நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்த ஜடாஃபியா : பாஜகவின் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது எப்படி?
- பார்த் பாண்ட்யா
- பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், KALPIT BHACHECH
கோர்தன் ஜடாஃபியா
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கோர்தன் ஜடாஃபியா, துஷ்யந்த் கெளதம், நரோத்தம் மிஷ்ரா என உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மூவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்ப்பவர் கோர்தன் ஜடாஃபியா.
குஜராத் மாநிலத்தில் வன்முறை கலவரம் நடைபெற்ற 2002ஆம் ஆண்டில் மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோர்தன் ஜடாஃபியா. பாஜகவில் இருந்து விலகிய அவர், தனிக்கட்சி தொடங்கினார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியபிறகு, அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு எதிராக பல கருத்துக்களை அவர் வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட கோர்தன் ஜடாஃபியா, தற்போது நரேந்திர மோதி பிரதமராக இருக்கும் சமயத்தில் பொதுத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், KALPIT BHACHECH
விஷ்வ ஹிந்து பரிஷதின் செயற்பாட்டாளர் கோர்தன் ஜடாஃபியா
விஷ்வ ஹிந்து பரிஷதின் செயற்பாட்டாளராக கோர்தன் ஜடாஃபியாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜகவில் இணைவதற்கு முன்பு ஏறக்குறைய 15 ஆண்டுகள் அவர் வி.எச்.பியுடன் இணைந்திருந்தார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷாவின் கருத்துப்படி, "வி.எச்.பியுடன் இணைந்து செயல்பட்ட கோர்தன் ஜடாஃபியா, பிரவீண் தொஹாடியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்."
நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற கோர்தன் ஜடாஃபியா, வைரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏவாக குஜராத் சட்டமன்றத்தில் 1995ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார் ஜடாஃபியா.
பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP/GETTY IMAGES
நரேந்திர மோதி அரசில் இருந்து வெளியேறிய கோர்தன் ஜடாஃபியா
மாநில உள்துறை அமைச்சராக இருந்த கோர்தன் ஜடாஃபியாவுக்கு 2002இல் குஜராத் வன்முறையில் பங்கு இருப்பது தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்தன.
அந்த வன்முறைச் சம்பவங்களை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, கோர்தன் ஜடாஃபியாவின் பங்கு பற்றியும் விசாரணையை மேற்கொண்டது. ஜடாஃபியாவுக்கு அதில் பங்கு இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவர் பதவி விலக நேர்ந்தது.
மாநில அமைச்சரவையில் இருந்து கோர்தன் ஜடாஃபியா விலகியதும், அந்த இடத்தில் அமித் ஷா நியமிக்கப்பட்டார்.
மீண்டும் அமைச்சரவையில் இணைய கோர்தன் ஜடாஃபியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன்பிறகு, நரேந்திர மோதியின் எதிரிகளின் பட்டியலில் கோர்தன் ஜடாஃபியாவும் இணைந்தார்.
பட மூலாதாரம், GETTY IMAGES
கூட்டத்தில் அழுத கோர்தன் ஜடாஃபியா
"நரேந்திர மோதிக்கும் கோர்தன் ஜடாஃபியாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்தபோது, மோதி மீது ஜடாஃபியா பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் மோதி தனக்கு எதிராக சதி செய்வதாகவும் அச்சம் தெரிவித்தார்" என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் ஷா.
2005 சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது கோர்தன் ஜடாஃபியா அழுதுவிட்டார்.
பிரவீண் தொஹாடியாவைத் தவிர குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் கேஷுபாய் படேலுடனும் கோர்தன் ஜடாஃபியா நெருக்கமாக இருந்தார்.
பாஜகவிலிருந்து விலகியபிறகு, மஹாகுஜராத் ஜனதா கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் கோர்தன் ஜடாஃபியா. பிறகு கேஷுப்பாய் படேலின் குஜராத் பரிவர்தன் கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார் ஜடாஃபியா.
"எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கும் மேலானவன் தான் என்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிறார் நரேந்திர மோதி" என்று 2007ஆம் ஆண்டுவாக்கில் மோதி மீது விமர்சனங்களை முன்வைத்தார் கோர்தன் ஜடாஃபியா.
பட மூலாதாரம், Getty Images
பட்டிதார் சமூகத்தினரை ஒன்றிணைக்க முயன்றாரா ஜடாஃபியா?
பட்டிதார் சமூகத்தினரின் போராட்டத்தின் பின்னணியில் கோர்தன் ஜடாஃபியா இருக்கிறார் என்று பரவலாக கருதப்பட்டது.
இந்த கருத்துக்கு வெளிப்படையான சாட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், ஹர்திக் படேலை வலுவான தலைவராக முன்நிறுத்தி அவருக்கு ஆதரவு திரட்டியதில் ஜடாஃபியாவின் பங்கு முக்கியமானது.
சௌராஷ்டிர லுவா படேல் சமூகத்தின் பல அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ள ஜடாஃபியா, அந்த சமூகத்தினரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.
பட மூலாதாரம், KALPIT BHACHECH
தாய்க் கட்சிக்கு திரும்பிய கோர்தன் ஜடாஃபியா
2014இல் கேஷுபாய் மற்றும் கோர்தன் ஜடாஃபியாவின் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், தேர்தல் அரசியலில் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை.
பாஜகவுக்கு திரும்பியபிறகும் கோர்தன் ஜடாஃபியாவுக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்ட்தாகவே பரவலாக நம்பப்பட்டது.
ஆனால் 2019 பொதுத்தேர்தலில் மாநில பொறுப்பாளராக கோர்தன் ஜடாஃபியா நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.
இதற்குமுன் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
2002இல் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து கோர்தன் ஜடாஃபியா விலகியபிறகு, அந்த பதவியில் அமித் ஷா நியமிக்கப்பட்டார் என்பதும், 2014இல் அமித் ஷா வகித்த மாநில தேர்தல் பொறுப்பாளர் என்ற பொறுப்பு 2019 பொதுத்தேர்தலில் கோர்தன் ஜடாஃபியாவுக்கு வழங்கப்படுவதும் அரசியலில் எப்போதும், எதுவும் நடக்கலாம் என்பதற்கான சாட்சி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
குஜராத் தேர்தல்: "இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை"
வெறுமையை கொண்டுள்ள எதிர்கட்சியை எதிரே வைத்துக்கொண்டு, ஊடகங்களுடன் உள்கூட்டுகள் கொண்டு, பெரும்பன்மை கொண்ட ஒரு பெரிய இயந்திரம் எதில் இருந்தும் தப்பிக்கலாம் என்ற அரசியல் வெறுமை தான்.