இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு, 17 இடங்களில் சோதனை, 10 பேர் கைது

தேசிய புலனாய்வு முகமை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெடிகுண்டு செய்து வந்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள சீலம்பூர், ஜாஃபராபாத் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதைப்போலவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்ரோஹாவில் 6 இடங்களிலும், லக்ளௌவில் 2 இடங்களிலும், ஹர்பூரில் 2 இடங்களிலும், மீரட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் தில்லியில் ஐந்து பேரும், உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் தொடர்புகளோடு செயல்பட்டு வந்ததாகவும் டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அமைப்புக்கு பணம் உதவி செய்த அம்ஹோராவைச் சேர்ந்த மத போதகர் முஃப்தி சுஹைல் என்பவர் இணையத்தின் மூலம் வெளிநாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நபரோடு தொடர்பில் இருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது.

இவர் வாட்சாப் மற்றும் டெலிகிராம் செயலிகளின் உதவியோடு வெளிநாட்டுத் தொடர்புகளுடன் உரையாடி வந்துள்ளார் என்றும், சில மாதங்களுக்கு முன்புதான் இந்த குழு செயல்படத் தொடங்கியதாகவும் இந்த முகமை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட 10 பேர் அல்லாமல், மேலும் 6 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், கைது செய்யப்பட்டோர் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், வெல்டிங் கடை உரிமையாளர், பொறியாளர், ஆட்டோ டிரைவர், பட்டப்படிப்பு மாணவர் போன்ற மாறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்றும் தேசியப் புலனாய்வு முகமை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: