எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி மற்றும் பிற செய்திகள்

எச்.ஐ.வி

பட மூலாதாரம், Science Photo Library

எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, கர்ப்பத்தில் உள்ள குழந்தையை காப்பாற்றத் தேவையான சிகிச்சைகள் எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Hindustan Times / Getty images

பாஜகவிடம் இருந்து விலகும் சாமியார்

யோகா குரு பாபா ராம்தேவ் ஆறு மாதங்களுக்கு முன்பு கொண்டிருந்த தனது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி, நடுவுநிலை வகிப்பது என்ற அவரது தற்போதைய முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், "தற்போது நாட்டில் அரசியல் களம் மிகவும் சிக்கலானதாக உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும், சூழ்நிலை மிகவும் சுவாரஸ்யமாகவும், கடுமையான போட்டியுடனும் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.

பாஜகவின் சமீபத்திய தோல்வியின் காரணமாகத்தான் பாபா ராம்தேவ் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகள்

"பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும்."

நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும் கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஈரச் செயல்முறை மூலம் தொலைதூர கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு

இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP

இராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம்

இராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் திடீரென ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நாளன்று பின்னிரவில், அவர்கள் இருவரும் முன்னறிவிப்பு இல்லாமல் இராக் சென்றுள்ளனர்.

அவர்களின் சேவை, வெற்றி மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லவே அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும் நோக்கம் எதுவும் தற்போது இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: