பாஜகவிடம் இருந்து சாமியார் பாபா ராம்தேவ் விலக நினைப்பது ஏன்?

  • இம்ரான் குரேஷி
  • பிபிசிக்காக
பாபா ராம்தேவ் பாஜகவிலிருந்து விலகியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Hindustan Times

யோகா குரு பாபா ராம்தேவ் ஆறு மாதங்களுக்கு முன்பு கொண்டிருந்த தனது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி, நடுவுநிலை வகிப்பது என்ற அவரது தற்போதைய முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், "தற்போது நாட்டில் அரசியல் களம் மிகவும் சிக்கலானதாக உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும், சூழ்நிலை மிகவும் சுவாரஸ்யமாகவும், கடுமையான போட்டியுடனும் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.

"தற்போதைக்கு நான் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமின்றி, நான் எந்த தனிப்பட்ட நபரையோ அல்லது கட்சியையோ ஆதரிக்கவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி கடந்த சில மாதங்கள் வரை பாஜகவுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோதிக்காக தீவிர பிரச்சாரமும், பாராட்டும் தெரிவித்து வந்த பாபா ராம்தேவின் இந்த நிலைப்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது நான்காண்டுகால ஆட்சியை நிறைவு செய்தபோது கூட பாபா ராம்தேவ் அக்கட்சியை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Hindustan Times

"பிரதமரின் எண்ணமும், அவரது தலைமை நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று அவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாபா ராம்தேவிடம் அமித் ஷா ஆதரவு கோரிய பிறகு இதுபோன்ற மாற்று நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமித் ஷா, "நான் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதற்காக இங்கு வந்துளேன். நான் சொன்னது அனைத்தையும் அவர் பொறுமையாக கேட்டார்," என்று கூறினார்.

எங்களுக்கு பாபா ராம்தேவின் ஆதரவு கிடைத்தால், அவரது கோடிக்கணக்கான ஆதரவர்களை எங்களால் அடைய முடியும். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது எங்களுடன் பயணித்தவர்களின் ஆதரவை நாங்கள் மீண்டும் எதிர்நோக்கியுள்ளோம்" என்று அமித் ஷா மேலும் கூறியிருந்தார்.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இந்தி பெரும்பான்மையாகப் பேசப்படும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்ததே கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் நாட்டின் அரசியலில் நடந்த மிகப் பெரிய மாற்றமாகும்.

பாஜகவின் இந்த சமீபத்திய தோல்வியின் காரணமாகத்தான் பாபா ராம்தேவ் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times

"சாமியார் அல்லது பாபா என்பனவற்றை கடந்து தொழிலதிபர் என்ற நிலையை நோக்கி ராம்தேவ் சென்றுகொண்டிருக்கிறார். அதாவது, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் தனது நிறுவனத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறார்" என்று பிபிசியிடம் பேசிய மூத்த அரசியல் விமர்சகரான அனிகேந்திரநாத் சென் கூறினார்.

"கடந்த மக்களவை தேர்தலில் பாஜக அதிகளவிலான தொகுதிகளை கொண்டிருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி தோல்வியடையும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்."

"2014ஆம் ஆண்டு கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து ராம்தேவ் மாறியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அன்னா ஹசாரேவின் தீவிர ஆதரவாளராக இருந்த ராம்தேவ், அங்கிருந்து விலகி பாஜகவின் ஆதரவாளரானார். தற்போது பாஜகவின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி மோதிக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: