அமேசான், பிளிப்கார்ட்டிற்கு மத்திய அரசு செக்: இனி தள்ளுபடியே கிடைக்காதா?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
அமேசான், பிளிப்கார்ட்டிற்கு மத்திய அரசு செக்: இனி தள்ளுபடியே கிடைக்காதா?

பட மூலாதாரம், Getty Images

அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்களின் கவர்ந்தெழுக்கும் வணிக முறையை தடை செய்யும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இணையதள வர்த்தக நிறுவனங்கள், அதாவது அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தாங்களோ அல்லது தங்களது துணை நிறுவனங்களோ பங்கு வைத்துள்ள விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு மட்டும் பாரபட்சத்துடன் கேஷ்-பேக் அளிக்க முடியாது.

ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணையதள வணிக நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பிரத்யேகமாக நடத்தும் விற்பனைகளை மேற்கொள்வதையும் இந்த உத்தரவு தடை செய்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துமா? இந்த உத்தரவுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சில்லறை வர்த்தகர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா? என்று அலசுகிறது இந்த கட்டுரை.

எப்படி செயல்படுகிறது இணையதள வர்த்தக நிறுவனங்கள்?

பட மூலாதாரம், Julie Clopper

உலகளவில் பார்க்கும்போது இணையதள வணிக நிறுவனங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவது வகையை பொறுத்தவரை, குறிப்பிட்ட இணையதளத்தை நடத்தும் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் பொருளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும். உதாரணமாக, சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருட்களை தனது பெயரில், தனது இணையதளத்தில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் இந்த முறையில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு அனுமதியில்லை.

இரண்டாவது வகையில், பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை மட்டும் இணையதள வர்த்தக நிறுவனங்கள் செய்கின்றன. இந்த வகை வர்த்தகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகையை முதலாக கொண்டே அமேசான் செயல்படுகிறது. இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட பிளிப்கார்டை அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடந்த ஆகஸ்டு மாதம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருட்களின் விலை உயருமா?

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை மேலும் நெறிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் கேட்டபோது, "அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தான் முதலீடு/ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட விற்பனையாளரை மையப்படுத்தி தள்ளுபடிகளையும், பிரத்யேக விற்பனையையும் மேற்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் வணிக முறைக்கு இந்த புதிய விதிமுறைகள் முடிவு கட்டும்" என்று அவர் கூறினார்.

இனி அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் தனது மொத்த விற்பனையில் 25 சதவீதத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கினால் அந்த விற்பனையாளரை குறிப்பிட்ட நிறுவனம் கட்டுப்படுத்துவதாக கருதப்படுவதுடன் அந்த விற்பனையாளர் தொடர்ந்து இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

நாகப்பன்

"இணையதள வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளரின் பொருட்களை தங்களின் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்வதற்கு வற்புறுத்த முடியாது. மேலும், இதுபோன்ற இணையதளங்களில் வாங்கப்படும் பொருட்களின் உத்தரவாதத்திற்கு விற்பனையாளரே முழு பொறுப்பாகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

மேற்கண்ட விதிமுறைகளை இணையதள வர்த்தக நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதற்குரிய சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர், ஓப்போ, ரியல்மீ போன்ற கைபேசிகள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் விற்கும் பொருட்களுக்கு மட்டும் கேஷ்-பேக் வழங்குவது பாரபட்சத்துடன் செயல்படுவதாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி தள்ளுபடி விலையோடு, கேஷ்-பேக் வழங்குவதும் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இணையதள வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படுவதை நிறுத்தும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியின் அளவு குறைந்து பொருட்களின் விற்பனை விலை உயர்வதுடன், எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக் என்ற கவர்ச்சி விளம்பரங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

சில்லறை வணிகர்களுக்கு பலனளிக்குமா?

அமெரிக்காவை சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு வணிகர் சங்கங்கள் கூறி வருவதுடன், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, "இந்தியாவில் இணையதள வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதன் விளைவாக ஏற்கனவே 27 சதவீத வியாபாரத்தை இழந்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

"தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமுள்ள வணிகர்கள் இணையதள வர்த்தகத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக மட்டும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு அரசின் நெறிமுறைகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: