பிளாஸ்டிக் மீதான போர்: தமிழகத்தில் மீண்டும் களமிறங்கும் துணிப்பை

பிளாஸ்டிக் மீதான போர்: தமிழகத்தில் மீண்டும் களமிறங்கும் துணிப்பை

(2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? யாரைப் பாதிக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்று இத்தடையின் பல பக்கங்களையும் அலசும் வகையில் ஒரு தொடரை தயாரிக்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரசாந்த். இத்தொடரின் அடுத்த பகுதி இது.)

துணிப்பைகளுக்கும், மஞ்சள் பைகளுக்கும் பேர் போன தமிழகம் மீண்டும் துணிப்பைகளை கையில் எடுக்கும் காலகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வரும் தி யெல்லோவ் பேக்(The Yellow Bag) நிறுவனம் வெவ்வேறு விதமான துணிப்பைகளை உற்பத்தி செய்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.

படக்குறிப்பு,

துணிப்பைகள்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நடைமுறையை மாற்றவும், துணிப்பையை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லவும் தொடர்ந்து செயலாற்றி வருவதாக கூறுகிறார் இதன் நிறுவனர் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.

படக்குறிப்பு,

கிருஷ்ணன் சுப்பிரமணியன்

"நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகளை கூற முடியாது. ஏனெனில், நெகிழிகளை நாம் பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் துணிப்பைகளை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். எனவே, தூக்கி எறியும் கலாசாரத்துக்கு மாற்றானது துணிப்பை என்றே கூற வேண்டும்" என்கிறார் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.

துணிப்பைகளுக்கு இயற்கை முறையில் அச்சிடும் பணியும் இங்கு நடைபெறுகிறது.

படக்குறிப்பு,

துணிப்பைகளை தயாரிக்கும் பணியில் பெண்கள்

பெரும்பாலும் பெண்கள் மட்டுமே இங்கு பணியாற்றுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப்பைகளை தயாரிப்பதோடு தங்களின் வாழ்வாதாரமும் இதனால் உயர்வதாக கூறுகிறார் இங்கு பணியாற்றும் செல்வி.

"இங்கு பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறோம். சுதந்திரமாகவும் மன அமைதியுடனும் பணியாற்ற முடிகிறது. மேலும் அன்றாட தேவைகளுக்கான வருமானமும் கிடைக்கிறது. முக்கியமாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை தயாரிப்பதால் எதிர்கால தலைமுறைக்கு இது பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் செல்வி.

படக்குறிப்பு,

துணிப்பைகள் தயாரிக்கும் பணி

சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது மதுரை மாநகரில் வெவ்வேறு இடங்களில் சுய உதவிக் குழுக்கள் மூலம் துணிப்பைகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இதனால், உள்ளூரில் வசிக்கும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், துணிப்பை தயாரிக்கும் தொழில் தமிழகமெங்கும் விரிவடையும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.

மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: