எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் நிலை என்ன? - விரிவான தகவல்

பரிசோதனை செய்யாத ரத்தத்தால் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: குழந்தைக்கு சிகிச்சை தொடக்கம்

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் - நிலை என்ன?

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் ரத்த பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அவருக்கு தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக 'டீன்' சண்முகசுந்தரம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சண்முகசுந்தரம். "பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சாந்தி, டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் 9 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிரசவத்துக்கு பின்னர்தான், அவரது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து உறுதியாக கூற முடியும். ஆனால் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாத வகையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே எச்.ஐ.வி. தொற்றிருந்த சில கர்ப்பிணிகளுக்கு, சரியான முறையில் சிகிச்சை அளித்து, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிக்காத வகையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தைக்கும் நூற்றுக்கு 99 சதவீதம் எச்.ஐ.வி. தொற்று வர வாய்ப்பு இருக்காத வகையில் மிகவும் கவனத்துடன் சிகிச்சை அளித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செய்த ரத்த பரிசோதனையிலும் எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. மற்றும் மஞ்சள்காமாலை நோய் ஆகியவை பிரசவத்தின் போதுதான் குழந்தையை பாதிக்கும். எனவே அந்த நோய் குழந்தையை பாதிக்காத வகையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உள்ளோம்.

குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை நோய் தாக்காத வண்ணம் அதற்குரிய தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள உள்ளோம். கடந்த 8 நாட்களுக்கு முன்பு அந்த கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தொடர் சிகிச்சையினால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

சாதாரண மனிதர்களுக்கு உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவை போன்று, அந்த கர்ப்பிணிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை முறைகளை தொடங்கி விட்டோம். அவர் இனி தொடர்ந்து அந்த சிகிச்சையை பெற வேண்டும்." என்று கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பட மூலாதாரம், Hindustan Times

தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

மேலும், தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்கிறது அந்நாளிதழின் மற்றொரு செய்தி.

"சென்னை ஐகோர்ட்டில் கிறிஸ்துமஸ் விடுமுறை கால கோர்ட்டு நேற்று செயல்பட்டது.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது வக்கீல்கள் சிலர் ஆஜராகி, 'அரசு டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியமாக செயல்பட்டதால், சாத்தூரை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற ஜனவரி 3-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்' என்ற உத்தரவிட்டனர்.

அப்போது கோர்ட்டில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார்." என்றூ அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'ஒழுக்கப் பண்பு, உள்கட்டமைப்பு என அசத்தும் அரசுப் பள்ளி'

ஒழுக்கப் பண்புகளில் முன்மாதிரியாகச் செயல்பட்டதால் முன்மாதிரி பள்ளி அந்தஸ்தை உத்தரமேரூர் பெருநகர் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், தினமணி

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 32 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, கல்வி கற்பிக்கும் தரம், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாதிரிப் பள்ளிகளாக உருவாக்க தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, 32 மாவட்டங்களிலும் 32 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூர் வட்டத்துக்குட்பட்ட பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வாகியுள்ளது. அதன்படி, உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான மாதிரிப்பள்ளியாக மாற்றப்படவுள்ளது. மேலும், வரும் காலங்களில் பெருநகர் உள்ளிட்ட அனைத்து மாதிரிப் பள்ளிகளிலும் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயில வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

காணொளிக் குறிப்பு,

தமிழகத்தில் மீண்டும் களமிறங்கும் துணிப்பை

இந்து தமிழ்: 'பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்'

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

"பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது, மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். தொழிற்சங்கங்களின் வேலைநிறுத் தம் போன்ற காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது.

இந்த ஆண்டில் அரசு பேருந்து களில் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான முன் னேற்பாடுகளை செய்து வருகி றோம். அதேபோல், பொங்கல் பண் டிகை முடிந்து திரும்புவதற்கும் போதிய அளவில் சிறப்பு பேருந் துகளை விட ஏற்பாடுகள் செய்துள்ளோம். வரும் 2-ம் தேதி மற்றொரு ஆய்வு கூட்டம் இருக்கிறது. அதில், முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும். வரும் 9-ம் தேதி டிக்கெட் முன்பதிவுக்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும்." என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - விவசாயிகளுக்கு புதிய திட்டம்

மூன்று இந்தி பேசும் மாநிலங்களில் உண்டான் தேர்தல் தோல்விக்கு பிறகு வாக்காளர்களை கவரும் விவகாரம் ஒன்றைப் பற்றி இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இது வேளாண் கடன் தள்ளுபடியாக இல்லாமல், விவசாயிகளுக்கு சாதகமான வேறொரு திட்டமாக இருக்கலாம் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அவற்றின் சந்தை விலை குறைவாக இருந்தால், மீதிப்பணத்தை அரசே வழங்கும் திட்டம் ஒன்றை பாஜக மத்தியப் பிரதேசத்தில் செயல்படுத்தியது.

அந்தத் திட்டம் நாடு முழுமைக்கும் அமலாக்கப்படலாம் என்று தகவல் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: