அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதை' - சர்ச்சையான சொற்பொழிவு

மொராரி பாபு

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

மொராரி பாபு

நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தமிழ் இந்து: "அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதை' சொற்பொழிவு நடத்திய ஆன்மீக தலைவர் - சர்ச்சை"

பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆன்மிக தலைவர் மொராரி பாபு, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றிய நிகழ்ச்சி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரபல ஆன்மிக தலைவர் மொராரி பாபு, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றினார். இதனால் அயோத்தி நகரமே சீர்குலைந்துவிட்டதாக அயோத்தி நகரத்தினர் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அயோத்தியில் உள்ள தாண்டியா கோயிலின் தலைமை பூசாரி பாரத் வியாஸ், ''கடவுள் ராமரின் நகரத்தில் பாலியல் தொழிலாளர்கள் கூடுவது நல்ல செய்தி அல்ல. இந்த இடத்தில் பக்தர்கள் வந்து தங்களின் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர். மொராரி பாபுவின் இந்தச் செயலை நாங்கள் கடுமையான எதிர்க்கிறோம்'' என்றார்.

சர்ச்சைகளுக்குப் பதிலளித்த மொராரி, ''துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் பாலியல் தொழிலாளர்கள் பற்றி எழுதியுள்ளார். சமூகத்தின் பின் தங்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளேன். ராமரின் வாழ்க்கையே அதை அடிப்படையாகக் கொண்டதுதான்'' என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "5 ஆண்டு குடியிருந்தால் பட்டா"

பட மூலாதாரம், Twitter

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.

அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஊரக பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர்: "சர்தார் சிலையை பார்க்க ஹெலிகாப்டர் சேவை"

பட மூலாதாரம், STATUEOFUNITY.IN

சர்தார் படேலின் சிலையை பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 10 நிமிட பயணத்துக்கு 2,900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள, கெவாடியா என்ற இடத்தில், நாட்டின் முதல் துணை பிரதமர், சர்தார் படேலின், பிரமாண்ட சிலை திறக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு, 'ஒற்றுமையின் சிலை' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிலையை, ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்கும் சேவை, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 நிமிட சேவைக்கு, 2,900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெல்போர்ன் டெஸ்ட் - முரளி விஜய், கே.எல். ராகுல் நீக்கம் - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

26-ஆம் தேதியன்று மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இருந்து தொடக்கவீரர்கள் முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

அவா்களுக்கு பதிலாக மாயங் அகா்வால், ஹனுமா விஹாரி ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளா் ரவீந்திர ஜடேஜாவுக்கும், ரோகித் ஷா்மாவுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுவதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: