நரேந்திர மோதி - அமித் ஷா தலைமைக்கு சவால்விடும் பாஜகவின் சிறு பங்காளிகள்

  • சேகர் ஐயர்
  • பிபிசிக்காக
நரேந்திர மோதி - அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

பாரதிய ஜனதா கட்சி தங்கள் கூட்டாளிகளை இரு வகையில் மட்டுமே பார்த்திருந்து. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களைக் கொண்டு வருபவர்கள். இன்னொன்று, இந்திய அரசியலின் மையமாக பாஜகவை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துபவர்கள்.

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று முக்கிய இந்தி பேசும் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபின், தன் கூட்டணிக் கட்சிகளை பாஜக நடத்தும் விதம் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர், தங்களை பழைய நிலையை மாற்றி கூட்டணி யுகத்துக்கு தயாராகி வருகின்றனர்.

என்ன ஆனாலும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கவே வாய்ப்பில்லை என்று இருந்த அவர்கள்,இருந்த அவர்கள், கூட்டணிக் கட்சிகள் மீது அவர்கள் மென்மையான அணுகுமுறையைக் கையாளவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த தொடர் வெற்றிகள் மோதியை மையமாக வைத்து இயங்கும் அரசியல் நடவடிக்கைகள் போதும் என பாஜகவை எண்ண வைத்தன. கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி அப்போது பாஜகவுக்கு பெரும் பொருட்டாக இல்லை.

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வேறு வழியில்லாத வகையில் அதிகமான மக்களவைத் தொகுதிகளைக் கேட்கிறார்கள் என்பதற்காக கூட்டணிக் கட்சிகளை இழப்பது பாஜகவுக்கு மேலும் பலவீனமாகவே அமையும் என்பதை மோதி - ஷா கூட்டணி உணர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரதமர் மோதியுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே

மாநில வாரியாக காங்கிரஸ் கூட்டணி அமைத்து வரும் சூழலில், பாஜவுக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மட்டுமல்லாது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியும் தேவை.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தனியாகவே தேர்தலைச் சிந்திப்போம் என்று கூறினாலும், அமித் ஷா பாஜக - சிவசேனா கூட்டணி ஒன்றாகவே தேர்தலைச் சந்திக்கும் என்றே கூறுவார்.

பீஹாரை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் வலிமை, அக்கட்சித் தலைவர்கள் கூறுவதைவிட களத்தில் குறைவாக இருந்தாலும், அக்கட்சியின் பெரிய கோரிக்கைகளுக்கு பாஜக செவிமடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியதைப் போல சிவசேனாவும் பிரிந்து செல்வதை பாஜக விரும்பாது.

பீஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் 17 தொகுதிகள் வீதம் தொகுதிப் பங்கீடு செய்துள்ள போதிலும், லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களை உறுப்பினர் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

2014இல் பீஹாரில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வென்றது.நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி அமைத்தபின் இப்போது 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அங்கு கூட்டாளியாக இருந்த உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இருப்பதாய் சௌகரியமாகக் கருதுகிறது.

கடுமையாக நடந்துகொள்ளாதவரை மோதி - அமித் ஷா ஆகியோரிடம் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாஜகவின் கூட்டணைக் கட்சிகள் உணர்ந்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் சிறிய கூட்டாளியாக இருக்கும் அப்னா தள் கட்சி பாஜக தங்களுக்கு போதிய மரியாதை கிடைக்கவில்லை என கருதுகிறது. அக்கட்சியின் தலைவர் ஆஷிஷ் படேலின் மனைவி அனுப்பிரியா படேல் மத்திய இணையமைச்சராக உள்ளார்.

சுகாதார மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சராக உள்ள அவர் சமீபத்தில் நடந்த சில மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழாவுக்குத் தாம் அழைக்கப்படவில்லை என்றார். "சிறிய கட்சிகளான நாங்களும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்க்கிறோம்," என்கிறார் ஆஷிஷ் படேல்.

2014இல் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி இப்போது பாஜகவிடம் நான்கு தொகுதிகளைக் கேட்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசில் அங்கம் வகிக்கும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மத்தியில் மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசுகளை விமர்சித்து வருகிறார். அவர் உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பாஜகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சிவசேனா கட்சிதான். தங்கள் தேர்தல் சின்னமான புலியைப் போலவே உறுமுகிறது சிவசேனா. அதன் நோக்கம் அதிக மக்களவை இடங்களைப் பெறுவது.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்தால் சிவசேனாவுக்கு தங்களுடன் கூட்டணி அமைப்பதைவிட வேறு வழி இல்லை என்று பாஜக நினைக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக சிவசேனா இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றனர் பாஜவினர் சிலர்.

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

லாலு பிரசாத் யாத உடனான கூட்டணியிலிருந்து விலகி 2017இல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் இணைத்தார் நிதிஷ் குமார்

ஆனால், சிவசேனாவின் கணக்கு வேறு. 2019 நவம்பரில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது சில தரப்பினரிடையே பாஜகவுக்கு எதிராக உள்ள மனநிலையில் இருந்து தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்ள அக்கட்சி விரும்புகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஒருவேளை முடிவு செய்யலாம்.

கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்துக்கு செவிமடுக்கும் நிலை வந்தால் பாஜக அமித் ஷாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அருண் ஜேட்லி போன்றவர்கள் இன்னும் பெரும் பங்காற்றுவார்கள்.

அருண் ஜேட்லி ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாருடன் பணியாற்றியுள்ளார். அமித் ஷாவும் நிதிஷ் குமாருடன் தனது உறவை மேம்படுத்தி வருகிறார்.

ஒருவேளை கடந்த தேர்தலைவிட குறைவான இடங்களில் போட்டியிட்டு, தங்கள் கூட்டணிக் கட்சிகள், தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரம் மிக்கவையாக உருவெடுத்தாலும் பாஜகவும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: