கர்நாடகாவில் 15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது பாட்டி மரணம்

சுலகிட்டி நரசம்மா

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

சுலகிட்டி நரசம்மா

நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தினத்தந்தி: "15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்த 98 வயது பாட்டி மரணம்"

சமூக பணியாளர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவரான சுலகிட்டி நரசம்மா நேற்று காலமானதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"கர்நாடகாவின் பெங்களூருவில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுலகிட்டி நரசம்மா. இவர் தனது கிராம பகுதியில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்துள்ளார்.

இவருக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் 20ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

கடந்த 1920ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். பெண்களுக்கு கர்ப்பகால சேவைகளை இலவச அடிப்படையில் செய்து வந்துள்ளார். இவரது சேவைக்காக கடந்த 2014ம் ஆண்டு தும்கூர் பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிலையில் உடல் நலக் குறைவால் அவர் நேற்று காலமானார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து: "அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயர் மாற்றம்"

பட மூலாதாரம், Getty Images

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உள்ள 3 சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அந்தமான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய பெயரைத் தீவுகளுக்கு சூட்ட உள்ளார்.

இதன்படி, அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஆகிவை பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளன. ரோஸ் தீவு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவு சாஹேத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவு சுவராஜ் தீவு என்றும் மாற்றப்பட உள்ளது.

2-ம் உலகப்போரின்போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றி அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம்செய்து நேதாஜி சந்திரபோஷ் கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி போர்ட் பிளையரில் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். அதுமட்டுல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பியுள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர்: "முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.3.31 லட்சம் கோடி"

பட மூலாதாரம், MANPREET ROMANA

படக்குறிப்பு,

முகேஷ் அம்பானி

இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 11வது ஆண்டாக முதலிடத்தில் நீடிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

"போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நடப்பு ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் விப்ரோ அதிபர் அசிம்பிரேம்ஜி (ஒரு லட்சத்து 47 கோடி ரூபாய்) இரண்டாவது இடத்தையும், ஆர்சலர் மிட்டல் தலைவர், லட்சுமி மிட்டல் (1 லட்சத்து 28 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதத்தை மறந்த காவலர்கள்; தப்பிச்சென்ற கொள்ளையர்கள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியின் சைனிக் பார்ம்ஸ் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒரு மூத்த தம்பதி மற்றும் அவர்களின் பணியாட்கள் இருவரை 75 நிமிடங்கள் வீட்டில் அடைத்து வைத்திருந்த கொள்ளையர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் ஆயுதங்களை மறந்துவிட்டு வந்ததால் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்துடன் தப்பிவிட்டனர்.

கொள்ளையர்கள் நால்வரும் மும்முரமாக பணத்தைத் திருடிக்கொண்டிருந்த சமயத்தில் பணியாட்களில் ஒருவர் தப்பிச்சென்று அதே பகுதியில் வெறும் 150 மீட்டர் தொலைவில் இருந்த நெப் சராய் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அப்போது வந்த காவலர்கள் இருவர் தாங்கள் ஆயுதத்தை மறந்து வைத்துவிட்டு வந்துள்ளதாகவும், ஆயுதம் மற்றும் அதிகமான காவலர்களுடன் சற்று நேரத்தில் திரும்பி வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் மீண்டும் வருவதற்குள் நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணத்துடன் நான்கு கொள்ளையர்களும் தப்பிவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: