கின்னஸ் சாதனை படைத்த 16 வயது குஜராத் சிறுமி - தலை முடியின் நீளம் 5.7 அடி

தலை முடியின் நீளம் 5.7 அடி: கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

பட மூலாதாரம், TWITTER

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 16 வயது சிறுமியின் சாதனை

குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம் வழங்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இவர் சிறு வயது முதலே தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பலனாக தற்போது அவருக்கு 5.7 அடிக்கு தலை முடி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''என்னுடைய 6 வயதில் நான் 'பாப் கட்' செய்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றோரிடம் இனி நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன். தலை முடியை நீளமாக வளர்க்க விரும்பினேன். அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன்'' என கூறினார்.

மேலும் அவர், ''நீளமான தலை முடியை பராமரிப்பது கஷ்டம் என கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நான் அதை உணர்ந்ததில்லை. என் தாய் மற்றும் சகோதரர் எனது தலைமுடியினை பராமரிக்க பெரிதும் உதவினர். வாரம் ஒருமுறை எனது தலைமுடியினை அலசுவேன், சுமார் ஒரு மணி நேரம் உலர விடுவேன், பின்னர் கூந்தலை பின்னி முடிய குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும்'' என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினமலர் - சிறுமி பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, தனியார் பள்ளி வேன் ஓட்டுநர், ஈரோட்டில் கைது செய்யப்பட்டதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஈரோடு மாவட்டம், அரச்சலுாரை சேர்ந்த, 13 வயது சிறுமி ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், வேன் ஓட்டுநராக, விக்னேஷ், 20, என்பவன் பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி, ஐந்து மாத குழந்தை உள்ளது.

தனக்கு திருமணமானதை மறைத்து, சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, கடந்த 22ஆம் தேதி கடத்திச் சென்ற அவர், 18 - 22 வயதுடைய தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

அரச்சலுார் போலீசில், சிறுமி காணாமல் போனது குறித்து, அவரது பெற்றோர் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில், சிறுமியை மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவல்படி, போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு, விக்னேஷை கைது செய்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுமியை கடத்தியது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த, நெசவு தொழிலாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவர் சிறுவர் என்பதால், கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக" அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து - 15 ஆண்டுகளுக்கு பிறகு ம.பி அமைச்சரவையில் முஸ்லிம்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

ஆரிப் அகியூல்

மத்திய பிரதேசத்தில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

நீண்ட இழுபறிக்கு பின் 28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். ஆரிப் அகியூல் என்ற முஸ்லிம் ஒருவரும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். போபால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தோழிக்காக ஆணாக மாறிய பெண்

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் உள்ள பெறுவன்னாமுழி எனும் இடத்தைச் சேர்ந்த 23 வயதாகும் அர்ச்சனா ராஜ் எனும் பெண் தன் நெருங்கிய தோழியாக இருந்த 22 வயதுப் பெண், "நீ மட்டும் ஆணாக இருந்தால் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்" என்று கூறியதை நம்பி, கடந்த அக்டோபர் மாதம் ஆணாக மாறுவதற்காக பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தீபு தர்ஷன் என்று பெயர் மாற்றிக்கொண்டுள்ள அவர், தனது தோழி தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண் தாம் நட்பாக மட்டுமே பழகியதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: