோயிஸ்டுகள் என்றும், கேரளாவின் சட்டம் மற்றும் அமைதியை குலைக்கவே அவர்கள் விரும்புகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்

பட மூலாதாரம், A.S.Satheesh

அக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரெஹானா ஃபாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சபரிமலையின் பிரதான சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

சபரிமலை செல்ல முயன்ற பெண்களும் தோல்விக்கதைகளும்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

முன்னதாக கடந்த நவம்பர் 16-ம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் சுமார் 14 மணிநேர காத்திருப்புக்கு பிறகு, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் புனே திரும்பினார்.

முன்னதாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அக்டோபர் மாதத்தில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த வழியில், ரெஹானா ஃபாத்திமா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில் அவர் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் மற்றும் அவரது தொடை தெரியுமாறு அந்த புகைப்படம் இருந்தது.

ரெஹானா ஃபாத்திமா,ரெஹானா ஃபாத்திமா,

பட மூலாதாரம், AFP

அந்தப் புகைப்படம் உடல் பாகங்களை வெளிப்படுத்துமாறு இருந்ததாகவும், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் பணிபுரியும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த விசாரணை முடியும் வரை ஃபாத்திமாவை இடைநீக்கம் செய்துள்ளது.

தான் ஐய்யப்ப பக்தை என்று ரெஹானா கூறினாலும், அவர் ஒரு முஸ்லிம் என்பதினால், இந்த விஷயம் பழமைவாத இந்துக்குழுக்களை கோபப்படுத்தி உள்ளது.

சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள்

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து கசப்பான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை) காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள் அனைவரும் கருப்பு நிற சேலை அணிந்திருந்தனர்.

திருநங்கைகள் கோயிலுக்குள் செல்லலாம் என கமிட்டி ஒப்புக்கொண்டது. மேலும் கோயில் நிர்வாகிகளும் திருநங்கைகள் மாதவிடாய்க்கு உள்ளாகமாட்டார்கள் என்பதால் அவர்களை அனுமதிக்க ஆட்சேபனையில்லை என்றனர்.

20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள்

பட மூலாதாரம், A S Satheesh

படக்குறிப்பு,

20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில் சில போலீசார் திருநங்கைகளை ஆண்கள் போல வேடமிட்டு கோயிலுக்குள் வருமாறு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் திருநங்கைகள் காவல்துறையின் யோசனைகளை ஏற்கவில்லை. கேரள உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி முன்பு இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றனர்.

கோயிலுக்குச் சென்ற நான்கு திருநங்கைகளில் ஒருவரான 33 வயதான திருப்தி பிபிசி இந்தி சேவையிடம் பேசியபோது ''அய்யப்பனை தரிசித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாங்கள் எல்லோரும் பக்தர்கள். சபரிமலைக்குள் செல்வதற்கு என்னென்ன சடங்கு விதிகள் இருக்கிறதோ அத்தனையையும் நாங்கள் கடைபிடித்துள்ளோம்'' என்றார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: