ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? உண்மை என்ன? பிபிசி ஆய்வு

  • பிரசாந்த் சாஹல்
  • உண்மை கண்டறியும் குழு, பிபிசி
ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. 'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன.

ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

'அரசு எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், ஹரியானாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்துக்களின் மாமிசத்தை உண்பவர்கள் மேவாரில் தங்கியுள்ளனர்' என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், VIRAL POST

இந்த செய்தி, டிவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ்ஸிலும் பகிரப்படுகிறது. இந்த அதிர்ச்சியான செய்திகளை வாட்ஸ்-அப் செயலிலும் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர்.

'தைனிக் பாரத் நியூஸ்' என்ற வலைதளத்தில் 'ஆஜ் தக் குட்காவ்' பத்திரிகையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், மேவாதின் உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்து இளைஞர் ஒருவரின் மாமிசத்தை சாப்பிட்டபோது, பிடிக்கப்பட்டதாக இந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது. மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கலிடம் பேசினோம். இதுபோன்ற குற்றச்சாட்டு குருகிராமில் பதிவாகியிருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம்.

எங்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், "இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று தெளிவாக கூறிவிட்டார்.

பிறகு எந்த அடிப்படையில் இதுபோன்ற செய்தி வெளியானது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றோம்.

அங்கு சென்றதும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின. இந்த செய்தியை எழுதியது பத்திரிகை ஆசிரியர் சத்பீர் பரத்வாஜ் என்பது முதல் தகவல். 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகைக்கும், இந்திய டுடே குழுமத்தின் 'ஆஜ் தக்' ஊடகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது.

இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் சத்பீர் பரத்வாஜிடம் பேசினோம்.

பட மூலாதாரம், DBN.COM

'ஆஜ் தக் குர்காவ்' மற்றும் 'பஞ்சாப் கேஸரி' பத்திரிகையின் குர்காவ் பதிப்பின் செய்திப்பிரிவுத் தலைவராகவும் பணியாற்றுகிறார் சத்பீர் பரத்வாஜ்

பத்திரிகைத்துறையில் 28 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்கும் சத்பீர் பரத்வாஜ் குற்றச் சம்பவங்களையும் பற்றி எழுதி வருகிறார்.

பிபிசியிடம் பேசிய சத்பீர் பரத்வாஜ், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

"ஹரியானாவின் இந்துக்களின் மாமிசத்தை உண்ணும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்தது. மேவாத் மற்றும் துவாரகா எக்ஸ்பிரஸ்-வே வழித்தடத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளில் தங்கியிருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நேரில் சந்தித்து பேச முடிவுசெய்தேன்" என்று கூறுகிறார் சத்பீர் பரத்வாஜ்.

பட மூலாதாரம், AAJ TAK GURGAON

ஹரியானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான மேவாதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அங்கு 75% முஸ்லிம்கள் வசிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கிராமங்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு,, மேவாதில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் தலைவர்கள் சிலர் அவர்களுக்கு கம்பளிகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார்.

மேவாத் மாவட்டத்தில் மொத்தம் 1356 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கியிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் தெரிவித்தார்.

'காஷிஃப்' என்ற இளைஞர் கூறியதன் அடிப்படையிலேயே, 'இந்து மாமிசத்தை உண்ணும்' மனிதர்கள் பற்றிய கட்டுரையை எழுதியதாகவு, அதை தனது பத்திரிகையில் 10-16 டிசம்பர் இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார்.

ஆனால் காஷிஃப்பை எங்கே சந்தித்தார்? மேவாத் அல்லது குருகிராமத்தின் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் இது பற்றி பேசினாரா? அல்லது இந்த விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வேறு யாரிடமாவது பேசினாரா? என்ற கேள்விகளுக்கு சத்பீர் பரத்வாஜிடம் சரியான பதில் இல்லை.

பட மூலாதாரம், Reuters

பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை

புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அது போலிச் செய்தி என்று தெரிய வந்தது. மேலும், சத்பீர் பரத்வாஜ் பகிரப்பட்ட புகைப்படம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருப்பதால் அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று பிபிசி முடிவெடுத்தது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் பகிரப்பட்டது. திபெத் மக்களின் இறுதிச் சடங்குகள் பற்றிய புகைப்படம் இது என்று அதில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சடலத்தை காட்டுப் பறவைகளுக்கு உணவாக கொடுக்கும் நடைமுறை என்று புகைப்படத்துடன் பகிரப்பட்டிருக்கும் செய்தியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

இதைத் தவிர @PhramahaPaiwan என்ற பேஸ்புக் பயன்பாட்ட்டாளர் இந்த செய்தியை 2014 ஆகஸ்ட் மாதம் பகிர்ந்துள்ளார்.

2014ஆம் ஆண்டில், இந்த புகைப்படம் சில டிவிட்டர் பயனர்களால் பகிரப்பட்டுள்ளது. அதிலும் திபெத்தியர்களின் மரண இறுதிச் சடங்குகள் என்ற மோற்கோளுடன், இந்த புகைப்படங்கள் திபெத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திபெத்திய மக்களின் இறுதி சடங்குகளின் யூ டியூப் வீடியோக்களும் உள்ளன. அதில், சடலங்கள் கழுகு போன்ற பறவைகளுக்கு இரையாக போடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: